Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

Sunday, September 16, 2012

தினமணி - ஆஸ்திரேலியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழி!


தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி என்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்கிறோம். ஆனால், தமிழ் எப்போது ஒரு மொழியாக உருவாகியிருக்கும் என்பதற்கு போதிய சான்றுகள் நம்மிடம் இல்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வக்குடிகளின் மொழிகளை ஆய்வு செய்வதன் மூலம் இதற்கு விடை காண இயலும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் 200 மொழிகளுக்கு மேல் பேசி வந்திருக்கின்றனர். இவற்றுள் தற்போது இருபதிற்கும் குறைவான வட்டார மொழிகள்தான் பயன்பாட்டில் உள்ளன. இவற்றிற்குத் தனி வரிவடிவம் கிடையாது. ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 50,000. இவர்களில் 30,000 பேர் மட்டுமே தங்கள் தாய்மொழியை ஓரளவு பேசுகின்றனர். இவர்கள் பேசும் மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150. இம்மொழிகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. வெவ்வேறு 15 குடும்பங்களின் வழித் தோன்றல்கள் இம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு மொழியையும் 5000 பேருக்கு மேல் பயன்படுத்துவோர் இல்லை. பத்து மொழிகளைப் பேசுவோர் மொத்த எண்ணிக்கை 1,000. "ஆராண்டா" என்னும் மொழியை ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) என்னும் மத்திய ஆஸ்திரேலியப் பகுதியில் இருக்கும் நகரைச் சுற்றியுள்ளவர்கள் பேசுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முக்கியமான மொழி "பிதாஞ்ச ஜாத்தா" இன்னொரு மொழி "வால் ம ஜாரி". முன்பு ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா, நியூகினி, இந்தோனேசியா ஆகியவற்றின் நிலப்பகுதி இந்தியாவோடு நெருங்கி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கின்றனர். இடையிடையே நீர்ப்பகுதிகள் இருந்தாலும் அவற்றின் தூரம் குறுகிய அளவிலேயே இருந்தது என்று நிலநூல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர்கள் மீனவர்களாகவும் கடற்கரைப் பகுதிகளில் உணவைத் தேடிச் சென்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு மிக விரைவாகச் சென்றிருக்க முடியாது என்கிறார் மரபணு விஞ்ஞானி ஸ்பன்சர் வெல்ஸ். கிரஹம் வால்ஷ் என்பவர் வட ஆஸ்திரேலியாவிலுள்ள கிம்பர்லி என்னும் இடத்தில், பாறையில் தீட்டப்பட்ட பழைய சித்திரம் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார். 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் அதில் 29 பேர் படகு ஒன்றில் இருப்பதாக வரையப்பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ்:- தென் இந்தியாவில் வசிக்கும் பிறமலைக் கள்ளர் என்னும் பூர்வக்குடிகளின் இரத்தத்தில் உள்ள மரபணுவும், ஆஸ்திரேலியக் குடிகளின் மரபணுவும் (M130) ஒன்றுபோல் இருக்கின்றன என்று கூறினார். ஸ்பென்சர் கூற்றுப்படி ஆப்பிரிக்காவிலிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென் இந்தியா வழியாக ஒரு பகுதி மக்கள் தென் கிழக்கு ஆசியா, நியூகினி ஆகியவற்றின் வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்தனர் என்று தெரிகிறது. கடைசி உறைபனி (Last Ice Age) காலத்தில் இந்தக் குடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கடல் நீர்மட்டம் உயர்ந்தபோது இந்தியத் துணைக்கண்டம் தென் கிழக்காசியாவில் இருந்து துண்டித்துப் போகும் நிலை ஏற்பட்டது. குமரிக் கண்டம்: தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும், அது கடலில் மூழ்கிப்போனது என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி''. என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார். "பஃறுளியாறு" - கங்கை போன்று பெரிய ஆறு என்றும், குமரி மலை இமயமலைக்கடுத்த பெரு மலை என்றும் ஊகிக்கலாம். இடைச்சங்க காலத்தில், பாண்டிய நாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கிய பின் தமிழகத்தில் பெரிய ஆறாக இருந்தது குமரியாறே. "தெனா அதுருகெழு குமரி'' (புறம் - 67) கடைச்சங்க காலத்திற்குப் பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியும் குமரியும் மூழ்கிய பின்னரே, "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே''. என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்தில் சிறந்த, சோழ நாடு, புனல் நாடு எனப்பட்டது. (பழந்தமிழராட்சி ஞா.தேவநேயப் பாவாணர்). தமிழ் இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்க்கும்போது குமரிக் கண்டம் நீரில் மூழ்கிப் போவதற்கு முன்பு, ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் இக்கண்டம் வழியாகச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஸ்பென்சர் வெல்ஸின் மரபணு ஆய்வு மெய்ப்பிக்கிறது. பேசியது என்ன மொழி? தமிழகம் வழியாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் சென்றனர் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் என்ன மாதிரியான மொழி பேசியிருக்கக் கூடும் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. தமிழகம் மூலமாகச் சென்றதால் அவர்கள் பேசும் மொழிகளில் ஏதேனும் தமிழ்ச் சார்ந்த சொற்கள் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறியது. அண்மையில் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் இருக்கும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளைப் பற்றிய சிறிய ஆய்வினை மேற்கொண்டேன். என்னுடைய யூகம் சரியாக இருந்தது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பேச்சு வழக்கில் இருக்கும் அவர்களின் மொழிகளில் சில சொற்கள், இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிச் சொற்களாகவே இருக்கின்றன. * முட்டி - muti : கை, கால் முட்டிகளை முட்டி என்றே ஆஸ்திரேலியப் பூர்வக் குடிகள் கூறுகின்றனர். * பிறை - pira : இளம் திங்களைப் பிறை என்கிறோம். அவர்கள் சந்திரனை இப்படிக் கூறுகின்றனர். * வல்லூறு - waluwuru: கழுகுக்கு வல்லூறு என்றும் பெயர் உண்டு. ஒருவகைக் கழுகை அவர்கள் இப்படி அழைக்கின்றனர். * காகம் - kaanka: காகத்தை "கான்கா" என்கின்றனர். * புற்று - putu: புற்று என்பதை நாம் புத்து என்று பேச்சு தமிழில் வழங்குகின்றோம். அவர்களும் (எறும்பு) புற்றை = புத்து என்றே கூறுகின்றனர். * கிளி - killy : கிளியை அவர்கள் "கீளீ" என்கின்றனர். * குட்டன் - kuta: தமிழில் குட்டம் என்றால் மகள். அவர்கள் அண்ணனை குட்டா என்றழைக்கின்றனர். * வால் - walu, waly: வால்,வாலிது ஆகிய சொற்களுக்குத் தமிழில் வெண்மை, தூய்மை ஆகிய பொருள்கள் உண்டு. கடவுளை "வாலறிவன்" (வால் அறிவன்) என்கிறார் வள்ளுவர். வாலறிவன் என்றால் "தூய அறிவுடையவன்" என்று பொருள். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் வெள்ளை நிறத்தை wala, waly என்றழைக்கின்றனர். அவர்கள் வெள்ளைக்காரரை walypara என்றும் வெள்ளைக்காரியை walypala என்றும் அழைக்கின்றனர். * இலகரி - Ilakari: நீண்ட அகன்ற பொந்திரைக்குத் தமிழில் இலகரி என்று பெயர். அவர்கள் நீண்ட வான்வெளியை இவ்வாறு அழைக்கின்றனர். * மங்குல் - munga: பகல் பொழுது சிறிது சிறிதாக மங்கிக்கொண்டு வந்து, இறுதியில் இருட்டாகிறது. இத்தகைய இருட்டுதான் இரவு. ஆஸ்திரேலியப் பழங்குடியினர் இரவுப் பொழுதை இவ்வாறு கூறுகின்றனர். "மங்குல்" என்னும் சொல்லுக்குத் தமிழில் இருள் என்னும் பொருள் உண்டு. இன்னும் சில சொற்கள் சிதைந்த நிலையில் வழங்கிவருகின்றன. எ.கா:- இல்லம் - yiwalu; பறத்தல் - parkani மேற்குறிப்பிடும் சொற்கள் pitgantjatjara என்னும் வட்டார மொழியில் காணப்படுகின்றன. இந்த மொழி வட ஆஸ்திரேலியாவிலும் தென் ஆஸ்திரேலியாவிலும் பேசப்படுகிறது. 50,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை இன்னும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறியும்போது வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இவர்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்த தமிழ் மொழியைத் தங்களோடு கொண்டு சென்றுள்ளனர். பயன்படுத்தியவை தனித்தமிழ்ச் சொற்கள். வடமொழிக் கலப்பு இல்லாதவை. இறுதியாக:- ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் பேசும் மொழியில் பயன்பாடு காணும் தமிழ்ச் சொற்கள் மூலம், தமிழ்மொழி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழி என்பது உறுதியாகத் தெரிகிறது. க.கந்தசாமி "மலேசிய அறிமுக மலர்" மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம். நன்றி:- தினமணி

தினமணி - அயல்மாநிலத் தமிழர்களும், தாய்மொழிக் கல்வியும்


அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த உலகத்தில் கல்விதான் மக்களின் நலத்தையும் வளத்தையும் தீர்மானிக்கிறது. பன்மொழிச் சூழல் நிறைந்த இந்தியாவில் தாய்மொழிக் கல்வி என்பது பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கின்ற மக்களிடம் தாய்மொழிக் கல்வி இன்னும் முழுமையாகச் சென்று சேராத நிலையே தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழி கல்விமொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருந்து வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களிலும் மாநில மொழிகளின் செல்வாக்குக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும், அம்மாநில உள்ளாட்சி அமைப்பும் தாய்மொழி வழிக் கல்வியைப் பயிற்றுமொழியாக்க தொடக்கக் கல்வியில் தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தல் வேண்டும் என்றும், மொழிரீதியான சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இவ்வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருந்தாலும், இன்னும் இந்த இலக்கை எட்டமுடியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். அயல் மாநிலங்களில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தக்கவைத்துக்கொள்ளவும், தங்களுக்கான தாய்மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளவும் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு குழந்தை தானாகவே உள்ளூர் மொழியை தனது முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறது. பேச்சு வழக்கின் தரத்தை அக்குழந்தை கற்றிட மேலும் அதிக வலுவுள்ள கற்கும் சூழலை, அனுபவத்தைப் பெறுதல், உருவாக்கித் தருதல், பேசவும் கவனிக்கவும் ஒரே மொழியாக இருக்கும் சூழலில் கணிசமான குறிப்பிடத்தக்க அளவிற்கு அக்குழந்தை கற்றுவிடும். ஆனால், அயல் மாநிலங்களில் புறச்சூழலில் தாய்மொழி இல்லாத நிலையில் வாழும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய தாய்மொழி அறிவு கிடைப்பதில்லை. இடம்பெயர்ந்த தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகவும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநிலமொழியின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தமிழின் பயன்பாடு குறையத் தொடங்கும். இது இறுதியில் மொழி இழப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே, அயல்மாநிலத் தமிழர்கள் மொழித்தக்கவைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் பிற மொழிப் பயன்பாடு இருத்தல் கூடாது. வீட்டுமொழியாக முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் பயிற்சியைப் பெற்றோர் பெறவேண்டும். அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்ல மறக்கக்கூடாது. பள்ளிகளில் தமிழைப் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி, தமிழைச் சொல்லித்தர முன்வர வேண்டும். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழியின் தேவையைக் குழந்தைகளின் மனங்கொள்ளுமாறு பதிவுசெய்ய வேண்டும். இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்று குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் விழிப்புடனிருந்து அடிப்படைத் தமிழை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். பிற மாநிலங்களில் வசித்துக்கொண்டு தமிழ்ச்சூழலை நுகர தமிழ் இதழ்கள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ் இணையதளங்கள் போன்றவை துணைபுரியும். இவற்றில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளச்செய்தல் பெற்றோர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து விலகிச்சென்று வெகுதூரத்தில் பிற மாநிலங்களில் வாழ்ந்தாலும் தமிழ் மண்ணோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினரிடம் தொடர்பு நீடிக்கும்போது இயல்பாகத் தமிழ் மொழியின் மீதும் தொடர்பு அதிகரிக்கும். திருவிழாக் காலங்களில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து போகும் பழக்கத்தைப் பிற மாநிலத் தமிழர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழரின் மரபார்ந்த பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும். தமிழர் திருநாளாகத் திகழ்கின்ற பொங்கல் விழா நாள்களில் இத்தகைய பிறந்த ஊர் நோக்கிய பயணத்தை அமைத்துக் கொண்டால் மிகுந்த பயன் கிடைக்கும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு ஒன்றுகூடி தமிழ்நாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழவேண்டும். தாங்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும். குழந்தைகளின் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்வியில் தமிழில் கூடுதல் பட்டம் பெற பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களுக்குக் கேரள மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிலையம் தமிழ்ப் பாடங்களைத் தயாரித்து அளித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் பகுதிகளிலும் தமிழ்க் கல்விக்கான வசதிகள் கிடைக்கின்றன. பெங்களூரில் கல்லூரி அளவிலும் தமிழ்மொழி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தையொட்டிய மாநிலங்களில் தமிழ்மொழிக் கல்விக்கான வாய்ப்பு ஓரளவு இருந்து வருகிறது. அந்தமானில் வாழும் தமிழர்களுக்காக தீவு மலர் எனப் பாட நூல்களைத் தயாரித்து அளித்து வரும் பணியை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் செய்து வருகிறது. ஆனால், பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மொழிக் கல்விக்கான வாய்ப்பின்றி இருந்து வரும் சூழலை மாற்ற வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் கால் நூற்றாண்டுக்கு முன்பே இதில் ஆர்வம் கொண்டு பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தொடர்பாக சோமலெ மூலம் கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று அதை நூலாகவும் வெளிட்டது. இன்றையச் சூழலில் மீண்டும் கள ஆய்வு மூலம் புதிய தரவுகளைத் திரட்டி அயல் மாநிலத் தமிழர்களின் தாய்மொழிக் கல்வியின் தாகம் தணிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறது. முனைவர் திருமலை துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம் நன்றி:- தினமணி

Wednesday, October 6, 2010

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=311421&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.
மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...
அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!

நன்றி -தினமணி

--

Saturday, June 7, 2008

சில புதிய நூல்கள்

தினமணி நூல் அரங்கிலிருந்து

1.நூல் : தேவதூதர்களின் கவிதைகள் ( நாவல் )

ஆசிரியர் : எம்.முஜீப் ரஹ்மான்

பக்கம் : 96

விலை : ரூ. 45

புதுப்புனல்
117 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
முதல்மாடி
திருவல்லிக்கேணி
சென்னை 600 005

2. நூல் : மேற்கு வானம்

ஆசிரியர் : ஹஸன்

பக்கம் : 344

விலை : ரூ. 95

புதுயுகம்
84 -3 ஷேக்னா மேன்ஷன்
அங்கப்பன் தெரு
சென்னை 600 001

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்த வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிக்கின் தலைமையில் முஸ்லிம்கள் வழிநடத்தப்பட்ட அந்தக் காலத்தின் கண்ணாடி இந்த நாவல்.