Sunday, February 3, 2008

எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட அமீரகத்தில் ஐந்தாண்டு பணிபுரிய வேண்டும் :எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட அமீரகத்தில் ஐந்தாண்டு பணிபுரிய வேண்டும் :
துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பு விழாவில் தமிழக பிரமுகர் பேச்சு


அமீரக தமிழர்கள் அமைப்பு, துபாய்,அஜ்மான் மற்றும் தமிழ்த்தேர் அமைப்புகள் இணைந்து தமிழகத்தின் பிரபல மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான், டாக்டர் ஏ. நஸிருல் அமீன் ஆகியோருக்கு வரவேற்பு மற்றும் மருத்துவ கேள்வி பதில் நிகழ்ச்சி துபாய் கராமா சிவ் ஸ்டார் பவன் உண(ர்)வகத்தில் 01.02.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அஜ்மான் அ.சு. மூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்த்தேர் அமைப்பின் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். துபாய் அமீரக தமிழர்கள் அமைபின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈடிஏ அஸ்கான் தொழிலாளர் முகாம் நிர்வாகி சம்சுதீன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவர் மலர்வேந்தன் தனது உரையில் எளிமையான நிலையில் வாழ்ந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் இலக்குடன் செயல்பட்டதால் மிக உயர்ந்த நிலையை அடைந்து கோடானுகோடி மக்களின் இதயங்கவர்ந்தவராக மாறினார். உழைப்பில் உண்மை இருக்குமானால் உயர்நிலையை அடையலாம் என்பது தனது அமீரக சுற்றுப்பயணத்தில் கண்ட அனுபவம் என்றார் முத்தாய்ப்பாக.

மதுக்கூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தண்டபாணி தனது உரையில் அமீரகத்தில் மன்னராட்சி இருந்தாலும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருவது தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவில் வளங்கள் பல இருந்தும் ஜனநாயக நடைமுறை நமது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் எம்.பி, எம்.எல்.ஏக்கு போட்டியிட வேண்டுமென்றால் அமீரகத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற தகுதியைக் கொண்டவராக இருத்தல் வேண்டும் எனும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பேன் என்றார். ( இவ்வாறு அரங்கமே அதிர்ந்தது )

இந்தியன் முஸ்லிம் சங்கத்தின் ( ஈமான் ) துணைத்தலைவர் தனது உரையில் தமிழ் மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ்க் குடும்பங்களில் பட்டதாரிகளே இல்லை எனும் நிலையை மாற்ற வேண்டும் என்றார். இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் மற்றும் தியாகத்திருநாள் இவையிரண்டும் உணர்த்தும் படிப்பினைகளை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் அஷ்ரப் அலி, தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ. பட்டணம் மணி, அமீரகக் கவிஞர்கள் பேரவையின் இசாக்,
உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

ஏற்புரை நிகழ்த்திய சென்னை ஏ.ஜே. அறக்கட்டளைத் தலைவரும், பிரபல செக்ஸாலஜி நிபுணருமான டாக்டர் ஏ.அமீர்ஜஹான் அவர்கள் தனது உரையில் தமிழ் மகன் உலகின் எப்பகுதிக்கு சென்றாலும் தாயகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, தமிழ் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறான். தமிழ் மகன் பணம் மட்டுமலாது சிறந்த குணம் கொண்டவராக இருந்து வருகிறான். அறிவுப்பாலம் இட்ட அப்துல் கலாமை நினைவு கூர்ந்த அவர் தமிழனின் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சென்னை ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வியை ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சென்னை அன்புப் பாலம் அமைப்பின் வெளிநாடு வாழ் இந்தியர்க்கு சிறப்பான சேவையாற்றியமைக்கான விருது பெற்ற ஏ.எஸ். மூர்த்தி, சாதனையாளர் விருது பெற்ற கோவிந்தராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

ரபிக், ஜியாவுதீன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.

மருத்துவம் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாரடைப்பு ஏற்படும் போது தடுக்க வேண்டிய வழிமுறைகள், பாலியல் குறித்த சந்தேகங்கள், நடைப்பயிற்சியின் அவசியம், தினமும் குடிக்க வேண்டிய குடிநீரின் குறைந்த பட்ச அளவு உள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டது.

தமிழ்த்தேர் அமைப்பின் கந்தநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவிமதி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஆசியாநெட் வானொலி தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆசிப் மீரான், அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சைபுதீன், தமிழ்த்தேர், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆடிட்டர் அமீர் சுல்தான்,பொதுச்செயலாளர் கே.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் பொருளாளர் ஏ.அஹ்மது இம்தாதுல்லாஹ், செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.