Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Wednesday, October 6, 2010

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=311421&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.
மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...
அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!

நன்றி -தினமணி

--

Saturday, October 2, 2010

அரசியல்தனமான தீர்ப்பு!

தலையங்கம்: அரசியல்தனமான தீர்ப்பு!

First Published : 01 Oct 2010 03:12:45 AM IST

Last Updated : 01 Oct 2010 03:15:36 AM IST

Saturday, March 6, 2010

தலையங்கம்:ஊருக்குத்தான் உபதேசம்!

தலையங்கம்:ஊருக்குத்தான் உபதேசம்!

First Published : 06 Mar 2010 02:36:00 AM IST

Last Updated : 06 Mar 2010 06:15:47 AM IST

ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதை ஒன்று உண்டு. கங்கைக் கரை ஓரமாக உள்ள ஒரு கிராமத்தில் வாழும் யாதவகுலப் பெண்கள் சிலர் தினமும் தலையில் மோர், தயிர் மற்றும் வெண்ணெயைக் கலயங்களில் சுமந்து கொண்டு கங்கையின் மறுகரையிலுள்ள கிராமங்களில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர்.

தினமும் காலையில் ஓடத்தில் கங்கையைக் கடப்பதும், மாலையில் அதேபோல ஓடத்தில் ஏறித் தங்கள் கிராமத்துக்குத் திரும்புவதும் வழக்கம்.

ஒருநாள் மாலையில் மறுகரையில் இருந்த ஓடத்துக்காகக் காத்திருந்த அந்த யாதவப் பெண்களை அருகிலிருந்த கிருஷ்ணன் கோயிலில் நடந்து கொண்டிருந்த உபந்நியாசம் கவர்ந்திழுத்தது. அந்தப் பெண்களும், பக்தர்கள் கூட்டத்துடன் அமர்ந்து கேட்டனர்.
ஓடத்தில் ஏறித் தங்களது வீட்டுக்கு வந்த பிறகும், அந்தப் பெண்களின் மனதிலிருந்து உபந்நியாசகர் சொன்ன ஒரு கருத்து அகலவில்லை. நமது பக்தி
அப்பழுக்கில்லாததாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்குமேயானால், நமக்கு அளப்பரிய சக்தி ஏற்பட்டுவிடும். உதாரணத்துக்கு, "கிருஷ்ணா' என்று மனதை ஒருமுகப்படுத்தி வேண்டினால், கங்கையைக்கூட நடந்து கடந்து விடலாம்...' என்பதுதான் அந்த மோர் விற்கும் யாதவப் பெண்களை மிகவும் பாதித்த கருத்து.
அடுத்த நாள் அதிகாலையில் கங்கைக்கரையில் கூடிய அந்தப் பெண்கள் தாங்கள் ஏன் உபந்நியாசகர் சொன்னதைச் செய்து பார்க்கக்கூடாது என்று நினைத்தனர். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண்கள் கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்திக் கண்ணனை நினைத்தபடி, தயிர்க் கலயங்களுடன் நடக்கத் தொடங்கினர். என்ன அதிசயம்? நிஜமாகவே அவர்கள் கங்கையை நடந்து கடந்துவிட்டனர்.

அன்றுமுதல் தினமும் கண்ணனை நினைத்தபடி கங்கையை நடந்து கடக்கத் தொடங்கிய அந்தப் பெண்கள் ஓடக்காரனுக்குக் கொடுத்து வந்த கூலியை ஓர் உண்டியலில் சேர்த்து வைத்தனர். தங்களுக்கு இறையுணர்வை ஏற்படுத்திய, கங்கையை நடந்து கடக்க வழிவகை செய்த மகானான உபந்நியாசகரைத் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்து கௌரவிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசையை கிராமத்தவர்களும் ஆமோதித்தனர்.
உபந்நியாசகரும் ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்தப் பெண்கள் உபந்நியாசகரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தனர். மறுகரையில் தெரிவதுதான் தங்களது கிராமம் என்று உபந்நியாசகருக்குக் காட்டினார்கள். உபந்நியாசகர் கேட்டார்-""எங்கே ஓடம்?''

""ஓடமா?, நீங்கள் சொல்வதுபோல நாங்கள் "கிருஷ்ணா' என்றபடி நடந்துதான் போகிறோம்'' என்றபடி அந்தப் பெண்கள் கங்கையின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் நடக்கத் தொடங்கினர். உபந்நியாசகர் விட்டால் போதும் என்று பிடித்தார் ஓட்டம்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்தக் கதைதான் நாளும் பொழுதும் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. பரமஹம்ச நித்யானந்தர் போன்ற சில ஆன்மிகவாதிகளின் செயல்பாடுகள் மட்டுமல்ல, நமது முன்னணி அரசியல் மற்றும் சமுதாய வழிகாட்டிகளின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன. அரசியல் அசிங்கம் ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் அரங்கேறியது. ஆன்மிக அசிங்கம் ஆசிரம அறையில் அரங்கேறி இருக்கிறது.
மேலைநாடுகளில் தனிமனித ஒழுக்கம் என்பது அறவே இல்லை என்கிற நிலைமைதான். ஆனால் அவர்கள் தங்களது தலைவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இங்கே நிலைமை தலைகீழ். தனிமனிதர் ஒழுக்கமாக இருக்கிறார். அவரது அரசியல் மற்றும் ஆன்மிக வழிகாட்டிகள் ஒழுக்கக்கேடின் ஒட்டுமொத்த உருவங்களாகத் தொடர்கிறார்கள்.

தவறு அவர்கள் மீதல்ல. நம் மீதுதான். இவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களது வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் உரிமையை நமக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறதே. நாம் ஏன் தொடர்ந்து தவறானவர்களை மட்டுமே தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறோம்?
இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த ஒரே ஒரு தீர்க்கதரிசி அண்ணல் மகாத்மா காந்தி மட்டுமே. பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்களுக்கு வழிகாட்டினால் மட்டும் போதாது, வாழ்ந்தும் காட்ட வேண்டும் என்பதை வற்புறுத்திய மகான் அவர். அந்த மாமனிதரின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளியதால் இந்திய சமுதாயம் அடைந்திருக்கும் பின்னடைவுதான் இது.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம்மை ஓர் "ஆக்டோபஸ்' போலப் பிடித்திருக்கும் கார்ப்பரேட் கலாசாரத்தின் கோர முகங்களில் ஒன்றுதான் காளான்கள்போல உருவாகி இருக்கும் சாமியார்களும், யோகா குருக்களும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அளப்பரியது. அவர்களது மூளை கசக்கிப் பிழியப்படுகிறது. அந்த அழுத்தத்தைக் குறைக்கிறோம் என்கிற பெயரில் பல யோகா மற்றும் தியான ஆசிரியர்கள் காவி உடை தரித்துக் களம் இறங்கி இருக்கிறார்கள்.

இவர்களை முற்றும் துறந்த முனிவர்களாகவும், தேவதூதர்களாகவும், சாப விமோசனம் தரும் ஜீவன் முக்தர்களாகவும் கருதினால் அது யாருடைய தவறு? காவி உடையில் நடமாடும் போலிகளை யோகிகள் என்று நம்பி யார் ஏமாறச் சொன்னது?
அது ஒருபுறம் இருக்கட்டும். தவறுகளை மக்களுக்கு அடையாளம் காட்டி சமுதாயம் சீர்கெடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கு இல்லை. அதேநேரத்தில், மீண்டும் மீண்டும் தவறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம் என்கிற பெயரில் ஆபாசப் படத்தை ஒளிபரப்பி மக்கள் மனதில் அருவருப்பை ஏற்படுத்தியதை எப்படி ஏற்றுக்கொள்வது?

தமிழகத்திலுள்ள பெருவாரியான பெற்றோர்கள் தங்களது வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து விடலாமா என்கிற அளவுக்கு ஆத்திரமடைந்தனரே, என்ன கொடுமை? குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்று பயந்தனரே, இது என்ன நியாயம்? இதற்குப் பெயர் சமுதாயப் பொறுப்பா? இதன் மூலம் தனது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த நினைக்கும் கீழ்த்தரமான வியாபாரத் தந்திரம் குமட்டலை ஏற்படுத்துகிறதே...
ஒரு புலனாய்வுப் பத்திரிகை, சாமியாரின் களியாட்டக் குறுந்தகடைத் தனது இணையதளத்தில் வெளியிட்டு, கட்டணம் வசூலித்தது. சுமார் 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாம். வெட்கக்கேடு...

""பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காட்டப்படும் செய்திகளும், படங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர் நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும். அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது'' என்கிற தமிழக முதல்வரின் அறிக்கை பொறுப்புணர்வுடன் வெளியிடப்பட்ட ஆதங்கம்.
நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!

சகிக்கவில்லை...

Saturday, February 27, 2010

சுதந்திரம் பறிபோகிறது...?

தலையங்கம்: சுதந்திரம் பறிபோகிறது...?

27 Feb 2010

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.
விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்
ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?
முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?
பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''

Thanks : Dinamani
சீச்சீ... சிறியர் செய்கை!