Monday, September 20, 2010

கிழட்டு குழியானாலும்..

கிழட்டு குழியானாலும்..


இருப்பேன் என்றும்
இளமையாக மனதளவில்;
உன்னோடு இருக்கும் போது!

வாயில் பொக்கையும்
தலையில் வழுக்கையும்
வந்தாலும் வரவேண்டாம்
நமக்குள் பிரிவு!

தட்டுத்தடுமாறி நடக்கையிலே
நடைக்குச்சியாய் நீ இருக்க
தடையேதுமில்லை என
”விடை”க் கொடுக்க வேண்டும்;
குச்சிக்கு விடைக்கொடுக்கவேண்டும்!


கிழட்டு குழியானாலும்
நமட்டுச் சிரிப்புடன்
கன்னத்தில் குழியென்று
சொல்லி சிரிக்கவேண்டும்!

வாலிப வயதில்
வாழ்ந்துவிட்டோம்
தனித்தனியாக;
இருக்கும் காலமாவது
இணைந்திருபோம்
ஒருவருக்கொருவராக!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

தாகத்தைத் தணிக்க..

தாகத்தைத் தணிக்க..

நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!

வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!

சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!

படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!

நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!


-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

இப்படிக்கு உன் கணவன்.

இப்படிக்கு உன் கணவன்.

அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!

பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!

என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!

கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!

காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!

துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!

துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!

பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!

இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

விடைக்கொடுக்க முடியாமல்..

விடைக்கொடுக்க முடியாமல்..

அடை மழையிலும்
வேலைக்கு விடைக்கொடுக்க
முடியாமல் நான்!

வறுமைக்கு
வாக்கப்பட்டதால்
வயதானக் காலத்தில்
இப்படி!

உயர்வேதும் இல்லை பதவியில்;
உயரம் கூடினாலே
அன்றி!

வரம்பேதும் இல்லை வயதிற்கு;
மூட்டுக்கு
முடிச்சி விழும்
வரை!

இல்லாத செல்வத்தால்
பொல்லாத வறுமை;
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!

கனவேதும் பெரியதில்லை
ஒருநாள் உழைத்ததைக் கொண்டு
மறுநாளும் உண்ண வேண்டும்;
தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!

- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com


இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!
மறைந்துவிடுமென்று!


திருத்திக் கொள்ளவும்..


இஸ்லாமிய சகோதரன்
யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.கம