Monday, January 21, 2008

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி

2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக
உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ்
எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி,
வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட
வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத்
தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே
முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய
எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ
கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.

2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த
தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று
சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில்,
இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும்
எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க
அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை.
அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே
உள்ளது.

இன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி
விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து
கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை
என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும்
எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக,
ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை
மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக
எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம்
நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

கட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக
விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம்
என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை
உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி
அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால்
இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும்
பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள்
நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு
எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல்
மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை.
இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும்
சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான்
ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன்
கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த
இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும்
அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த
எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில்
எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து
வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற
அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.

கணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான
சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம்
கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும்
இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே 'தமிழின் மரபை
அறியாதவர்கள்' என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு
எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட
அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய
இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு
சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன
திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் 'சிறப்பாக' இங்கு
வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில்
இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த
சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம்
கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற
போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த
வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை
முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை
வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது,
வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை
திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன்
கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச்
சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய
சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.]
தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக
பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய
புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச்
சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில்
வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தாலும், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய
சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத்
திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத்
திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன்
நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின்
தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில்
ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின்
தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத்
திரட்டிகளே விளங்குகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும்
இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம்.
பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை
விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின்
மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது.
உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம்
கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை
பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல்
நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும்
ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும்
பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால்
இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய
சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு
எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

வலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம்
இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு
வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு
ஊடகங்களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட
விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள்
இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப்
பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே
வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில்
வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது
யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள்
குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது
என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன்
மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர்
வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார்
எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான்
இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள்
உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி,
யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும்
உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும்
உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம்
சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும்.
வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும்
கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில்
நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும்
காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.

வலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா
ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே
இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின்
முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை
வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள்
நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத
எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக்
கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

அதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு
மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு
ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது,
வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள்
நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை
தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு
வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது
நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல
விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய
பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும்
வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு,
இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக
செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில்
சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச்
சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற
பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும்
நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில்
சீரடையலாம்.

வலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை
அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில்
பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான
வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும்.
இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில்
யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது
எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம்.
மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு
இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச்
செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை
வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும்
குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து,
தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை,
பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது
முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை
வலைப்பதிவுக்களை '15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்' என்று
சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும்,
அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை
எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது
'செய்தி ஊடகம்' என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம்
மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக
எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.

*சில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால்
பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)*

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com
http://tamilblogs.com/a/index.php
http://www.tamilveli.com/
http://www.thamizhbharathi.com/

*பரவலான இணைய உலக பயன்பாடுகள்*

கும்மிப் பதிவுகள்
மொக்கை பதிவுகள்
ஆணி பிடுங்குதல்
பொட்டி தட்டுதல்
பின்னூட்டாங்கள்
அனானி
எலிக்குட்டி சோதனை
உள்குத்து
முதுகு சொறிதல்
சுய சொறிதல்
சுட்டி
உரல்
ஓடை
டிஸ்கி

*இணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்*

அரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys)
வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள்
வலைப்பதிவுலகில் அடிக்கடி :) :)) :P :> :( :(( X-( :D போன்ற குறியீடுகளைச்
சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு
விஷயம்! இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள்
இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை
அறிய இணையத்தில் மேயவும்.

நன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.

--
Thanks and regards,
Haranprasanna
vhprasanna@gmail.com

Visit:http://www.anyindian.com/ - To Purchase books online.
Visit: http://www.nizhalkal.blogspot.com/ - To read my postings.

ஆசிரியர் இல்லாத வகுப்பில் கும்மாளமடிக்கும் குழந்தைகள் போலவே நாம்
இணையத்தை பயன்படுத்துகிறோம். கண்டிப்பாக இன்னும் ஐந்து வருடங்கள்
வலைப்பதிவுகள் பெரிய கவனத்தையும், பிரபலமாகவும் ஆகும். அப்போது பழைய
வலைப்பதிவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் பங்கு என்பது என்னவென்றே
அவர்களே விளங்கிக் கொள்ளமுடியாத தோற்றத்தையும் தலைக்குனிவையும்
தரும். நமக்கு ஒரு எழுத்தாளரை பிடித்து விட்டதென்றால் அவரின் பழைய
படைப்புக்களை எங்கெல்லாமோ தேடுவோம். இதுவரை வலைப்பதிவுகளின்
அந்த தாக்கம் எனக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் அமைந்திருக்கிறது.
யாரும் பழையதை கிண்ட போவதில்லை, இன்று நான்கு பேர் கைகட்டி நகைக்க
சமைக்கப்படும் உப்புமாக்கள் அதிகம். மேலும் இணையத்தில் எழுதுபவர்கள்
பெரும்பாலானோர் பரவலான வாசிப்பனுபம் அற்றவர்களாக இருப்பதுவும் காரணம்.
அப்படி இருப்பவர்கள் வீண் கும்மிகளில் கவனத்தை திருப்ப மாட்டார்கள்.
கிடைத்த சொற்ப நேரத்தில் பதிவிடுபர்களும், கிடைக்கும் சொற்ப இடைவெளியில்
பணியை செய்பவரும் நிறைந்த உலகம் இந்த வலைப்பதிவுலகம். தொழில்முறை
எழுத்தாளர்களுக்குரிய பொறுப்புணர்ச்சி அற்ற சமுகத்தில் வேறென்ன
எதிர்பார்க்கிறீர்கள்?
என்பது போன்ற கேள்விகள்தான் மனதில் எழுகின்றன.

உங்களுக்கு தோன்றிய பெரும்பாலான கருத்துக்கள் அனைவர் மனதிலும் இருக்ககூடியதே
ஆனாலும் செயல்பட அல்லது தற்"போதைய" இருப்பை விட்டு வெளிவர
விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கிறோம், எதிர்காலத்தைப் பற்றி எங்களுக்கென்ன
கவலை? எங்கள் பதிவுகளை நாங்களே மீள்வாசிப்பு செய்வதில்லை!

நல்ல அலசல் ப்ரசன்னா! உங்கள் எதிர்கால இணையம் மற்றும் தமிழ் இணைய
வரலாற்றில் வலைப்பதிவுகளின் பகுதி பற்றிய சிந்தனை ஒவ்வொருவரும் உணர்ந்து
கொள்ள வேண்டியது அவசியம்.

-கதிர்-

flashkathir@gmail.com
Maraththadi@yahoogroups.com