Showing posts with label எலுமிச்சை. Show all posts
Showing posts with label எலுமிச்சை. Show all posts

Sunday, June 13, 2010

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!
Posted: 24 Apr 2010 09:12 PM PDT


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,
"கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy) , பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.

source: thatstamil

Friday, June 5, 2009

எலுமிச்சை எனும் ஏழைத் தோழன்

எலுமிச்சை எனும் ஏழைத் தோழன்.

வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை..

சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.
இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.

எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…

1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.

2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.

3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.

4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.

5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !

7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்..

9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !
இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.

எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது.
அட… என்ன ? எங்கே கிளம்பிட்டீங்க ? எலுமிச்சை வாங்கவா ? ஒரு கப் எனக்கும் தயாராக்குங்க.

நன்றி : தமிழ் ஓசை