Thursday, May 1, 2008

தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?

தமிழகத்தில் முஸ்லிம்கள் 13 சதவிகிதம் ?


கேள்வி : நாம் 13 சதவிகிதம் இருக்க அரசுப் புள்ளி விவரமோ 5.8 சதவிகிதமெனக் கூறுகிறது. நாம் அதில் அக்கறை இல்லாமலேயே இருந்து வருகிறோம். தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எவ்வளவு சொல்லியும் காதில் விழவில்லை. கிறிஸ்தவர்களைப் ப்பொ நாமும் அந்தந்த ஊர் ஜமாஅத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயல்பாட்டில் இறங்கினால் என்ன ?

( பி. ஏ. முஹம்மது அலி, ராஜகிரி )

பதில் :

தனிநபருக்கு, குடும்பத்திற்கு, ஜமாஅத்திற்கு , ஊருக்கு , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு என எல்லா நிலைகளிலும் உதவக்கூடியது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் நடத்தி வரும் முஹல்லாவாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.

5.8 சதவிகிதம் என்ற அரசு புள்ளிவிவரம் தவறு என்று சுட்டிக்காட்டித் திருத்த முயல்வதற்கு மிகப்பெரும் ஆதாரமாக நாம் உருவாக்கக்கூடியது முஹல்லா வாரியான முஸ்லிம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் !

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த மஹல்லா மக்கள் தொகைப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும். பிறப்பு,இறப்பு,இடமாற்றம் முதலிய எல்லா விவரங்களையுமே பதிவு செய்து கொள்கிற வகையில் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பதிவேட்டைப் பராமரிப்பதன் வாயிலாகப் பலவகைகளிலும் மக்கள் பயன்பெறுவர். ஜமாஅத் ஒற்றுமை ஒருங்கிணைப்பு கட்டிக் காக்கப்படும். ஆகவே தங்களைப் போன்ற ஆர்வலர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியை முனைந்து முடித்திட ஆவன செய்தல் வேண்டும். பதிவேடு கிடைக்குமிடம்

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மார்பிள் ஹால்
எண் 118/13 வேப்பேரி நெடுஞ்சாலை
பெரியமேடு
சென்னை 600 003


தகவல் : பாமரன் பதில்களிலிருந்து

இனிய திசைகள் பிப்ரவர் 2008

தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !

தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி அளித்து வருகின்றன.

1. உலமா ஓய்வு ஊதியத் திட்டம் :

இத்திட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்ட்ட அல்லது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பேஷ்இமாமாக அல்லது முஅத்தீனாக அல்லது அரபி ஆசிரியராக அல்லது ஆசிரியை ஆகப்பணி புரிந்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2200 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 2125 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.

2. பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்க்க அல்லது புதுப்பிக்க உதவி :

இத்திட்டத்தின்படி உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

3. மையவாடிகளுக்குச் சுற்றுச்சுவர் அல்லது முள்கம்பிவேலி அமைக்க உதவி :

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மையவாடிக்கும் ரூ. 25,000/- வரை உதவிநிதி வழங்கப்படுகிறது. 20 இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

4. நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்ய உதவி

நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்காகப் புதுதில்லி மத்திய வக்ஃப் கவுன்சில் மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவிகிதம் வரை கடனாக உதவி வழங்குகிறது.

வக்ஃப் கண்காணிப்பாளர் / வக்ஃப் ஆய்வாளர் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதன்மை நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
எண் 1 ஜாபர் சாரங் தெரு
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை 600 001

இணையதளம் : www.tnwakfboard.com

தகவல் உதவி

இனிய திசைகள் மாத இதழ்
பிப்ரவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115

இறையச்சம்

இறையச்சம்

கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்

அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !

பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !

வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !

தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !

தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !

பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !


இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

சிறந்த மருந்தாக்கியல் வல்லுநர் விருது பெற்ற முதல் முஸ்லிம்

மருந்தாக்கியல் துறையில்
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.

அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.

இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.

தகவல் உதவி :

இனிய திசைகள்
பிப்ரவரி 2008

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி

அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வி

அஞ்சல் வழியே இஸ்லாமியக் கல்வியை ஜாமியா மில்லியா கமாலியா எனும் இஸ்லாமிய அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படிப்பு குறித்த விபரமறிய சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டிய கவரை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விபரம் பெறலாம்.

மேலும் விபரம் பெற

ஜாமியா மில்லியா கமாலியா
திருப்பாலைக்குடி 623 531
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 99 761 64265 / 94 862 11386
மின்னஞ்சல் : jamika51@rediffmail.com

http://www.chittarkottai.com/JaMiKa/index.html