Wednesday, May 6, 2009

சிறுகதை : வாழ்க்கையின் விலை ( பா.பாத்துமுத்து – திருமங்கலம் )

சிறுகதை : வாழ்க்கையின் விலை ( பா.பாத்துமுத்து – திருமங்கலம் )

முஸ்தாக் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணி விட்டோமே என மனம் துடியாய் துடித்தது. யா அல்லாஹ்! வேறு வழியே தெரியவில்லையே. தங்கை ரஷிதா வாழ வேண்டுமே எனப் புலம்பினான். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

முஸ்தாக் பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தான். குடும்பச் சுமையின் காரணமாக படிக்க ஆசை இருந்தும் அவனால் மேலே படிக்க முடியவில்லை.

ரசாக் பாயின் மளிகைக் கடையில் சிறு வயது முதலே வேலை பார்த்து வந்தான். ரசாக் பாயும், அவர் மனைவி அஜீஜாவும், முஸ்தாக்கை பெற்ற பிள்ளை போல் பார்த்துக் கொண்டார்கள்.

ரசாக் பாயின் வீட்டுக்குள் சுதந்திரமாக சென்று வரும் உரிமை முஸ்தாக்கிற்கு மட்டுமே உண்டு. ரசாக் பாயின் பிள்ளைகள் சல்மானும், சுலைமானும் முஸ்தாக்கிடம் அண்ணே, அண்ணே என்று அன்பாகப் பழகினர்.

முஸ்தாக்கிற்கு அம்மாவும், தங்கையும் மட்டுமே உண்டு. வாப்பா இல்லை. முஸ்தாக் கொண்டு வரும் வருமானமும், தீப்பெட்டி ஒட்டும் வருமானமும் மூவருக்கும் இரண்டு வேளை கஞ்சி குடிக்க போதுமானதாக இருந்தது.

இந்த நிலையில் ரஷிதாவுக்கு பதினைந்து பவுன் நகை போடுவதாகப் பேசி பக்கத்து ஊர் இஸ்மாயிலுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். தாயின் பழைய நகை பத்துப் பவுனைப் போட்டு ஐந்து பவுன் நகை ஆறுமாதம் கழித்துப் போடுவதாகப் பேச்சு. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது.

ரஷிதா பத்து நாளைக்கு முன் கண்ணை கசக்கிக் கொண்டு பெட்டியுடன் ஊர் வந்து சேர்ந்தாள். “என்னம்மா ரஷிதா, தீடீர்னு மச்சான் வரல்லையா?”

அண்ணே, ஐந்து பவுன் நகை வாங்கிட்டுத்தான் ஊருக்கு வரணும்னு என் மாமியார் என்னை துரத்தி விட்டுட்டாங்க.

ஏம்மா மச்சானுக்கு நம்ம நெலமைத் தெரியாதா?

தெரிஞ்சு என்னண்ணே பிரயோஜனம்? என்னை நகை வாங்கிட்டு வா. இல்லைன்னா நகைக்கு உரிய பணத்தை யாவது வாங்கிட்டு வான்னு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு எனத் தேம்பி தேம்பி அழுதாள்.

முஸ்தாக்கின் இரத்தம் கொதித்தது. பொண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்த வக்கில்லை. மாமியார் வீட்டுலேயே புடுங்கணும்னு நெனைக்கிற இவனெல்லாம் ஆம்பிளை எனக் காறி உமிழ்ந்தான்.அதே மனக் கசப்புடன் வேலைக்குச் சென்றான்.

அங்கே அஜீஜா, ஏய் முஸ்தாக், இங்க வாப்பா அஞ்சு பவுன்ல நெக்லஸ் வாங்கி இருக்கேன். முதலாளி டிசைன் நல்லா இல்லைன்னுட்டாரு. நீ பார்த்துச் சொல்லுப்பா நல்ல இருக்கா,இல்லையான்னு.

சூப்பரா இருக்குமா, நீங்க கழுத்துல போட்டா இன்னும் அழகாயிரும். அஜீஜா கணவனை பார்த்து கேட்டுக்கங்க.

அவன் நீ என்ன செஞ்சாலும் சரின்னுதான் மாடு மாதிரி தலையாட்டுவான். அவன் உன்னோட செல்லப் புள்ளையாச்சே!

உங்களுக்குப் பொறாமை தாயும் புள்ளையும் ஒண்ணாப் பேசுறதைப் பாத்து

இப்படி தாயும், தந்தையுமா பழகுறவுங்க வீட்டில் இருந்து முஸ்தாக், அஜீஜா ஆசையாய் வாங்குன நெக்லஸைத் திருடி விட்டான்.

மனம் வெட்டி போட்ட பல்லியின் வாலாய் துடித்தது.

ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கையின் கையில் கொடுத்து கடன் வாங்கி இந்த நெக்லஸை வாங்கினேன் எனப் பொய் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தான்.

யா அல்லாஹ்! இந்த வரதட்சணை கொடுமை என்றுதான் மறையுமோ? இதனால் பாவங்களுக்கு ஆளாகி வேதனைத் தீயில் வாடிகிறோமே! நான் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நீயும் உரியவர்களும் மன்னிப்பார்களா? என்று புலம்பித் தள்ளினான்.

அன்று முதல் சிரிப்பை தொலைத்து விட்டு நடை பிணமாக நடமாடினான்.

ரசாக் பாய் நல்ல உள்ளத்துடன் முஸ்தாக் நீ ஏண்டா இப்புடி உம்முன்னு இருக்க, அம்மா ஆசையா வாங்குன நகை தொலைஞ்சு போச்சுன்னா அவ எங்கயாவது ஞாபக மறதியா கழட்டி வச்சுருப்பா இல்லைன்னா கொக்கி கழண்டு எங்கயாவது கீழ விழுந்திருக்கும். நீ கவலைப்படாதடா என உண்மை தெரியாமல் ஆறுதல் சொன்னார். அன்பான இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு மேலும் அனலில் இட்ட புழுவாய்த் துடித்தான். நிம்மதியில்லாமல் தவித்தான். நாட்கள் சென்றன.

ஒரு கல்யாண வீட்டில் தற்செயலாக ரஷிதாவின் கழுத்தில் நகையைப் பார்த்த அஜீஜா திகைத்துப் போனாள்.

ஏம்மா ரஷிதா இந்த நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கே எங்கேம்மா வாங்குன?

அஜீஜா நகையை கழட்டி வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள்.

நான் வாங்கலைம்மா அண்ணன் தான் வாங்கிக் குடுத்தாங்க.

அஜீஜாவிற்கு உண்மை புரிஞ்சு போச்சு. பந்தலில் உட்கார்ந்திருந்த கணவனை அழைத்து உண்மையை விளக்கினாள்.

அப்புடிச் சொல்லாதம்மா அவன் ரொம்ப நல்லவன்.

இல்லைங்க இது என் நெக்லஸ்தான். நான் வாங்குன கடை முத்திரை அதுல இருக்கு. என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. வாங்க வீட்டுக்குப் போவோம். அவனை கூப்பிட்டு விசாரிப்போம்.

அங்கே ரசாக் பாய் முஸ்தாக்கை அழைத்து, முஸ்தாக் அல்லாஹ்வின் மேல் ஆணையா கேக்கிறேன். நீ தப்பு செய்தியா?

வாப்பா, என்னை மன்னிச்சுருங்க, என்னோட தங்கச்சி வாழணும்கிற ஆசையில தப்பு செய்திட்டேன். இந்த பாவ காரியத்தால தினம், தினம் நிம்மதியில்லாம செத்துக்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட என்னைய சோறு போட்ட உங்க கையாலேயே அடிச்சு கொன்னுருங்க என்று பதறித் துடித்து அழுதான்.

விபரங்களை கேட்டறிந்த ரசாக் பாய் கண்கள் கலங்க வரதட்சணை என்கிற பேய் ஒரு நல்லவனை எப்படி திருடனா மாத்தியிருக்கு பாத்தியா! யா அல்லாஹ் இது என்ன கொடுமை! இது மாதிரி எத்தனையெத்தனை நல்லவர்கள் தவறிழைத்து விட்டு துடிக்கிறார்களோ? எத்தனையெத்தனை குடும்பங்கள் கடனில் மூழ்கி நாதியற்று நடுத்தெருவில் தவித்து வருகிறார்களோ? பாழாய் போன இந்த வரதட்சணை பழக்கம் எப்படி மார்க்கத்தில் புகுந்தது? ஆமாம்! இதற்கு எதாவது ஒரு வழி செய்தாகனும். டேய் முஸ்தாக்! நீ செய்த இந்த தவறை நாங்க மன்னிக்கனுமா- வேண்டாமா? சொல்லு

அல்லல்லா – இப்படி சொல்லாதீங்க வாப்பா, நீங்க மன்னிச்சாதான் அல்லாஹ்வும் என்னை மன்னிப்பான் என்று மனசு வெடிக்கக் கதறினான்.

அப்போ நான் சொல்வதை செய்வீயா?

நீங்கள் என்ன சொன்னாலும் சரி அப்படியே செய்வேன் என்றான் விம்மியபடி.

அப்படியா! நீ கல்யாணம் செய்தால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்க மாட்டேன் என்று சத்தியம் செய். அது மட்டுமல்ல உன் வயிற்று பிள்ளைக்கும் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தால்தான் நாங்கள் உன்னை மன்னித்து விடுவோம். என்ன சரிதானே?

திடுக்கென்று எழுந்து வல்ல நாயன் மீது ஆணை ! இந்த வரதட்சணை கொடுமையை அனுபவ பூர்வமாக அனுபவித்து துடித்தவன் நான். இந்த கொடுமை யாருக்கும் வேணாம். நானோ எனது பிள்ளைகளோ வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் செய்து நபி (ஸல்) அவர்கள் வழியில் இல்லறத்தை நல்லறம் ஆக்குவேன் வாப்பா என்று கதறியவாறு வாப்பாவை இறுக அணைத்துக் கொண்டான். அங்கே ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது.

நன்றி : நர்கிஸ் – ஏப்ரல் 2009

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!

எங்கள் வாழ்வும், வளமும் செழித்திட
மறையாய் வந்த அல்புர்கானே!
திரு மறையாய் வந்த அல் குர் ஆனே!
உன்னை வாழ்த்திடும் மனதினில் நிறைந்தவன்
அருட் கொடை தந்த ரஹ்மானே
(வேறு)

உன்றன் உள்ளே முழுதும் எண்ணங்கள் கோடி
எங்கள் உள்ளம் முழுதும் கொண்டாடும் கூடி
(வேறு)

அள்ளித்தான் குறையாது; சொல்லித்தான் முடியாது
கல்விக்கும் கேள்விக்கும் தாயகமாய் உண்டானது!
(வேறு)

கலைஞானக் கதிரே உன் வரவாலேதான் – எங்கள்
கலை ஞானக் கதிரே உன் வரவாலேதான் – இந்த
உலகடைந்த மகிமைக்கு அளவு முண்டோ? – என்றும்
நிலையாக ஒளி வீசி இருளகற்றியே – நல்ல
நெறிமேவும் வாழ்க்கைக்கு வழியாகினாய்!
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – ஞானக்
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – உன்றன்
கருவூலம் ஆராய்வுக் கரிதானதே – எங்கும்
மடம் நீங்கி மதி ஓங்கச் சுடரேற்றவே – மனம்
குணத்தோடு மணம் வீசும் மலராகுமே!
(வேறு)
உன்னை இறைவன் அளித்தான் மறையாகத்தானே
நீயே உயர்ந்து நின்றாய் கதிராக வானில்!
(வேறு)
எண்ணத்தான் இயலாது எண்ணித்தான் முடியாது
விண்ணுக்கும், மண்ணுக்கும் விதியாக வந்ததிது
(வேறு)
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – உந்தன்
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – கசடை
உடைத்தெறிந்து தூய்வாக்கி அறங்காக்குமே – எந்தத்
துறையேனும் எப்பொருளும் எக்கேள்வியும் –இங்கு
அருளார்ந்து மெய்ப் பொருளில் தெளிவாகுமே

அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – உயர்
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – நல்ல
அறிவார்ந்து நேர்மையுடன் ஒழுக்கந்தரும் – உன்றன்
ஹர்பு(க்)கள் ஒவ்வொன்றும் உலகளந்திடும் – அதன்
அர்த்தங்கள் புலனுக்கு வியப்பாகுமே
(வேறு)
உந்தன் வரவால் பாலையில் வீசியது தென்றல்;
காற்றில் சுகந்தம் மணந்தது; விலையுயர்ந்தது
அரபுமண் !
(வேறு)
அகக் கண்கள் திறந்து விட்டு அஞ்ஞானம் அறுத்தெறிந்து
சுக வாழ்வில் இசையாகப் பண்ணாக வந்தானது !
(வேறு)
ஒரு மறைவான இறை மீது ஈமான் கொண்டோம் – அந்த
இறையோனின் மறை மீதில் பற்றைக் கொண்டோம் – அரும்
மறையோதும் இன்பத்தில் மனநிம்மதி – அது
புரியாது படித்தாலும் பெரும் பாக்கியமே

பெரும்மறைபொருளை நிறைத்திருந்து பெயராகினாய் – அந்த
இறை தவிர்த்துன் புதை பொருளை யாரறிவது?
ஒரு குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே – உன்னால்
குவலயத்தில் நிமிர்ந்ததெங்கள் சமுதாயமே !
(வேறு)
உன்னை ஏந்திய ஜிப்ரயீல் பெரும் பாக்கியம் அடைந்தார்
தாங்கிய ஏந்தல் முஹம்மது அரும் புனிதம் அடைந்தார்
(வேறு)
பெற்றவனின் பரிசாகப் பார் மணக்கும் மலராகப்
பெற்றிட்டோம், பேறடைந்தோம், கற்றிற்றோம்,
களிப்படைந்தோம்
(எங்கள் வாழ்வும், வளமும்…)




ஓதுங்கள் ! ஓதுங்கள் !

ஓதுவீராக ! ஓதுவீராக !

உம்மியான முஹம்மதிடம் உத்தமர்கோன் ஜிப்ரயீல்தாம்
ரம்மியமாய் எடுத்து வைத்த அடிப்படைக்கல் !

ஓதுவீராக ! ஓதுவீராக !

பேரிருளைக் கிழித்தெறிந்து உலகுயர அஹமதரைத்
தேர்ந்தெடுத்து அறிவித்த மணியோசை !

ஓதுவீராக ! ஓதுவீராக !

மணிமொழியில் வேதந்தனில் இனிய வாழ்வின் வழியாகச்
செப்பனிட்ட பாதைக்கிது ஆரம்பம் !

ஓதுங்கள் ! ஓதுங்கள் !
ஒவ்வொரு நாளும் ஓதுங்கள் !
ஒன்றிய மனத்தோடோதுங்கள் !

இத்தரை மீதில் சத்தியமென்று
முத்திரை பெற்ற மா மறையை (ஓதுங்கள்)

ஆதாரம் எவனோ அந்த ஆண்டவனே தந்த மறை
ஆதாரம் நமக்கேதென்று அறிவிப்பாய் வந்த மறை
ஆதாமும் ஹவ்வா முதலாய் வரலாற்றைச்சொல்லும் மறை
ஆதாயம் தேடித் தரவே அருட் கொடையாய் நின்ற மறை

அதன் மொழி பார்த்தால் அதன் ஒலி கேட்டால்
வறண்ட உள்ளமும் விளை நிலம் ஆகும் !

வித்தகர் நபியின் சித்தமும் வென்று
நித்தமும் பயின்ற மாமறையை ( ஓதுங்கள் )
அவகாசம் கிடைக்கும் போது அர்த்தம் பார்த்துக்
கொள்ளுங்கள்

அவகாசம் தேவையில்லை அவசியமாக ஓதுங்கள்
அர்த்தங்கள் புரியும் போது அறிவையும் பெருக்கிக்
கொள்ளுங்கள்

அறியாமல் ஓதும்போதும் அருள் மழை கிட்டும் அறியுங்கள்!
உலகினில் கேட்டால் இதற்கிணை இல்லை
தெளிவினில் பார்த்தால் முழுமையின் எல்லை

ரத்தினச் சுருக்கம்; முற்றிய விளக்கம்;
புத்தொளி வழங்கும் மாமறையை ( ஓதுங்கள் )
பிள்ளைக்குக் கல்வி முதலாய் குர்ஆன் ஓதச் செய்யுங்கள்
சொல்லுக்குச் சொல்லாய்ச் சொல்லி ஹர்பைத் திருந்தச்
செய்யுங்கள்
எல்லாமும் இறையே என்னும் கொள்கை நிலையைச்
சாற்றுங்கள்
எப்போதும் ஓதும் இன்பம் தப்பாதென்று போற்றுங்கள் !

ஒழுங்குற ஓதினால் பகுத்தறிவேறும்
நலிந்திட்ட உடலும் சுகமுடன் தேறும் !

எத்துணை சிறப்பும், எத்துணை புகழும்
பக்தியில் திளைக்கும் மாமறையை ( ஓதுங்கள் )




இகந்தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !

( மெட்டு - பீத்தே பீத்தே )

வான்வீதியில் வந்ததே இன்பராகம்
தேன்மொழியினில் பொழிந்தநல் அன்புவேதம் !

1.திருநாளிலே குகையிலே நபியின் காதில்
ஒளியாகவே ஜிப்ரயீல் வந்து ஊதினார்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
உருவானதே அறிவுக் கண்ணூற்றின் வேகம் !
( வான் வீதியில் )

2.இறைவார்த்தையில் இசைத்தது பக்திகீதம்
இகம் வாழவே அருளிய முக்திராகம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதத்தின் இறுதியாம் சக்திவேதம் !
( வான் வீதியில் )

3.கொடுநரகையும் அழித்திடும் இறையின்நாதம்
கடும்பாவங்கள் கரைத்திடும் கனிந்தராகம்
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
படர்ந்தேத்திடும் பாங்காகவே பண்புவேதம் !
( வான் வீதியில் )

4.குறைமேவினும் தெளிவுடன் மிகைத்தோதினும்
இறைவழங்கிடும் நன்மைக்கோர் எல்லையில்லை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
இகந் தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( வான் வீதியில் )



( க‌விஞ‌ர் ஆலிம் செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ம‌றையாத‌ காவிய‌மொன்று........... எனும் க‌விதை நூலிலிருந்து )

வெளியீடு : ம‌ணிமேக‌லைப் பிர‌சுர‌ம்

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

மதிப்பிற்குரிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு எழுதிக் கொள்வது !

இதைப் படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவிட ‘துஆ’ செய்கிறேன் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழகத்தை பொருத்த வரைக்கும் ஒற்றுமை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாத ஒரு சமுதாயம் உண்டு என்றால் அது நமது முஸ்லிம் சமுதாயம் மட்டுமே எனக்கூறுவதில் வெட்கப்படுகிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமது சமுதாயம் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக் என்னும் கட்சியுடனும், இஸ்லாமிய கொள்கை ரீதியாக ஜமாஅத்துல் உலமா (மார்க்க அறிஞர்களின் ) சபையுடனும், ஒழுங்கு முறைக்கு ‘’ஜமாஅத்” மஹல்லா என்னும் கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்த நமது சமுதாயம் இப்போது எப்படி இருக்கிறது ? எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? இடைப்பட்ட 25 ஆண்டுகளில் சமுதாயத்தின் பெயரால் எத்தனை கட்சிகள், எத்தனை இயக்கங்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை பிளவுகள் …இவையெல்லாம் ஏன்? எதனால்? என்ற கேள்விக்கு ஒரே பதில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்பட்ட சுயநலம் தான் ! நாம் குறிப்பிட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடையே இறையச்சம் அதிகமிருந்தது ! மரணத்தின் பயம் இருந்தது ! மண்ணறையின் திடுக்கம் இருந்தது!!! ஆனால் தற்போதோ? இவையெல்லாம் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நினைத்து பார்க்க கூடியதாய் மனிதனின் மனம் மாறிவிட்டது. அதனால் தான் ‘’துன்யா’’ வெனும் இவ்வுலக ஆடம்பர வாழ்க்கையின் சுக போகத்திற்கு நம்மை அடிமை படுத்திக் கொண்டோம். ஆடம்பர வாழ்க்கை யென்பது? சொகுசு பங்களா, சொகுசு கார் நினைத்து பார்க்க முடியாத பண மழையில் குளித்து சுகம் காண்பது தான் ! இது ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பாகவும் மாறிவிட்டது. இவற்றையெல்லாம் ஹலாலான வழியில் உழைத்து அனுபவித்தால் கூட இஸ்லாத்தின் பார்வையில் தவறு என்பதை நமது உத்தம தலைவராம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்தும், (ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டிய உன்னதமான சகாபாக்களின் வாழ்க்கை தத்துவத்திலிருந்தும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் தங்களது பதவி காலத்தின் போது கொளுத்தும் வெயில் காலத்திலும் கூட திறந்த வெளியில் ஈச்ச மர ஓலையின் மீது படுத்து உறங்கிய எளிமையை இன்றும் கூட வரலாற்று ஆசிரியர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். உலக மக்களுக்கு மட்டுமல்ல, நாளை மறுமை நாளின் போது ஒன்று திரட்டப்படும் லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களுக்கும் கூட தலைமை தாங்கவிருக்கும் நமது உயிரினும் மேலான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்க்கைக்கு கோடி உவமைகளை அடுக்கினாலும் நிகராகாது !
ஆடம்பரம் தான் ஒரு தலைவனின் சமூக அந்தஸ்து என்னும் காலத்திலும் கூட அனைத்து வசதியும் இருந்தும் கூட எளிமையாய் வாழ்ந்து காட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்களை பின் பற்றியே தான் நபித்தோழர்களும் வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய சமுதாய தலைவர்களின் நிலையை ஆராய்ந்து பாருங்கள். நேற்று ஆரம்பித்த இயக்கங்களின் தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரைக்கும் ஸ்கார்பியோ, டாடா சுமோ, குவாலிஸ்,இன்னோவா போன்ற சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். இவையெல்லாம் முறையாக சம்பாதித்து வாங்கியது என சொல்லும் அருகதை எத்தனை பேருக்கு இருக்க முடியும்? குறிப்பிட்ட ஒரு இயக்கத்திற்கு வருவதற்கு முன் டீக்கடையில் வேலை பார்த்தவன் இந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவரான பிறகு பல கோடிகளுக்கு அதிபதியாகி விட்டானே ! என்று அந்த நபரை அருகிலிருந்து பார்த்து வந்த பிற மனிதர்கள் கூறும் உண்மையை புறக்கணிக்க முடியுமா? சமுதாயத்தின் பெயரால் இயங்கி வரும் பெரும்பாலான இயக்கங்களின் பொறுப்பாளர்களில் அதிகமானோர் எவ்வித தொழில் துறையும் இல்லாதவர்களாகவும் இயக்கத்தின் பணி மட்டுமே கதி என்று கிடப்பவர்கள். இவர்களின் பொருளாதார நிலையை கூர்ந்து பாருங்கள். நேர்மையாய் உழைத்தவனை விட பல மடங்கு சொத்து சேர்த்தவர்களாய் மாறி விட்டனர். எங்கிருந்து எப்படி இவ்வளவு பணம் இவர்களுக்கு கிடைத்தது? என்பது தான் பாமரனாய் எல்லோரும் கேட்கும் கேள்வி? இத்தகைய கேள்விக்குரிய பதிலை ஆய்வு செய்யும் போது நமக்குத் தலை சுற்ற ஆரம்பித்து விடும். எங்காவது மதக்கலவரம் வராதா? அதில் நம் மக்கள் சிலர் சாக மாட்டார்களா? உடனே அதை வீடியோ எடுத்து கேசட் ரெடி பண்ணி முதலில் அனுப்பப்படும் ஏரியாவாக அரபு நாடுகளையும் பிறகு தமிழகம் முழுவதும் என்ற திட்டத்தின் படி கேசட் விநியோகம் முடிந்ததும் அதே வேகத்தில் வசூல் வேட்டையிலும் இறங்கி கலவரத்தில் இறந்தவர்களது குடும்பத்தினருக்குரிய நிதி என்று அதற்கு பெயரும் சூட்டி கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்ட பணத்தில் சிலதை கண் துடைப்புக்காக சிலருக்கு மட்டும் கொடுத்து விட்டு பெரும் பகுதி பணத்தை அமுக்கி கொண்டவர்களாய் சில காலம் இயக்கம் நடத்தினார்கள். இதற்கு 1998 கோவைக் கலவர வசூல், 2002 ல் நடைபெற்ற குஜராத் பூகம்ப வசூல் மற்றும் குஜராத் கலவர வசூல், 2004 சுனாமி வசூல் போன்றவை ஆதாரங்களாகும். கடந்த சில வருடங்களாக மதக்கலவரம் எங்கும் நடைபெற வில்லையே ! எப்படி இயக்கவாதிகள் பிழைப்பு நடத்தினார்கள்? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது ! ஒவ்வொரு வருடமும் ரமலான் காலங்களில் முஸ்லிம்களின் இறைக்கடமையில் ஒன்றான ஜகாத், மற்றும் ஃபித்ரா, கூட்டுக் குர்பானி போன்ற ஏழைகளுக்குரிய தர்மங்கள் விநியோகத்தில் மார்க்கத்தின் பெயரால் உள்ளே நுழைந்து பித்ரா, ஜகாத் புரோக்கர்களாய் மாறி கோடிக்கணக்கில் வசூல் செய்து ஏழைகளுக்கு தங்களது இயக்கத்தின் பெயரால் ஃபித்ரா,ஜகாத் விநியோகம் என்ற போலியான விளம்பரத்தையும் தேடிக்கொண்டு வசூல் தொகையில் சிலதை கொடுத்து விட்டு பெரும் பங்கை அவரவர்களின் சொந்த கணக்கில் சேர்த்துக் கொண்டதையும் ஒவ்வொரு வருடமும் நாம் காண முடிந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக பித்ரா, ஜகாத்,கூட்டுக் குர்பானி வசூல் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை! மக்கள் ஓரளவுக்கு விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டதும் தான் பிழைப்புக்கு வழி இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தின் விளைவாகவே தற்போது ஒவ்வொரு இயக்கமும் அரசியல் கட்சியாய் மாறி வலம் வர ஆரம்பித்துள்ளது. அதனால் தான் இயக்கங்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. எல்லா காலத்திலும் எல்லோரையும் ஒரே மாதிரி ஏமாற்ற முடியாது என்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் இறுதி புகலிடம் தான் அரசியல் களம்! கடந்த காலத்தில் அரசியலைப் பற்றிய இவர்களது விமர்சனத்தை பாருங்கள். இந்திய அரசியல் என்பது சாக்கடையாகும். அதில் குளிப்பதற்கு நாங்கள் விரும்ப வில்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அரசியலுக்கு வரமாட்டோம்! என வீர? வசனம் பேசி தங்களை யோக்கியர்களாய் காட்டிக் கொண்ட அந்த நிறம் மாறிகளான பச்சோந்திகள் தான் இன்றைக்கு அரசியல் என்னும் சாக்கடையை குளிப்பதற்கு மட்டுமல்ல தாகம் தீர குடிப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இயக்கங்களாய் இருந்து எதையும் சாதிக்க முடியாது என்பதால் தான். அரசியலுக்குள் நுழைகிறோம் எனக் கூறுவோர் சமுதாயத்தின் அரசியல் கட்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் முஸ்லிம் லீக்கை பலப்படுத்தலாமே! பெட்டிக் கடையை போல உருவாகிய இயக்கங்கள் ஆளுக்கொரு கட்சியென ஆரம்பித்து எதை சாதிக்கப் போகின்றனவாம்? தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அல்லது கருணாநிதி இவர்களது கூட்டணியில் இணைந்து அவர்கள் வீசும் 1 அல்லது 2 எலும்புத் துண்டுகளை மட்டுமே கவ்வ முடியும். அதிலும் ஜெயலலிதா பக்கம் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருந்தால் கருணாநிதி பக்கமும் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருக்கும். இந்த பெட்டிக்கடை அமைப்புகளுக்கு ஜெயலலிதா எந்த தொகுதியை ஒதுக்குகிறாரோ? அதே தொகுதியை கருணாநிதி சார்பிலான பெட்டிக்கடை அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு ஓநாய் காத்திருப்பது போலத்தான். இது கருணாநிதி, ஜெயலலிதாவின் சூழ்ச்சி அல்ல! சாட்சாத் நமது பெட்டிக் கடை இயக்கங்களின் அணுகு முறை தான். தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு 2 கண் போக வேண்டும் என்ற இலக்கணத்தை உணர்ந்து செயல்படும் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் ‘’ஈகோ’’வால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் அதுவும் அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடிகிறது. தி.மு.க –அ.தி.மு.க வீசும் 1 அல்லது 2 சீட்டுகளே தமது கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என நினைத்து செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் போக்கினால் தான் வாரத்திற்கு இரண்டு பெட்டிக்கடை இயக்கங்களின் தோன்றுகின்றன. மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்களை விட முஸ்லிம் சமுதாய மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் வன்னியர் சமுதாயத்தின் அரசியல் சபையான பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்று 6 எம்பிக்களும், 18 எம்.எல்.ஏக்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இரண்டு மத்திய அமைச்சர் பதவியும் உள்ளபோது நமது சமுதாயத்தின் பிரதி நிதித்துவம் “0” பூஜ்ஜியமாய் இருப்பதற்கு என்ன காரணம்? அரசியல் ரீதியாக வன்னியர் சமுதாய மக்கள் பா.ம.க என்ற குடையின் கீழ் திரண்டு விடுகிறார்கள் அவர்களுக்குள் ஏராளமான பெட்டிக்கடை இயக்கங்கள், லெட்டர் பேடு அமைப்புகள் கிடையாது ! இதே போன்ற உணர்வு முஸ்லிம் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? எல்லாம் தங்களுக்குள் இருக்கும் சுய நலமும், எல்லோரும் தலைவர்களாக வேண்டும் என்ற கேவலமான சிந்தனைகளும் தான் ! அதனால் தான் ஒவ்வொரு பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களும் நாம் மேலே சொன்னது போல் குளு குளு ஆடம்பர கார்களில் பந்தாவாய் வலம் வருகின்றனர். ஒற்றுமை குறித்த இறை வசனத்தையும், நபிவழியையும் புறக்கணித்து விட்டு மேடை தோறும் ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசும் ஒவ்வொரு இயக்கவாதியின் பேச்சும் பைத்தியங்கள் தெருவில் கத்துவது போலத்தான் !

எவர் இயக்கம் ஆரம்பித்தாலும் உடனே வசூல் கொடுக்கும் பாமர மக்களின் தவறான அணுகுமுறைதான் ! திரட்டப்பட்ட பணத்தை பங்கு வைக்கும் போது பிரச்சினை ஏற்பட்டு ஒவ்வொரு இயக்கங்களும் இரண்டாக பிளவுபடுகிறது. இயக்கவாதிகளின் முக்கிய நோக்கமே வசூல் என்பதுதான். எனது பாசத்திற்கும், மரியாதைக்குமுரிய சமுதாய சகோதர, சகோதரிகள் அனைவரும் அல்லாஹ் ரசூலுக்கு பயந்து இனிமேல் எந்த இயக்கத்திற்கும், எதற்காகவும் நயா பைசா கொடுக்க மாட்டோம் என உறுதி கொண்டு நடைமுறை படுத்திப் பாருங்கள். எல்லா பெட்டிக்கடை இயக்கங்களும் காணாமல் மறைந்து விடும். சமுதாயத்தின் பெயரால் அவ்வப்போது நிகழும் பிரிவினைகளும் பிளவுகளும் ஏற்பட ஒரு வகையில் இயக்கங்களுக்கு வசூல் கொடுக்கும் பொதுமக்களும் காரணமாகி விடுவதால் நாளை மறுமையில் இயக்க வாதிகளின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய இறைவனின் கேள்விக்கு வசூல் கொடுத்த பொதுமக்களும் தான் பதில் சொல்லியாக வேண்டும். எனதருமை பொது ஜனங்களே ! ஜகாத்,பித்ரா, கூட்டுக்குர்பானி போன்ற இறைவனுக்குரிய அமல்கள் விஷயத்தில் உங்களது தர்மங்களை எந்த இடைத் தரகர்களிடமும் புரோக்கர் இயக்கங்களுக்கும் கொடுக்காமல் நீங்களே நேரடியாக உங்களை சுற்றி இருக்கும் ஏழைகளுக்கு மறைமுகமாக கொடுத்து அதற்குரிய நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரே ஒரு வருடமாவது இதை நடைமுறை படுத்திப் பாருங்கள். அனைத்து பெட்டிக்கடை இயக்கங்களும் அழிந்து போய் விடும். அதன் மூலமாகவாவது சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படட்டும் ! இன்ஷா அல்லாஹ் !!

சமுதாயக் கவலையுடன்
மெளலவி
கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை.