Showing posts with label பிரச்னை. Show all posts
Showing posts with label பிரச்னை. Show all posts

Wednesday, November 23, 2011

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !



கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்


என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.


என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது


என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்





கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்


என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்


என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள்

சிவந்த உள்ளங்கை


என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்


என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!


ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி


என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்


என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


வாய்




ஈறுகளில் இரத்தம் வடிதல்.


என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்


என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.


என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

நன்றி .குமுதம் சினேகிதி

Sunday, April 19, 2009

பின்னடைவால் பிரச்னையா?

பின்னடைவால் பிரச்னையா?

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.

சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.

வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.

பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

மனித வாழ்வில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. பொருளாதாரப் பின்னடைவும் ஒரு சோதனையே.

"சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். என்றாலும் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக் குர்ஆன் 2: 155).

ஆனால் -

"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை". (திருக் குர்ஆன் 2: 286).

எனவே கவலையை விடுங்கள்!

சோதனைகள் தற்காலிகமானவையே!

"நிச்சயமாக துன்பத்துடன் இன்பமுண்டு. மெய்யாகவே துன்பத்துடன் இன்பமுமுண்டு". (திருக் குர்ஆன் 94: 5-6).

எனவே இத்துன்பத்திலிருந்து மீண்டு விட முடியும் என்று உறுதியாக நம்புங்கள்.

"ஏன் இந்த சோதனை நமக்கு?" என்று சிந்தியுங்கள்.. இறைவனுக்கு நன்றி செலுத்தத் தவறி விட்டோமா - என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இறைவன் கூறுகிறான்:

"நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்" (திருக் குர்ஆன் 14: 7)

இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்துவது? இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டு நடப்பது தான் அவனுக்கு நன்றி செலுத்துவது ஆகும்!

எனவே -

"ஏதாவது பாவமான காரியங்களில் ஈடுபட்டு விட்டோமா?" என்று பாருங்கள். அது வட்டியா அல்லது ஏதேனும் (இறைவன் தடுத்துள்ள) "ஹராமா" என்று பாருங்கள். ஆம் எனில் - அந்தப் பாவங்களில் இருந்து விலகிட் முயற்சி செய்யுங்கள்.

தடாலடி நடவடிக்கை வேண்டாம். ஆர அமர சிந்தித்து முடிவெடுங்கள்.

பிரச்னைகளில் இருந்து வெளியே வர இரண்டு வழிகள்: ஒன்று நேரான வழி. மற்றொன்று குறுக்கு வழி. குறுக்கு வழி இலகுவானது போல் தோன்றும். நேர் வழி "சுற்று வழி" போல் தோன்றும்.

குறுக்கு வழிகளை நாடாதீர்கள். யாரேனும் அதற்கு ஆலோசனை சொன்னால் - உடன் உங்கள் நினைவுக்கு வர வேண்டியவன் நமது ஆதி பெற்றோர் ஆதம்- ஹவ்வா (அலை) இருவருக்கும் முன்னால் வந்தானே அவன் தான்!

ஆனால், நேர் வழியில் நிலைத்திருந்தால் இறைவன் உங்களைக் கை விட்டு விடுவானா என்ன?

"எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

"எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்கி விடுகின்றான். (திருக் குர்ஆன் 65: 4)

அடுத்து - உங்கள் நலம் நாடும் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

"அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள். (திருக் குர்ஆன் : 42: 38)

உங்களைக் குத்திக் காட்டுபவர்கள், உங்களின் நலனில் அக்கரை சிறிதும் இல்லாத அறிவீனர்களைப் புறக்கணியுங்கள்..

"இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (திருக் குர்ஆன் 7: 199)

தேவையற்ற ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்திருந்தால் அவைகளை விற்று விட முயற்சி செய்யுங்கள். விலை உயர்ந்த காராக இருந்தால் விற்று விட்டு விலை குறைந்த கார் அல்லது மோட்டார் சைக்கிள் என்று மாறிக் கொள்ளுங்கள். இதில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை.

உங்கள் கடனை அடைப்பது குறித்து திட்டமிடுங்கள். கடன் கொடுத்தவர்களையே அணுகுங்கள். ஒத்துழைப்பு கிட்டலாம். இல்லாவிட்டால் சட்ட ஆலோசகர்களை அணுகவும்.

ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் பக்கம் செல்லாதீர்கள். சான்றாக நகைக் கடன். வட்டிக்கு வைத்து நகைக் கடன் வாங்குவதை விட அவைகளை விற்று விடுதல் மேல். பிறகு வாங்கிக் கொள்ளலாம் - இன்ஷா அல்லாஹ். கடன்களை அடைத்திட முனைப்பு காட்டுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். கடன் கொடுத்தவர் அதனை மன்னிக்காமல் இறைவன் அதனை மன்னிப்பதில்லை என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.

தேவையற்ற செலவுகளைக் குறையுங்கள். குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆளுக்கு ஒரு செல்ஃபோனா, அறைக்கு ஒரு தொலைக் காட்சிப் பெட்டியா - வேண்டாம்!

"அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்".(திருக் குர்ஆன் 17:26)

அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தியுங்கள்.

முதலில் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருங்கள். அவனிடம் உதவி தேடி துஆ செய்யுங்கள். ஐந்து வேளையும் நேரம் தவறாது தொழுகைக்குச் செல்லுங்கள்.

"நம்பிக்கையாளர்களே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கிறான்". (திருக் குர்ஆன் 2:153)

ஏற்கனவே நீங்கள் செய்த வேலை உங்கள் மனதுக்குப் பிடித்திருந்ததா? அவ்வாறு பிடித்திருந்தால் மட்டும் அதே துறையில் வேறு வேலை தேடுங்கள். இல்லாவிட்டால் - பொருளாதாரப் பின்னடைவே உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்திருப்பதாக எடுத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்த வேறு துறைகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

உங்களை நீங்களே எடை போடவும் இந்த தருணம் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. உங்களின் பலம் எது, பலவீனங்கள் என்னென்ன என்பதை சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் வேலை செய்து கொண்டிருந்த துறை சாராத உங்கள் பலங்களைக் கண்டுணர இதுவே வாய்ப்பு. அது போல, உங்கள் பலவீனங்களை உதறிடவும் முயற்சி செய்யுங்கள்.

வாய்ப்புகளைத் தேடிக் காத்திருங்கள். அதற்கென என்னேரமும் தயாராகக் காத்திருங்கள். தயார் நிலையில் இருப்பவர்களே வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்கின்றனர். நாள்தோறும் நாட்டு நடப்புகளை உலக நிகழ்வுகளை குறிப்பாக உங்கள் துறை குறித்த தகவல்களை சேகரிக்கத் தவறாதீர்கள். ("அடடா! எனக்குத் தெரியாமப் போச்சே!")

ஒரே ஒரு முனையில் மட்டும் முயற்சி செய்தால் போதாது. பல முனை முயற்சிகள் தேவைப் படலாம். அவற்றுள் ஏதாவது ஒன்று நிச்சயம் "க்ளிக்" ஆகும் - இன்ஷா அல்லாஹ்.

தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் நிராசை அடைந்து விடாதீர்கள். இது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

"அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்!" (திருக் குர்ஆன் 39:53)

அதிக கவலை உடல் நலத்தையும் கெடுக்கும். எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஒரு அறிஞர் சொன்னார்: பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது என்றால் பிறகு ஏன் கவலைப் பட வேண்டும். பிரச்னை தீராது என்றால் கவலைப் பட்டு என்ன பயன்? எனவே விடுங்கள் கவலையை!

ஆனால், இது போன்ற தருணங்களில் பெரும்பாலான மனிதர்கள் உணர்ச்சி வசப் பட்டு விடுகிறார்கள். தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் எரிந்து விழுந்து நல்ல மனிதர்களின் உறவுகளைக் கெடுத்துக் கொள்கிறார்கள். எனவே உணர்ச்சி வசப் பட வேண்டாம்.

இந்த இடத்தில் பிரச்னைகளில் சிக்கியுள்ளவர்களைச் சுற்றியிருப்பவகளுக்கும் சில ஆலோசனைகள்:

மனைவிமார்களே!

இந்த நேரத்தில் உங்கள் கணவருக்கு உற்ற துணையாக இருங்கள். கவலையுற்றிருக்கும் உங்கள் கணவரை உற்சாகப் படுத்துங்கள். அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எவ்வாறு நபியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உற்ற மனைவியாகத் திகழ்ந்தார்களோ அது போல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள். நச்சரிக்காதீர்கள்.. செலவினங்களைக் கட்டுப் படுத்தல் உங்கள் கரங்களில் தான் இருக்கிறது, புதிய
நகைகள் பிறகு செய்து கொள்ளலாம். கணவருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருப்பீர்களே, அதை எடுத்துக் கொடுத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

பெற்றோர்களே!

தைரியம் ஊட்டுங்கள் உங்கள் மகனுக்கு. அவசிய செலவுகளைத் தவிர்த்து இதர செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள் அல்லது குறைக்கப் பாருங்கள். ("தம்பி, மச்சான் வந்திருக்காக,. ரெண்டு கிலோ கறி வாங்கிட்டு வாயேன், பிரியாணி போடலாம்!")

வளர்ந்து விட்ட மகன்களே- மகள்களே - உங்களைத்தான்!

உங்கள் தந்தை வசதிக்குத் தகுந்தவாறு பாக்கெட்-மணி தந்திருப்பார்கள். ஒரே ஒரு விடுமுறை நாளைக் கழிப்பதற்காக தம் செல்லச் செல்வங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கும் தந்தைமார்களும் உண்டு. இப்போது உங்கள் தந்தை விழி பிதுங்கிய நிலையில். நீங்கள் என்ன செய்யலாம்? பாக்கெட் மணி வேண்டாம். அவராகக் கொடுத்தாலும் மறுத்து விடுங்களேன். உங்கள் பாசம் அவர் கவலை போக்கும்
மறுந்தாக அமைந்திடும்.

உறவினர்களே!

உங்களைப் பற்றித் தான் பயமாக இருக்கிறது. குத்திக் காட்டுபவர்கள், உள்ளூர மகிழ்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் நீங்களாகத் தான் இருக்கிறீர்கள். ஒரு உறவினர்: "அண்ணே! ச்சீப்பா வந்ததுண்ணேன், ஒரு நாலு மனைக்கட்டு (Plots) வாங்கிப் போடலாம்னு, இந்தப் பத்திரத்தைக் கொஞ்சம் படிச்சுப் பாத்துச் சொல்லுங்கண்ணேன்!"

பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப் பட்டிருக்கும் என்னருமைச் சகோதரர்களே! வேலையும் போய் விட்டது, சேமிப்புகளும் சுருங்கி விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தானே கேட்கிறீர்கள்.

வெறுங்கையுடன் மக்காவைத் துறந்து மதீனா சென்ற அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பாருங்கள். அங்கே அவருக்கு உதவிட முன் வந்த அன்ஸாரித் தோழரிடம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலேயே, வெறும் சாக்குப் பையுடன் கடைத்தெருவுக்கு சென்று, சிறிய அளவில் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி (வெண்ணெய் வியாபாரம் தான்!) பின்னர் - ஒரு பத்து ஆண்டுகளுக்குள்ளேயே மிகப்பெரிய
ஏற்றுமதியாளராகவும், இறக்குமதியாளராகவும் வெற்றி பெற்ற ஒரு வணிகராகத் திகழ்ந்தது உங்கள் சிந்தனைக் கதவுகளைத் திறந்து விடட்டும்.

இந்த வரலாற்றில் உங்களுக்கு மூன்று படிப்பினைகள் உண்டு:

1. வெறுங்கையுடன் கூட நீங்கள் உங்கள் "மறு வாழ்வைத்" துவக்கலாம். கவலை வேண்டாம்.

2. நீங்கள் பணியாற்றிய இடத்தை மாற்றிப் பாருங்கள். ஹிஜ்ரத் வெற்றி தரலாம்.

3. நீங்கள் கம்பெனி கம்பெனியாக வேலை தேடித் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வியாபாரத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தக்க ஒரு துணையுடன் துணிந்து இறங்கிப் பார்க்கலாம். சிறிய அளவில் துவங்குவது நல்லது. வியாபாரத்தில் நேர்மையும், தரமும் அவசியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இங்கே வலியுறுத்துவது என்னவெனில் - இவ்வுலக வாழ்க்கை அற்பமானது என்பதனை மறந்து விட வேண்டாம். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்! மறுமைக்குக் கொஞ்சம் சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.. போதும் என்ற மனம் முக்கியம்.

இக்கட்டான சூழ்நிலைகளிலும் - தர்மம் செய்யுங்கள். அது உங்களின் விதியை மாற்றிட வல்லது.

இதனைப் படிப்பவர்களுடன் சேர்ந்து நாமும் உங்களுக்காக துஆ செய்கிறோம்.

நீங்களும் துஆ செய்யுங்கள்:

"என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்க பலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!" ((திருக் குர்ஆன் 17: 80)


.