Tuesday, October 26, 2010

மருந்தொன்று இருக்கிறது

அழுதது போதும் சமுதாயமே ஆர்த்தெழு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஒ)

23.10.2010ந்தேதி ஹிந்துப் பத்திரிக்கையில் குஜராத் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எம். ஜாப்ரே அவர்களும் மற்றும் அவர் வீட்டில் தஜ்சம் புகுந்த குல்பர்கா சொசையிட்டி உறுப்பினர்களும் எவ்வாறு கோத்ரா ரயில் தீ விபத்திற்குப் பின் கொல்லப்பட்டார்கள் என்று நேரில் பார்த்ததினை கோர்ட்டில் மறைந்த ஜாப்ரே அவர்களின் வயதான துணைவியார் ஜாக்கியா அவர்கள் காவியுடைகாலிகள் நடத்திய மனித வேட்டையினை விவரிக்கும் போது துக்கம் தாளாது பலர் முன்னிலையில் அழுது விட்டாராம். அத்துடன் அவர் மனம் விம்மி விவரிக்கும் போது தனது பக்கத்து வீட்டு கௌசாம்பியின் கர்ப்பிணி மனைவியின் வயிற்றினை கத்தியால் கீறி அந்த சிசுவினை வெளியே எடுத்து வீசி மகிழ்ந்த பினம் தின்னி கழுகுகளின் வேட்டையினை விவரித்து அழுது கண்ணீர் விட்டாராம். அவர் விவரித்தது கல் மனம் கொண்ட கயவர்களைக் கரைக்குமாவென்றால் கரைக்காதுதான் ஏனென்றால் அவர்கள் பிணம் தின்னும் கழுகுகளாயிற்றே!. பின்னென்ன மைனாரிட்டி சமூகம் அழுதுதான் புலம்பவேண்டுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் உதிக்கலாம். ஏனென்றால் இது போன்ற சோக சம்பவங்கள் உலக முஸ்லிம் சமூகத்தினை கவ்விக் கொண்டுதான் உள்ளன என்பதினை சில சம்பவங்கள் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.
கோத்ரா ரயில் சம்பவத்திற்கு பின்பு மனித வேட்டைக்கு சொக்ராபுதீன் அவர் அன்பு மனைவி கௌசர்பி அவர்களை தீவிரவாதிகள் என முத்திரையிட்டு கொன்று தீர்த்தனர். அந்த தம்பதியினர் இருவரும் முகலாப மன்னர் தன் பாச மனைவி மும்தாஜ் பேகத்திற்காக கட்டிவைத்த தாஜ்மஹால் முன்னாள் அமர்ந்து எடுத்துக் கொண்ட நினைவுப்படத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.




அவர்களின் கொலை பாதக செயல் யாரையும் சும்மா விடாது என்பதிற்கிணங்க குஜராத் முன்னாள் உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலரை சிபிஐ கைது செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் என்றாலே புனித தலம் என கருதும் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவரும் உள்ளனர். எப்படி தேர்தல் நேரத்தில் சென்னை அண்ணாசாலையிலுள்ள மக்கா மஸ்ஜித் அருகிலுள்ள கபர்ஸ்தானை முஸ்லிம்களின் புனித தலமாக சில பெயரளிலுள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவரும் வருகை தந்து பட்டாடை போர்த்துகிறார்களோ அதே போன்று தான் அஜ்மிர் தர்ஹாவையும் தேர்தல் நேரத்தில் பலரும் மறப்பதில்லை. ஆனால் அந்த தர்காவினையும் குண்டு வைத்து தகர்த்ததாக ராஜஸ்தான் மாநில ஆர்.எஸ..எஸ் தலைவர் இந்திரேஸ் குமார் பெயரும் சிறப்பு புலனாய்வு குழு கோர்ட்டில தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.. அவர் குற்றுவாளியாக சேர்க்கக்கூடவில்லை, கைது செய்யப்படவுமில்லை. அதற்குள்ளாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகத் அவர்கள் இது காங்கிரஸின் சதிவேலை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதனையே பி.ஜே.பியும் மால்கான், ஹைதாரபாத் குண்டுவெடிப்புகளில் அபினவ் பாரத் மற்றும் சமதான் சான்ஸ்தா உறுப்பினர்களான கைது செய்யப்பட்ட பெண்சாமியார் பிராக்யா சிங்கிற்கும், முன்னாள் ராணுவ கர்னல் புரோகித்துக்கும் வக்காலத்து வாங்கி கூக்குரல் எழுப்புகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிட்டு அதற்கு குரல் எழுப்பினால் மட்டும் குரல் எழுப்பும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அதன் அமைப்பு தீவிரவாத அமைப்பு அதனை தடைசெய்யவேண்டும் என கூக்குரல் எழுப்புகின்றனர் காவியுடை நண்பர்கள்.
அதனால் அத்தனை படுபாதக சம்பவங்களையும் தாங்கிக்கொண்டு அழுது புலம்பவா வேண்டும் இந்த திருநாட்டில் என்ற கேள்வி உங்கள் மனதில் எழவது நியாயமானதே!
இது போன்ற பயங்கர கொடுமைகள் உலக முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன என் பல செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. உதாரணமாக:
1) பாலஸ்தீன பகுதிகளில் ஆக்கிரமித்து அங்கே யூதர்கள் வீடுகளை கட்ட அனுமதி அளித்து அங்கேயுள்ள பாலஸ்தீன மக்களின் வீடுகளை புல்டோஸர் கொண்டு தரைமட்டமாக்கும் போது மனம் வெதும்பிய குடும்பத்துடன் சுற்றுலா வந்த அமெரிக்கர் ராக்கேல் கொரி அந்த புல்டோஸரை தடுத்து நிறுத்தும் போது தன் குழந்தைகள் கண்ணெதிரே புல்டோஸரால் நசுக்கப்பட்ட காட்சியினை ஊடகங்களில் படமாக பார்த்தபோது எந்த வாய்பேசாத மாற்றுத் திரனாளி கூட் வாய்விட்டு கதறத்தான் தூண்டுகிறது.
2) லிபியா விடுதலைக்காக போரிட்டு தூக்குமேடை ஏறிய மாவீர் உமர் முக்தாரினை நினைவூட்டும் மாவீரன் ஈராக் நாட்டின் அதிபர சதாம் ஹ_சைன் மக்கள் கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக ஐ.நா. சபையின் ஆயுத விசாரணை தலைவர் ஹன்ஸ் பிலிக்ஸ் தடுத்தும் போலியான குற்றச்சாட்டினைக் கூறி அந்த நாட்டில படையெடுத்து சதாம் ஹ_சைனையும் துடிக்கத்துடிக்க தூக்கிலேற்றி விட:டு ஆக்கிரமிப்பு படை கொன்ற அப்பாவி பொது மக்கள் மட்டும் எவ்வளவு தெரியுமா? 66081 பேர்கள். தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் வெறும் 15196 பேர்கள் தானாம். இதனை நான் சொல்லவில்லை சமீபத்தில் ‘விக்கி லீக்’ ஆதாரத்துடன் ஆக்கிரமிப்பு படை செய்த அட்டூளியங்களை தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? ‘விக்கி லீக்’கின் உரிமையாளர் ஜூலியன் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மாறுவேடத்தில் ஐரோப்பா நாடுகளில் ஒவ்வொன்றாக அலைகிறாரென்றால் ஆச்சரியமாக இல்லையா? சாதாரண ஒரு அமெரிக்கா குடிமகனுக்கே அவர்களின் வண்ட வாளங்களை எடுத்துச் சொன்ன ஜூலியனுக்கே உயிர் உத்திரவாதமில்லாதபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று உங்கள் மனதில் தோன்றலாம். இதற்கு பரிகாரம் தான் என்ன? இது போன்ற குற்ற செயல்களை விசாரிக்க சர்வதேச நீதிமன்றம் ஒன்றுள்ளது. அதுதான் செர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மில்சோவிச், தளபதி ஹார்டிவிக் போஸ்னிய முஸ்லிம்கள் மீது மனித படுகொலைகள் ஈடுபட்டனர் என்று சொல்லி விசாரணையில் ஈடுபட்டது. அபோன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக சூடான் ஜனாதிபதி முகம்மது அல் பசீர்; மீது குற்றம் சாட்டி அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் அதன் கரங்கள் மட்டும் ஈராக்கில் 66081 அப்பாவி மக்களைக் கொன்றவர்களையோ அல்லது பாலஸ்தீனர்களை மட்டுமல்லாது பஞ்சத்தால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு உதவிப்பொருட்கள் கொண்டு சென்றவர்களையும் படுகொலை செய்து அவர்கள் வீடுகளை அபகரிப்பவர்களயோ நெருங்க முடியவில்லையே அது ஏன்?
இதற்கு பரிகாரம் தான் என்ன?
இசைமுரசு நாகூர் ஹனிபா பாடியது போல ‘மருந்தொன்று இருக்கிறது’ அதுதான் நமது சமுதாய ஒற்றுமையிலே என்றால் மிகையாகாகுமா?
1) நாள்தோறும் பாகிஸ்தானிலோ, இராக்கிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ நாட்டோ படைகள் ஒருபக்கம் அட்டூழிய நடவடிக்கைகள் ஈடுபடும்போது நமது உம்மத்துக்களுக்கிடையே சியா, சன்னி என்ற உச்ச கட்ட யுத்தத்தால் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைகுப் பள்ளிக்கச் செல்லும் அப்பாவி முஸ்லிம்களும் குண்டுகளுக்கு பலியாகி இருக்கின்றனர் என்றால் பரிதாபமான செயலாக இல்லையா? ஏன் உலக பணக்கார நாடுகளான சௌதி அரேபியா மற்றும் நியூக்கிலயர் ஆயுதங்களை வைத்துள்ள ஈரான் போன்ற அரேபிய நாடுகள் ஒற்றுமைக்கு வழிகாட்டி அதே நேரத்தில் முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அத்து மீறல்களுக்கு குரல் கொடுக்க மறுக்கின்றன என்பது விநோதமாக இல்லையா? ஆனால் மிகவும் ஊழல் நிறைந்த ஆப்கான் ஜனாதிபதி கர்சாய்க்கு மட்டும் தன் பதவியினை தக்க வைத்துக் கொள்ள லட்சக்கணக்கான ஈரோ கரன்ஸிக்களை மட்டும் உதவி தன் நாட்டின் செல்வாக்கினை உயர்த்த முயற்சிப்பதேன் என்று புரியவில்லை..‘விக்கிலீக்’ வெளியிட்ட அப்பட்டமான அட்டூளியங்களுக்காவது ஓங்கி குரல் எழுப்ப வேண்டாமா? அவைகளைப் பார்த்ததும் அமெரிக்கர்களுக்கு வராத கோபம் ஈராக் அரசின் பிரதமர் மாலிக்கி அவர்களுக்கு வந்து அந்த வெளியீட்டாரைச் சாடுவதேன். அதுதான் பூனைக்குட்டி பையிலிருந்து வெளியே வந்து வண்டளாம் தண்டவாளத்தில் ஏறிய கதை என்பதால்தானே என்றால் மிகையாகுமா?
2) நம்மிடையே மதவழிபாடுகளில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு சமீபத்தில் திருவிடைச்சேரி போன்ற ரத்தக்களறி மற்றும் மீடியாக்களில் ஒருவருக்கொருவர் வசைபாடும் நிகழ்ச்சிகள் அரங்கேறவில்லையா? அதனை நண்பர் நபிநேஷனும் அமெரிக்கா நண்பர் சதக்கும் தங்களுடைய ‘இ’ மீடியாக்களில் எடுத்தியம்பிருக்கிறதே எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளாக பல இயக்கத்தலைவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாமா?
நபிநேசன் அப்படியென்ன எழுதியிருந்தார் தனது, ‘இஸ்லாமிய சமுதாயம் எங்கே செல்கிறது?’ என்ற கட்டுரையில். சகோதரர் நபிநேசன் தனது கட்டுரையில், ‘பா.ஜ..க, பஜ்ரங்தளம், விசுவ ஹிந்து பரிசத், துர்கா வாகினி, அபினவ் பாரத், இந்து முன்னணி போன்ற அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆர்.எஸ்.எஸ் சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஒன்றே குலம், ஒருவனே அல்லாஹ், ஒரு வேதம் குர்ஆன் என்று சொல்லும் நாம் மற்றும் எந்த இலக்குமில்லாமல் தடுமாறிக்கொண்டிருப்பதாக’ கூறியிருக்கிறார்.
அமெரிக்கா நாடு சாண்டிகோ நகரில் தமிழ் முஸ்லிம் அமைப்பின் உறுப்பினராகவும் கனிணி பொறியாளராகவும் பணியாற்றும் சகோதரர் சதக் அவர்கள் இலங்கையில் உள்ள ‘ஆல் சிலோன் ஜம்ளயத்துல் உலா’ சபையின் ஒற்றுமை பிரகடன நோட்டீஸை அனுப்பி அது போன்ற ஒரு ஒற்றுமை பிரகடனம் நமது வேறுபட்டு கிடக்கும் இஸ்லாமிய சமூக அமைப்பினிடையே ஏற்பட வழி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். சிலோன் பிரகடனத்தில் ‘மார்க்கத்தின் பெயரால் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது சமூகம் பிறைபட்டு சிதறி விடுமோ எனும் அச்சம் தோன்றியுள்ளது. இக்கவலைக் குறிய நிலையைக் கவனத்திற் கொண்டு சமூகத்தில் மீண்டும் சுமுக நிலையை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும் என்பதினை உணர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு அமைப்புகள் கொண்ட இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்ற ஒருங்கிணைப்பு குழு உருவாகியுள்ளது. அந்த குழுவில் எடுத்த தீர்மானங்கள் கீழ் வருமாறு:
1) இஸ்லாமிய பேரறிஞர்கள் மத்தியில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் சமூகத்தினை பிளவுபடுத்தக் கூறப்பட்டன அல்ல என்பதினையும் அவைகள் நன்மை பயக்கக்கூடியவை என்பதினையும் புரிந்து கொள்ளல்.
2) கருத்து வேறுபாடுகளில் ஒருவர் மற்றொருவரை மதித்து நடத்தல்.
3) தனது கருத்து அல்லது நிலைப்பாடு மாத்திரமே சரியென நிறுவ மனைவதினையும் ஏனையோர் மீது அதளை பலவந்தமாகத் திணிக்க எத்தனிப்பதையும் அதனை ஏற்க மறுப்பவரை எதிர்த்து நிற்பதையும் தவிர்த்தல்.
4) தான் கொண்டுள்ள அல்லது சார்ந்துள்ள கருத்துக்கு முரண்பட்ட கருத்தினரை அபிப்பிராய பேதத்துக்கப்பால் நின்று நேசித்தல்.
5) கருத்து லேறுபாடுகளை சகோதரத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பங்கம் உண்டு பண்ணும் வண்ணம் கையாளாகாதிருத்தல்.
6) இஸ்லாமிய நிறுவனங்கள், தரீக்காக்கள், தஃவா அமைப்புகள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை ஊடகங்களில் வெளியிட்டும், பொதுக்கூட்டம் போட்டு சமுதாயத்தினரிடையே கருத்து வேறுபாடுகளை ஊதி பெரதாக்குதல்.
7) இறைவனை தொழும் பள்ளிவாசலினை தங்களது கருத்து வேறுபாடுகளுக்கு அங்கீகாரம்; கிடைக்கும் இடமாக மாற்றுவதினை தவிர்த்தல்.
8) ஓலி பெருக்கியினை விளம்பரமாகவும், பிரச்சார பீரங்கிகளாகவும் கட்டுப்பாடு அற்ற செயலில் ஈடுபடல்.

நான் மேலே குறிப்பிட்ட செய்திகள் எவ்வாறு சமூதாயம் கட்டுபாடு இல்லாத நிலையில் இருப்பதினையும் அதனை மற்ற சமுதாய அமைப்புகள் போல ஒற்றுமையுடன் ஒருங்கிணைக்க ஒரு முயற்சி சிலோன் போன்று தமிழகத்திலும் தேவையே என்பதினை காட்டவில்லையா? சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரப்பத்திரிக்கையில் திருவிடைச்சேரி சம்பவத்தினை ஒரு சமூக அமைப்புத் தலைவரை சம்பந்தப்படுத்தி ஒரு கட்டுக்கதை வெளிவந்தது. அதனைப் பார்த்து மற்ற சமூக தலைவர்களில் சிலர் முகமலர்ந்ததினையும் அதனைத் தொடர்ந்து அந்த தலைவர் மீதும் அந்த அமைப்பு மீதும் பல கண்டனக் கணைகள் ‘இ’ மீடியாவில் வரத்தொடங்கின. அது போன்ற செயல்கள் சமூதாய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் நல்லதா என்று யோசிக்க வேண்டும். ஒரு அசாதாரண சம்பவம் நடந்தால் அதனை ஊதி பெரிதாக்குவது சகோதரச் செயலா என நோக்க வேண்டும். நம் சமுதாய இயக்கங்கள் வேறுபட்டுக் கிடப்பதால் நாம் பல்வேறு துக்க சம்பவங்களை சந்திக்க இயலாமல் சகோதரி ஜாக்கியா அகமதாபாத் கோர்ட்டில் விட்ட கண்ணீர் போன்று விட வேண்டியுள்ளது. நமது பொது எதிரியினை எதிர்கொள்வதினை விட்டு விட்டு சகோதரர்களுக்குள்ளே கத்தி தூக்கும் செயல் சரிதானா என யோசிக்;க வேண்டும்.
இன்றைய அவசர தேவை சமுதாய ஒற்றுமைதான். அந்த சமுதாய ஒற்றுமை இருந்தால் மட்டுமே இன்றைய சூழலில் நாம் அரசியலில் ஒரு தனியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்று பெற முடியும், சமுதாயத்தில் சகோதரத்தினை நிலைநாட்ட முடியும், ஏழை முஸ்லிம்களுக்கு சமத்துவத்தினை அளிக்க முடீயும். ஆகவே எல்லா சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு ‘சோஸியல் அவேக்கனிங் ஃபிரண்ட்’ அதாவது சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்படுத்தலாமே நமது இயக்கத் தலைவர்கள். அதற்கு தங்களுடைய மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

பொருளை இழந்தால் மீட்கலாம்

பொருளை இழந்தால் மீட்கலாம்
பதவியை இழந்தால் மீட்கலாம்
ஆனால் நம்பிக்கையை இழந்தால் மீளவே முடியாது

ஆயுளின் அற்பம்

மனிதன் உருவாகும் போதே.. அவனின் மரணமும் உறுதி செய்ய படுகிறது!
மனிதனுக்கு மட்டுமல்ல... உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இதுவே,
பொதுவான நியதி! ஆயுளின் அளவுகளில் வேண்டுமானால்... கொஞ்சம்,
‘கூட-குறைய’ன்னு இருக்கலாமேயொழிய, பிறப்பின் முடிவு இறப்பு என்றும்,
ஆக்கத்தின் முடிவு அழிவு என்றும், ஒவ்வொரு தொடக்கத்துக்கும் ஒரு முடிவு
இருக்கவே செய்கிறது.

ஒரு மனிதன்.. பிறந்த வினாடியிலிருந்து, அவனின் ஆயுள் காலம் முழுவதும்
அவனை நிழலாய் பின் தொடர்வது இரண்டு விசயங்கள்தான். ஒன்று ரிஜக்கும்
மற்றொன்று மௌத்தும். அதாவது ‘உணவும் மரணமும்!’
ஒருவனின் ரிஜக் நிறைவுறும்போது.. மௌத் அவனை தழுவச் செய்யும், அல்லது
மரணம் அவனை தீண்டும்போது.. அவனின் உணவு முடிவுற்றிருக்கும்.

’மரணத்தை வென்றவர் எவருமிலர்’ என்ற நிதர்சன உண்மையை ‘மறுப்பவரும்
எவருமிலர்’. ஆயினும்.. தன் விசயத்தில் மட்டும்.. “அது எப்போதோ...
தற்போதைக்கு இல்லை...” என்ற அலட்சியமே ஒவ்வொரு மனிதனுக்கும்.

நேரங்களின் திரட்சி, அல்லது வினாடிகளின் அடர்த்திகளையே காலம் என்கிறோம்.
அடர்த்தியின் அளவுக்கேற்ப, மணித்துளிகள், நாட்கள், வாரங்கள், வருடங்கள் என
வரைவகை படுத்துகிறோம். நடப்பாண்டு முடிந்து புதிய ஆண்டு பிறக்கையில்..
புத்தாண்டு என்ற பெயரிலும், ஒவ்வொரு வயதை கடக்கும் போதும்.. பிறந்தநாள்
என்ற பெயரிலும் காலங்களின் இழப்பை கொண்டாடி குதூகலித்து வருகிறோம்.
மாறாக... ஒவ்வொரு புத்தண்டிலும், பிறந்தநாளிலும், நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை
அல்லது ஒரு வயதை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மேலிடும்போதே
நேரத்தின் அருமையும், காலத்தின் அவசியமும் விளங்கும்.

ஒரு மனிதனின் சராசரி வயது (அதுவும், எந்த ஒரு விபத்திலோ.. நோய்நொடியிலோ
மரணிக்காத பட்சத்தில்) 70 என்று வைத்துக் கொள்வோம். அதில்.. 30 வயதான ஒரு
வாலிபனின்... மீதமுள்ள 40 வருடங்களின் எண்ணிக்கை...
நாட்களின் அடிப்படையில்... 14,600 நாட்கள்.
மணித்துளிகளின் அடிப்படையில்... 3,50,400 மணி நேரங்கள்.
நிமிடங்களின் அடிப்படையில்... 2,10,24,000 நிமிடங்கள்.
வினாடிகளின் அடிப்படையில்... 126,14,40,000 வினாடிகள் மட்டுமே!

இந்த கணக்கின் அடிப்படையில் 70 வருடத்தில் உங்களின் வயதை கழித்து..
மீதமுள்ள வருடங்களின், நேரங்களை கணக்கிட்டு பார்த்தீர்களானால்..
”ஆயுளின் அற்பம்” புரியும். நாள் ஒன்றுக்கு.. 86,400 வினாடிகள், நம் ஒவ்வொருவரையும்
கடந்துக்கொண்டிருக்கிறது.

‘என்ன களத்தூரான்.. ஏதோதோ சொல்லி பயமுறுத்துவது போல தெரியுதே’ன்னு சிலரும்
’ஏதோ புதுசா கண்டு பிடிச்சிட்ட மாதிரி பேசுறே’ன்னு சிலரும் கேட்கலாம்.
அப்படி இல்லீங்க..! நான் யாரையும் பயமுறுத்தவுமில்லை.., புதுசா எதையும்
கண்டு பிடிச்சிடவும் இல்லை. நாமெல்லாம் அறிந்த ஒன்றை அலட்சிய படுத்துவதையும்,
‘பொழுதே போக மாட்டேங்குது... வாழ்க்கையே போரா இருக்குது..’ன்னு பொன்னான
நேரங்களை வீணடிப்பதையும் சுட்டிக் காட்டவே இந்த புள்ளி விபரம்.

இன்னும்.. குடும்பங்களையும், உறவினர்களையும் பிரிந்து.. வெளிநாடுகளில் வேலை
செய்பவர்களுக்கென்று தனி கணக்கு இருக்கத்தான் செய்கிறது. அதாவது..
வருடத்தில் 11 மாதங்கள் வேலை 1 மாதம் விடுமுறையென்று வருடத்திற்கு
ஒரு முறை தாயகம் செல்பவரானாலும் சரி... அல்லது, 2 வருடத்திற்கு ஒரு முறை என்று,
22 மாதங்கள் பனிபுரிந்துவிட்டு, 2 மாத விடுமுறையில் ஊர் செல்பவரானாலும் சரி...
30 வயதில் வேலைத் தேடி, வெளிநாடுகளுக்கு வரும் ஒரு இளைஞன், தன் 60 வயது
(முதுமை) வரை, பனிபுரிந்தால்... (அதற்கு மேல் பனிபுரிய நீங்களே விரும்பினாலும்
அமீரகத்தின் தற்போதைய சட்டத்தில் இடமில்லை) அவன் தன் குடும்பங்களை பிரிந்து
(வாடிய) காலம்.. நாட்களின் அடிப்படையில்... 9,900 நாட்கள். அதாவது 2,37,600 மணி நேரங்கள்.
ஆனால், அவன் தன் குடும்பத்துடன் (மகிழ்சியாக?) இருந்த (விடுமுறை) காலம்..
வெறும் 720 நாட்கள். அதாவது 17,280 மணி நேரங்கள் மட்டுமே!

பெரும்பாலும், குடும்பத்தை பிரிந்து வெளி நாடுகளில் வசிக்கும் நாம்... நம்மை நாமே
சமாதானப் படுத்திக் கொள்ள, நமக்கு நாமே முன் வைக்கும் உதாராண தத்துவம்..
‘திரைக் கடலோடியும் திரவியம் தேடு’
‘ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும்’ போன்றவைகளாகும்.
திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்னும் சொல் நாம் வாழும்.. கிட்டத்தட்ட
துறவரம் போன்ற வாழ்க்கையை நியாயப் படுத்த கூறப்பட்ட தத்துவமல்ல.
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்ற வைரவரிகளில் நம் வாழ்க்கை
எப்படி அடங்கும். எதை பெற, எதை இழக்கிறோம்?. வெறும் 720 நாட்களின் மகிழ்சிக்காக
9,900 நாட்களை தியாகம் செய்கிறோமே இதுவா..? ஒருவன் புழுக்களை போட்டு மீன்களை
பிடிப்பதற்கு பதிலாக, மீன்களை போட்டு புழுக்களை பிடிப்பதற்கும், நமக்கும் பெரிதாய் என்ன
வித்தியாசம் இருக்க முடியும்?. வாழ்க்கையை இழந்து வசதிகளை பெறும் இந்த
”வாழாத வாழ்வு” ஏன்?

அர்ப்பனிப்புகளும் தியாகங்களும் இல்லாத வாழ்க்கை ஒருபோதும் அர்த்தமுள்ள
வாழ்க்கையாய் ஆகாது. முப்பது வருடங்களை கடந்து, வெளிநாடுகளில் வேலை செய்தும்
எண்ணற்ற கடமைகளினால், இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எத்தனை
எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருபோதும் நான் அவர்களை குறிப்பிடுவதாய்
எண்ண வேண்டாம். எல்லா வசதிகளுமிருந்தும், மேலும் வசதிகளை பெருக்க வாழ்க்கையை
இழக்க வேண்டாமே.

இறைவன் தந்த மகத்தான பரிசான, அவன் கொடுத்த பொன்னான நேரங்களை வீனாக்காமல்,
இம்மைக்கும், மறுமைக்குமான, பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து.. ஈருலகிலும் இறைவனுக்கு
பொருத்தமானவர்களாக இறைவன் நம்மையாக்கி அருள்வானாக! (ஆமீன்!)

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சந்திப்போம்.

’களத்தூரான்’

உத்தி…!

உத்தி…!

. M. குதுப்கான்
”ஹலோ …. யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும் ரபீக்தானே? சுல்தானோட மகன் ரபீக்?
‘’ஆமா …. நீங்க?’’
‘’நான் தான் கம்பம்ல் இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?
‘’ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’
‘’நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’
‘’சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…’’
’’ஏன் இப்ப அழகா இல்லயா?’’
‘’இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’
‘’அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’
‘’தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’
‘’சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”
‘’தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’
‘’ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர் –ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’
‘’நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’
‘’அவன் என்ன செய்யறானாம்?’’
‘’ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’
’’வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’
‘’ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’
‘’ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.’’

நன்றி : சமரசம் : ஆகஸ்ட் 1-15,2010 இதழிலிருந்து