Thursday, June 26, 2008

மர்ஹூம் குலாம் முகம்மது பனத்வாலா

கேரளீயர்களான கிருஷ்ணமேனன் மும்பையிலிருந்தும், அனந்தன் நம்பியார்
திருச்சியிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை ஜாதி
- மத - இன - பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு
ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்காலத்தில் ஊடகங்கள் உட்பட பலர்
பெருமை அடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம்..

ஆனால், அதே சமயம் ஓசைப் படாமல், ஒன்றல்ல இரண்டு தொகுதிகளில், ஒரு
முறையல்ல பலமுறை இரண்டு
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் ஒரு மாபெரும் புரட்சி நடைபெறக் காரணமாக
இருந்திருக்கிறார்கள். தமிழ்
நாட்டைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்கள் மஞ்சேரித்
தொகுதியிலிருந்தும், மராட்டியத்தைச்
சேர்ந்த பனத்வாலா அவர்கள் பொன்னானித் தொகுதியிலிருந்தும் தொடரத் தொடர
வெற்றி பெற்று சாதனை
படைத்து வந்தார்கள்.

அது எப்படி சாத்தியமாயிற்று ? கேரளத்தில் தலைவர்கள் இல்லையா, இருந்தும்
அவர்கள் இதை ஆட்சேபிக்கவில்லையா, குறைந்த பட்சம் முணுமுணுப்பாவது
கேட்கவில்லையா என்கிற கேள்விகளுக்கான
பதில்: ஏனில்லை. ஜாம்பவான்க்ச்ள் இருந்தார்கள். சி. எச். முகம்மது கோயா,
அப்துர்ரகுமான் பாஃபக்கி தங்கல்,
உமர் பாஃபக்கி தங்கல், இப்ராஹிம் சுலைமான் சேட், அஹ்மது குருக்கள் என்று
முஸ்லிம் லீகிலும், இதுபோக
காங்கிரஸ்ஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏகப்பட்ட பெருந்தலைவர்கள் பலர்
இருந்தார்கள்.

என்றாலும் இந்த இருவரும் தனித்தல்ல, தனித்வத்துடன் நின்றார்கள். உள்ளூர்
வாசிகள் அல்ல என்பது இவர்களுக்கு ஒரு
பலவீனம் என்பதை விட, உள்ளூர் அரசியல் மாச்சரியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் என்பது இவர்களுக்கு
ஒரு பெரும் பலமாகவே அமைந்து போனது.

மும்பையில் , திருச்சியில் நடந்ததை விட, மலையாளியான எம்.ஜீ.ஆரை தமிழகம்
முதல்வராக ஏற்றுக்
கொண்டதை விட கேரள மக்களாகிய தங்களுடைய பெருந்தன்மையின் பிரதிபலிப்பான இந்தச் சாதனை
எந்த வகையிலும், எள்ளளவும் குறைந்த தல்ல என்பது இவர்கள் பெருமையோடு
குறிப்பிடும் ஒரு விஷயம்.

மன்னத் பட்மநாபன், பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோர் தலைமையில் நாயர்
ச்மூகமும் (என்.எஸ்.எஸ்)
ஷங்கர் தலைமையில் ஈழவ சமுதாயமும் (எஸ்.என்.டி.பி) கொடி கட்டிப் போர்
முரசம் முழங்கிய காலம்.
கம்யூனிஸ்ட்களோடு ஆதிக்கப் போட்டியில் இவர்கள் முட்டி மோதியதை அரசியலில்
ஒரு பெரிய போர்க்களம்
என்று வர்ணிக்கலாம். இந்த ஆதிக்கப் போட்டியில் வெற்றியாளர்களைத்
தீர்மானிக்கும் நிர்ணாயக சக்திகளாக
முஸ்லிம் லீக் இருந்தத்து. அவர்களை அரசியல் நீதி தவறாமல் - நெறி பிறழாமல்
வழி நடத்தும் இடத்தில்
காயிதே மில்லத்தும், பனட்வாலாவும் இருந்தார்கள்.

வட கேரளத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிச்சக்தி - மாபெரும் சக்தி. சரியான வழி
நடத்தலில் அவர்கள் தங்கள்
கடமைகளை இறையச்சத்துடன் செய்தார்கள். ஆகவே தங்கள் உரிமைகளை ஆணையிட்டுப்
பெற்றார்கள்.

"பிறையும், பிச்சை பாத்திரமும் ஒரே வடிவு ஆகவே ஒதுக்கீடுகளை பிச்சையாக
யாசிக்கிறொம்" என்று
மணிடியிடவோ - தண் டனிடவோ செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாமல் கேரளத்தில்
ஓர் அரசு அமையவே
முடியாது ன்கிற நிலைக்கு உயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களில் ஒருவரை
- அமரர் சி.எச்.முகம்மது கோயா -
முதல்வராக்கவே முடியும் என்றும் நிரூபித்தார்கள்.

காங்கிரஸ் பல் கூறுகளாகச் சிதறியது போல, கம்யூனிஸ்ட் வலது இடதாக உடைந்தது
போல், முஸ்லிம் லீகும்
காலத்தின் சுழற்சி வேகத்தில் ' யூனியன்' 'தேசிய' என்கிற இரண்டு
கூறுகளாகப் பிளர்ந்தது. ஒரு வகையில் இதுவும்
தோஷம் செய்யாமல், நன்மையே செய்தது. காங்கிரசும் இடது சாரிகளும் மாறி மாறி
ஆட்சிகளைக் கைபற்றீயபோது
முஸ்லிம் லீகின் ஏதாவது ஒரு பிரிவும், எதாவது ஓர் அணியில் இடம் பிடித்து
ஆட்சியிலும் பங்கு கொண்டது.
எனவே, முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளித்துவம் தொய்வில்லாமல் தொடர்ந்து
கிடைத்து வந்தது

பிறகு லஞ்ச-லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பனி மூட்டமாகப் படர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் துணையில்லாமல்
ஆட்சி இல்லை என்கிற நிலை மாறி, முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி வேண்டாம்
என்று சில கட்சிகள் துணிவு
பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.

காந்தபுரம் அபுபக்கர் மவுலவி போன்றவர்களால் முஸ்லிம் லீகின் செல்வாக்கில்
ஓட்டை போட முடிந்ததே தவிர
உடைக்க முடியவில்லை. ஆனால் அப்து நாசர் மாஅதானி போன்ற இளம் தலைவர்களின்
எழுச்சியால் முஸ்லிம்
லீக் கேரளத்தை விட்டே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

யார் எங்கே ஜெயித்தாலும், தோற்றாலும் மஞ்சேரியும் பொன்னானியும் முஸ்லிம்
லீகுக்கே என்ற நிலைமாறி
சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 ல்
'ஊற்றிக் கொண்டு விட' ஒரே ஒரு
தொகுதி மஞ்சேரியில் மட்டும் இப்போதைய மத்திய அரசின் வெளியுறவுத் துறை
அமைச்சர் ஈ.அஹ்மது
முஸ்லிம் லீக் சார்பில் நின்று வென்றிருக்கிறார்.

காயிதே மில்லத்தும் பனத்வாலாவும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்
என்பது அவர்கள் இல்லாமல்
இருக்கும்போதுதான் - அதனால் முஸ்லிம் லீகுக்கு ஏற்பட்ட இழப்புகளை
எண்ணும்போதுதான் நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவர்கள் நாம் சாதாரண அர்த்தத்தில்
புரிந்து கொள்ளும் அதிரடி அரசியல்
நடத்தும் தலைவர்கள அல்ல, மாறாக, கண்ணியத்தின் உறைவிடங்கள். தன்னலம்
கருதாத தியாக சீலர்கள். எனவே அவர்கள்
சொல் எடுபட்டது. செல்வாக்கு அத்தனை தடைகளையும் துளைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய இடங்கள்
வரை சென்றது. கட்டுக்கடங்காதவர்கள் கூட கண்ணியத்துக்கு
கட்டுப்பட்டார்கள். கட்சி கட்டுக் கோப்பாக
இருந்தது.

காயிதே மில்லத் என்கிற தலைவர் காலமான பின்பு கப்பலை கட்டுக்குள்
வைத்திருக்க மலுமி பனத்வாலா
கடுமையாக முயன்றார். ஆனால் காலச் சூறாவளி அதை அனுமதிக்கவில்லை. காலம்
இன்று அவரையும்
கவர்ந்து சென்று விட்டது.

இந்தக் காலத்துக் கட்சிகள் அல்ல, அந்தக் காலத்தில் எந்தக் கட்சியும்
தன்னுடைய த்லைவனாக ஏற்றுக் கொள்ள
விரும்பும் அற்புதத் தகைமைகள் பெற்றிருந்தார், பனத்வாலா. நிறையப்
படித்தார். பிரச்னைகளின் அடி நுனி வரை சென்றார்.
ஆழமாக அலசினார். இந்தக் காலத்துத் தலைவர்களைப்போல் நுனிப்புல் மேயவில்லை.
அதற்கு அவரது மிக
அற்புதமான உரைகளே சான்று.

முஸ்லிம் லீகுடனும், அதன் தலைவர்களுடனும் 'ஹலோ' சொல்லும் அளவுக்குத்தான்
எனக்கு நெருக்கமும் - உறவும்.
ச்கோதரி ஃபாத்திமா முஸஃஃபரும் அவரது கணவரும் விதி விலக்கு.

ஆனால் இலங்கை அதிபரின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களோடு
எனக்கு நெருங்கிய நட்பு
உண்டு. அதன் மூலம் பல பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது திருவனந்தபுரத்தில்
முகம்மது கோயா அவர்களது இல்லத்தில் மதிய உண்வே உண்டிருக்கிறோம்.

ஒரு முறை பனத்வாலாவைச் சந்த்திருக்கிறேன். "உங்களைப் போன்றவர்கள்
எங்களுக்குத் தேவை. ஏன் நீங்கள்
உங்களை லீகில் இணைத்துக் கொள்ளக் கூடாது?" என்றபோது, நான் சிரித்துக்
கொண்டே, "காரியங்கள் போகிற
போக்கைப் பார்த்தால் நீங்கள் கூட லீகில் இருப்பீர்களா என்று எண்ணத்
தோன்றுகிறது" என்றேன். சிரித்தார்.

பக்கதில் இருந்த கேரள ச.ம உறுப்பினர் P.A.P. அஹ்மது கண்ணு சாகிபு, "
நானும் தலம கிட்டே அதத்தான்
சொல்லுகேன்..கேட்கமாட்டேங்குதாவோ" அப்படியென்றால்....!!!

பனத்வாலா," மக்களிடமிருந்து, அதுவும் நம் மக்களிடமிருந்து பாராட்டை
எதிர்பாராதீர்கள். உங்கள் கடமைகளை
நீங்கள் செய்யுங்கள். மிகுதியை இறைவனிடம் விட்டு விடுங்கள் நற்கூலி
கொடுக்க அவனே போதுமானவன்"
என்றார். சத்தியமான வார்த்தை.

அவர் தன் கடமையை முழுமையாகச் செய்தார். இறைவன் தன் அருட் கருணையை அவர்
மீது நிச்சயம்
பொழிவான். சந்தேகமே இல்லை. ஆனால் நாம் அவருக்குரிய பாராட்டை முழுமையாக வழங்கினோமா ?
சென்னை தீவுத்திடலில்தான் பார்த்தேனே !!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com