Sunday, May 10, 2009

மீண்டும் வரலாறு திரும்புகிறது ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி

மீண்டும் வரலாறு திரும்புகிறது ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி
ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரிப்பு


சென்னை, மே 9-

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்ததைப்போல இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதேபோல், தமிழக மாணவர்களுக்கு ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

சாப்ட்வேர் வேலை

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக என்ஜினீயரிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாயின. என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே `கேம்பஸ் இண்டர்விï' மூலம் பெரிய பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இதனால், பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் போட்டிப்போட்டு சேர்ந்தனர்.

எலெக்ட்ரானிக்ஸ் கம்ïனிகேஷன், கம்ப்ïட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடும் மவுசு ஏற்பட்டது. என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் 30 ஆயிரம், 40 ஆயிரம். 70 ஆயிரம் என்று சம்பளத்தை வாரி வழங்கின. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வாங்கும் சம்பளத்தை சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 21 வயது என்ஜினீயரிங் பட்டதாரி வாங்க முடியும் என்ற நிலை உருவானது.

அரசு பணிக்கு மவுசு

என்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கால் சென்டர், இ-பப்ளிஷிங், பி.பி.ஓ. உள்ளிட்ட துறைகளில் வேலைக்குச்சேரும் கலை அறிவியல் பட்டதாரிகளும் அரசு பணியைவிட அதிக சம்பளம் பெற்றனர். திறமை இருந்தால் மிகக்குறுகிய காலத்திலேயே உயர்ந்த பொறுப்புக்கு வருவதுடன் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களுக்கு அரசு வேலையில் சேரும் ஆர்வம் மெதுவாக குறைந்தது.

இந்த நிலையில், அண்மையில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு குறைந்ததுடன் ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பணிப்பளு அதிகரித்ததுடன் ஏராளமான சலுகைகள் குறைக்கப்பட்டன. அதேநேரத்தில் அரசு துறை நிறுவனங்கள் போட்டிப்போட்டு ஊழியர்களை தேர்வுசெய்தன. அதோடு 6-வது ஊதியக்குழுவின்படி சம்பளமும் கணிசமாக உயர்ந்தது.

வரலாறு திரும்புகிறது

இதனால், கம்ப்ïட்டர் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைபார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் பார்வை, அரசு வேலை பக்கம் திரும்ப தொடங்கியது. அரசு வேலைக்கான போட்டிதேர்வுகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண பி.ஏ.. பி.எஸ்சி. கல்வித்தகுதி கொண்ட வேலைக்கும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். தேர்வில் வெற்றிபெற்று வேலையிலும் சேர்ந்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 101 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை தற்போது மீண்டும் திரும்பியுள்ளது. 1970-களில் தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முதல் 10 ரேங்க் இடங்களையும் கணிசமான அளவு பிடிப்பவர்களா தமிழக மாணவர்களாக இருந்தனர். இதனால், டெல்லி பாராளுமன்றத்திலும், வெவ்வேறு மாநிலங்களிலும் செயலாளர், தலைமைச் செயலாளர் பொறுப்புகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. இடையில் பல ஆண்டுகள் தொய்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் வரலாறு திரும்புள்ளது.

முப்படைகளிலும்

முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு நிகராக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் அதிகாரி பணி இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கோலேச்சினார்கள். ஜெனரல், அட்மிரல், ஏர் சீப் மார்ஷல் போன்ற தலைமை பதவிகளை அலங்கரித்தனர். ஆனால் காலப்போக்கில் பாதுகாப்புத்துறையில் தமிழக இளைஞர்கள் சேருவது குறைய தொடங்கியது.

இந்த நிலையில், ராணுவ, கடற்படை, விமானப்படையில் சேர நடத்தப்படும். என்.டி.ஏ., சி.டி.எஸ். எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தற்போது தமிழக மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான வழிமுறைகளை தற்போதைய இளைஞர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் அதற்கேற்ப பாடத்திட்டங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.