Tuesday, July 21, 2009

சுடரொளி பரவட்டும் !

சுடரொளி பரவட்டும் !

இறையருளே முழுநிறைவு !

முன்னோட்டம்:

வரலாற்றில் இந்தியாவின் பெருமை எப்பொழுதெல்லாம் பதிவு செய்யப்படுகிறதோ அதுவெல்லாம் முஸ்லிம்களின் ஆட்சியில் இந்தியா பொலிவடைந்தபோதுதான் ! இந்த உண்மை வரலாற்றை உற்று நோக்கினால் மட்டுமே புரியும் !

அஜ்மீர் நாயகத்தின் காலத்தில் துவங்கிய முஸ்லீம்களின் ஆட்சி தென்னிந்திய முஸ்லீமான மாவீரன் திப்பு சுல்தான் வரையும், அதன்பின் இறுதி முகலாயச் சக்கரவர்த்தி பஹதூர்ஷா ஜாபர் வரையும் அந்நியரை இந்த மண்ணில் காலூன்றவிடாமல் எதிர்ப்பதாகவே இருந்தது எட்டு நூறு ஆண்டுகள் இந்திய மண்ணில் சமத்துவம், சகோதரத்துவம், சமநீதியுடன் முஸ்லீம்கள் ஆட்சி புரிந்து இந்திய மண்ணைக் காத்துள்ளனர். குறிப்பாக முகலாயர்களின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது.
நாட்டுப்பற்று:

முதன்முதலில் கி.பி. 1498ல் கொங்கணக் கடற்கரையில் வாஸ்கோடகாமா வந்திறங்கியபோதே குஞ்சாலி மரைக்காயர் வீரம் விளைத்தது நாம் அறிந்ததே !
கி.பி. 1757 மேற்கு வங்காளத்தில் வீரமுடன் எதிர்த்த சிராஜ் – உத் – தெளலா, கி.பி. 1761 முதல் 1799 வரை ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர்கள் ஹைதர் அலீ – திப்புசுல்தான், இவர்கட்குப்பின் இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்பட்ட கி.பி.1806ல் வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் மகன் ஹைதர் தலைமையில் கிளர்த்தெழுந்த வேலூர் புரட்சியிலிருந்து நாடு விடுதலையடையும் வரை இந்திய மண்ணின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் 70 சதவீதம் முஸ்லீம்களே !

இந்திய கெஜட் குறிப்புப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர்நீத்த தியாகிகள் மொத்தம் 17 லட்சம் பேர் ! இதில் 5,68,000 பேர் முஸ்லீம்கள் ! முப்பது கோடியில் சதவிகிதக் கணக்குப்படி 70 சதவீதம் முஸ்லீம்களும் மற்றவர்கள் மொத்தமும் சேர்ந்து 30 சதவிகிதமே இந்த மண்ணிற்காக உயிர்நீத்தோர் ! உண்மை இவ்வாறிருக்க,

காலத்தின் கட்டாயம் :

இன்று இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து உண்மையைக் குழிதோண்டிப்புதை) ஊடகங்களும், பத்திரிக்கைகளும் துவேஷத்துடனும் பிரிவினைவாக வெறியுடனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் நாட்டிற்கு எதிரானவர்களாகவும் திட்டமிட்டே பங்கப்படுத்தி வரும் இந்நாளில்) காலத்தின் கட்டாயமாக பேராசிரியர். எஸ்.ஆபிதீன், பேராசிரியர். ப. இப்ராஹீம் இருவரும் சேர்ந்து மறைக்கப்பட்ட முஸ்லீம்களின் தியாகத்தை சிறிதளவாவது வெளிச்சத்திற்குக் கொண்டு) பச்சை இரத்தமாகத் தம் உள்ளுணர்வுகளைப் பேனாவில் ஊற்றித் தெளித்துள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்தில் மறைக்கப்பட்டவர்களை, மறக்கடிக்கப்பட்டவர்களை நன்றியுடன் வெளிக்கொணரும் மகத்தான இவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது
பச்சை இரத்தம் :

நூலின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மில் நிறையப்பேர் அறியாத தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்நூலில் ஆங்கிலேயர் எப்படி நம்மைப் பிரித்தனர் என்பதை பக் 18ல் கி.பி. 1817ல் ’’பிரிட்டிஷ் இந்திய வரலாறு’’ தொகுத்த “ஜேம்ஸ்மில்” இந்திய வரலாற்றை மூன்றாகப் பிரித்து 1. இந்து இந்தியா 2. முஸ்லீம் இந்தியா 3. பிரிட்டிஷ் இந்தியா என இந்திய வரலாறு மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிகழ்வை ஆசிரியர் நன்கு பதிவு செய்துள்ளனர்.

ஹூக்ளி நதிக்கரையில் கி.பி. 1757 ஜூன் 23ல் ஆங்கிலேயரின் கைப்பாவை மீர் ஜாபர் எனும் நயவஞ்சகனால் சிராஜ் உத் தெளலாவை வெள்ளையர் வீழ்த்தியதைக் குறிப்பிடும் வேளை இதுவரை நாம் அறியாத தகவலான மீர் ஜாபரின் மருமகன் மாவீரன் மீர்காசிம் ஆங்கிலேயரை எதிர்த்து 1777 ல் வீரமரணம் அடைந்தது!

ஐரோப்பிய முறையிலான மாவீரன் கான்சாகிபின் படையெடுப்பைச் சமாளிக்க முடியாமல் தவித்த ஆங்கிலேயர்கள் தங்களது நயவஞ்சகம் மூலமே வீழ்த்தியது. கி.பி. 1766ல் கான்சாகிபை தியாக தீபமாக்கியது !

கி.பி. 1663, 1670 களில் கோல்கொண்டாவின் கமான்டர் இன் சீப் ஆக இருந்து ஆங்கிலேயரை அலறவைத்த மாவீரன் நெக்னமீகான்!

எனது தாய் நாட்டு விடுதலைக்காக கி.பி. 1857 ஜூன் 4ல் ஆங்கிலேயரிடம் இறுதி மூச்சுவரை போராடுவேனே தவிர மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்று மரணதண்டனை ஏற்று வீர மரணமடைந்த வீர மங்கை அசீசான் பேகம்!

மதான் என்பவன் காட்டிக் கொடுக்கத் தம் 27வது வயதில் கலிமா உரைத்துத் தூக்குக் கயிற்றைத் தாமே மாட்டிக் கொண்ட தியாகி அஸ்பத்துல்லாகான்.

புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவருமே தியாக தீபங்களே ! நெஞ்சில் நெருடும் ஒரே நிகழ்வுடன் நிறைவு செய்கிறேன்.

1943ல் ரங்கூனில் நேதாஜியின் மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த அமீர் ஹம்ஸாவின் இன்றைய நிலை நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது.

கடந்த மே 27 – 2007 சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இனமானத்தலைவர் பேராசிரியர். க. அன்பழகன் அவர்கள் கலைவாணர் அரங்கினுள் வரும் போது பிறர் தடுக்கத் தம் தள்ளாத வயதில் முட்டி மோதிக் கொண்டு தமது பேத்தி படிப்பிற்காக ஏதாவது உதவி செய்யுங்கள் என்று நா தழுதழுக்க அவர்கள் கேட்டபோது நம் ஒவ்வொரு அணுவும் அழுதது ! உண்மையான போராட்ட தியாகிகளின் உண்மைநிலை இதுவே.

விலைமதிக்க முடியாத வைரம் மறைவாகவே மண்ணுள் இருக்கக் குப்பைகள் மண்மேல் கிடப்பது உலக நியதி ! மறைக்கப்பட்ட தியாகிகளின் வரலாறு வெளிச்சத்திற்கு வரட்டும் ! உண்மை சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றுச் சுடரொளி பரவட்டும் ! வாழ்த்துக்களுடன்

எம்.கே. ஜமால் முஹம்மது
எண் 15/1 எஸ்.ஜி. வலசு, அசோகபுரம், ஈரோடு 638 004
செல் : 94437 02958


நாள் : 12 ந‌வ‌ம்ப‌ர் 2008