Saturday, January 2, 2010

எது கவிதை?

எது கவிதை?

கைத்தட்ட(ல்) வேண்டுவதா கவிதை? - எண்ணம்
கருத்தனையத் தூண்டுவதே கவிதை.-மின்னும்
பொய்யூற்றிப் புலம்புவதா கவிதை? - நன்கு
புனைந்தாலும் பேருண்மை கவிதை. - கண்ணில்
மைதீட்டும் செயற்பாடா கவிதை? - மண்ணில்
மெய் தேடும் சமன்பாடே கவிதை. - இன்னும்
வையத்தில் வானவில்லா கவிதை? - உண்மை
உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை ஐயா!
சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க
சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல
முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
முறையற்றுப் போனதென்ற முறையீ டுண்டு
பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு.
எந்தவிதம் கவிதையாகும் என்னைக் கேட்டால்
இதயத்தில் பதிவதையே கவிதை என்பேன்.
கந்தகத்தைக் கொண்டிருக்கும் கவிதைப் பேனா
கொடுமைகளை எரிப்பதிலே நெருப்புக் குச்சி
விந்தைகளை வியப்பதுவே விருப்பம் என்று
உயர்மொழியில் பூச்சூடும் வனிதைப் பாக்கள்
சொந்தகதை சோகத்தைச் சொல்லும் சொற்கள்
சுகங்காண இலக்கியத்தை செய்யும் கைகள்
இந்தவிதம் கவிவகைகள் எண்ணி மாளா
இருந்தாலும் கவிதைக்கோர் கருத்தைச் சொல்வேன்.
சிந்தையிலே பூபூக்கும் கவிதை வந்து
சிகரத்தை கால்களுக்குச் சொல்லிப் போகும்
சந்தையிலே கிடைப்பதல்ல; கவிதை தன்னை
சூல்கொண்டு பிரசவிக்க தாய்மை வேண்டும்
மந்தையிலே ஒன்றில்லை; கவிதை என்றால்
மலையுச்சி தீபம்போல் வெளிச்சம் பேசும்
பந்தயங்கள் கவிக்கில்லை; பாரில் யாரும்
பெருவானில் ஓடுதளம் அமைப்ப தில்லை.


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
fakhrudeen.h@gmail.com


இறைவா!
என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!
__._,_.___

”சிசு” வதைக்கு தீர்வு காண்போம் !

”சிசு” வதைக்கு தீர்வு காண்போம் !

ஆக்கம்:- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=228

நாடு முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதி முக்கிய செய்திகளில் சிசுக் கொலையும் ஒன்றாக இடம் பிடித்து விட்டது. சிசுவதை பற்றிய செய்தி இல்லாத நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களை காண்பது அரிதாகி விட்டது. அந்தளவுக்கு சிசுக்கொலை சர்வ சாதாரணமாகியுள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன?

இந்தப் பழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு மத்தியில் இருந்து வந்துள்ளதை கீழ்க்கண்ட இறை வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். “பெண் குழந்தை (பிறந்தது) என்ற நற்செய்தியை அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்களின் முகம் கறுத்து அவர்கள் கவலை அடைந்து விடுகிறார்கள்”. (அல்குர்ஆன் 16:58) இந்த வசனத்தின் பிம்பமாக மற்றொரு வசனமும் நம்மை சிந்திக்க வைக்கிறது. “நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை, வசதிகளையும்) அளிக்கிறோம். அவர்களை கொலை செய்வது பெரும் பாவமாகும்”. (அல்குர்ஆன் 17 :31) இந்த குர்ஆனின் வசனங்கள் இறங்கிய நேரத்தில் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் சீரழிந்து காணப்பட்டது.

பெண் குழந்தை பிறந்து விட்டால் ஒன்று அந்தக் குழந்தையை கொன்று புதைத்து விடுவது, அல்லது பெற்றவளை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற மூடப்பழக்கம் மிகைத்த காலத்தில் தான் பெண்ணின் பெருமையை இறைவன் உலக மக்களுக்கு உணர்த்தினான். இந்த இறைவசனங்கள் இறங்கியதற்குப் பின்னால் முகம்மது நபி (ஸல்) அவர்கள் பெண் சிசுக்கொலையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தமது விழிப்புணர்வு பிரச்சார யுக்தியை கையாண்டார்கள்.

பெண்ணின் சிறப்பைப் பற்றி நபிகள் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது எந்த ஒருப் பெண் ஒழுக்கத்தோடு வாழ்கிறாரோ, அவரே இவ்வுலகத்தின் மிகச்சிறந்த செல்வம் எனக் கூறினார்கள். பெரு மானாரின் காலத்திலேயே பெண் சிசுக்கொலை கொஞ்சம், கொஞ்சமாக மாறி மறைந்தன. பெண்ணைப் பெற்றவர்கள் மகிழ்வு கொள்ளும் நிலையை இறைவனும் அவனது இறைத்தூதரும் ஏற்படுத்திக் கொடுத் துள்ளது சிந்தனைக்கினிய சுப செய்தியாகும்.

உங்களில் ஒருவர் திருமணத்தை நாடினால் உங்கள்மீது விதியாக்கப் பட்டுள்ள மஹர் தொகையை உங்களது மனைவியிடம் கொடுத்து உங்களுக்கு உரிமையாக்கி கொள்ளுங்கள் என நபிகள் (ஸல்) அவர்கள் பெண் சமுதாயம் எதிர் கொண்டிருந்த வரதட்சிணைக் கொடுமையை இறைவனின் கட்டளையின் பேரில் மஹர் என்னும் ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார்கள் என்பது உண்மை வரலாறு !

இதற்கு அத்தாட்சியாக எங்கெல்லாம் முஸ்லிம்களின் ஆட்சி நடை பெறுகிறதோ, அங்கெல்லாம் வரதட்சிணை என்றால் என்ன? எனக் கேட்கும் அளவுக்கு பெண் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்து வருவதை கண் கூடாக காண முடிகிறது.

சிசுக் கொலையில் ஈடுபடுபவர்களிடம் காரணம் கேட்டால் வரதட்சிணக் கொடுமையைத் தான் கூறுகிறார்கள். இதற்கு கடந்த 27/07/2000 குமுதம் வார இதழில் வெளியான ஒரு செய்தி கட்டியம் கூறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக வந்த ஒன்பது மாத குழந்தை ஒன்றை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் தொண்டைக் குழிக்குள் உடைந்த பல்பு ஒன்றின் கண்ணாடித் துண்டு சிக்கியிருப்பதை லாரிங் காஸ் கோப் என்ற கருவியால் கண்டறிந்து சாஃப்ட் போர் செப்ஸ் என்ற மற்றொரு கருவியை பயன்படுத்தி லாவகமாக அந்தக் கண்ணாடித் துண்டை வெளியில் எடுத்தாராம்.

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்ன தெரியுமா? குழந்தையின் தாயை அழைத்த டாக்டர் பல்பு துண்டு எப்படி குழந்தையின் தொண்டைக்குள் போனது என்று விசாரித்ததும் கதறி அழுத தாய் தான் தான் குழந்தையின் தொண்டைக்குள் பல்பு துண்டை தள்ளி குழந்தையை கொல்ல் முயன்றதாக ஒப்புக் கொண்டாளாம். இதற்கு அவள் கூறும் காரணங்கள், தனக்கு அடுத்தடுத்து பெண் குழந்தை களாகவே பிறந்ததால் குடும்பத்தினரின் குத்தல் பேச்சுக்களை சகிக்க முடியாமல் கடைசியாக பிறந்த இந்தக் குழந்தையை இரண்டு முறை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றாளாம்.

குழந்தை மூச்சுத்திணருவதைப் பார்த்து மனமிறங்கி கொல்ல வில்லையாம். “பெற்ற மனம் பித்து – பிள்ளை மனம் கல்லு” என்பதை உதட்டளவில் சொன்ன இந்தப்பெண் மூன்றாவதாக உடைந்த பல்பு துண்டை குழந்தை துப்ப, துப்ப மீண்டும், மீண்டும் தொண்டைக்குள் தள்ளி கொல்ல முயன்றிருக்கிறாள். குழந்தை விடாமல் வீறிட்டு அழவே உண்மை தெரியாத உறவினர்கள் என்னவோ? ஏதோ? என்று மருத்துவமனைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் ஐயா ! என மருத்துவரிடம் கதறி அழுதாளாம் அந்தத் தாய்.

இந்தத் செய்தியை படித்ததும் நமக்கு மக்களின் அறியாமை காலம் தான் நினைவுக்கு வருகிறது. ஈமெயில் புரட்சி, கணிணி புரட்சி என்கிறோம். அறிவியலில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும் நாம் அறிவில் மட்டும் தலைகீழாக இருக்கிறோமே? இது எந்த வகையில் நியாயம்? அறிவியலின் துணை கொண்டு கருவிலேயே அழிக்கும் தாய் மார்கள் ஒரு புறம் அறியாமையின் காரணத்தால் பெற்ற பிறகு அழிக்கும் கொடூரம் மறுபுறம். ஐந்தறிவு கொண்ட பிராணிகள் கூட, தான் ஈன்ற குட்டியை அது ஆணோ? பெண்ணோ? எதுவானாலும் பாகுபாடு பார்க்காமல் நக்கி பால் கொடுக்கும். அந்த தாய்ப்பாசம் ஆறறிவுள்ள மனிதர்களுக்கு இல்லையே ! தான் பெற்ற குழந்தையை புதை குழிக்கு அனுப்பிவிட்டு எப்படித்தான் இவர்கள் நிம்மதியாக வாழ முடிகிறதோ? நாளை மறுமை நாளில் கொல்லப்பட்ட அந்தக் குழந்தை களிடம் நீ எந்த பாவத்திற்காக கொல்லப்பட்டாய்? என இறைவன் கேட்கும் போது ஒரு பாவமும் அறியாத அந்தப் பச்சிளம் குழந்தை இந்த படுபாதகி தான் என்னை காரணமின்றி கொலை செய்தாள்.

என்று தன் தாயை கை காட்டுமே, என்ற பயமோ, அச்சமோ இல்லாததால் தான் துணிந்து இந்த காரியத்தை செய்கிறார்கள். சிசுக்கொலையில் முதலிடம் பெற்ற மாவட்டம் தேனி என்ற நிலை மாறி தற்போது சேலம் என செய்திகள் வருகிறதே ! இதற்கான காரணம் தான் என்ன? இரண்டு காரணங்களால் தான் சிசுக்கொலை மிகைத்து வருகிறது எனக்கூறலாம். 1) வறுமையை பற்றிய அச்சம் 2) வரதட்சிணை பற்றிய பயம். ஆண் குழந்தைகளை பெற்றாலாவது எப்படியும் பின்னால் சம்பாதித்துப் போடும். ஆனால் பெண் குழந்தைகளை பெற்றால் அதை வளர்த்து கரை சேர்க்கும் வரை எவ்வளவு செலவுகள்? சிக்கல்கள்? என்று பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் கூட நினைக்கிறார்கள்.

நம்மில் பல ஊர்களில் கூட பெண் குழந்தைகள் என்றால் ஏதோ அது தங்கள் தலையில் ஏற்றப்பட்ட சுமை போன்று கருதும் மனிதர்களை யும் பெண் குழந்தைகள் அதிகமாக பெற்றவர்களை பரிதாபமாக பார்க்கும் அவல நிலையையும் சர்வ சாதாரணமாக காணலாம். பெண் குழந்தைகள் என்றால் கவலைப்பட்டு கலங்கி நிற்கும் இன்றைய சூழ் நிலைக்கான அடிப்படைக் காரணமே வரதட்சிணை தான் என மகளிர் தேசிய குழுவினரின் ஒரு அறிக்கை தெளிவு படுத்துகிறது.

1983 – ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி வரதட்சிணை சாவு வருடத்திற்கு 427- ஆக இருந்தது. ஆனால் 1998 – ஆம் ஆண்டு கணக்கின்படி வருடத்திற்கு 6917- ஆக உயர்ந்து விட்டதாம். 15 ஆண்டு களில் 15 மடங்கு வரதட்சிணை சாவின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. என அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வரதட்சிணை என்ற இந்த விஷ வேர் முழுவதுமாக வெட்டி எறியப்பட்டால் தான் பெண்மை மதிக்கப்படும். பெண் குழந்தைகளின் உயிரும் பாதுகாக்கப் படும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய இளம் பெண்கள் மேலை நாட்டு நாகரீக மோகத்தில் சிக்குண்டு பெண்மைக் குரிய பண்பாட்டையும் மீறி பிற ஆடவர்கள் ஒன்று சேர்ந்து குடித்து கும்மாளம் போட்டு ஆடிப்பாடும் இடங்களில் பெண்களும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் சரி நிகராக கலந்து கொள்வதின் மூலம் தேவையற்ற ஆண்களின் நட்பு என்ற போர்வையில் அநாகரீக உறவை ஏற்படுத்திக் கொள்வதுடன் உணர்ச்சி மேலீட்டால் தங்களது கற்பையும் இழந்து அதன் மூலம் தங்களது வயிற்றில் பாவச் சுமையையும் சுமந்து கொள்கின்ற அவல நிலைகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனைக்குரியதல்லவா? இது போன்ற ஒழுங்கீனத்தால் உண்டான குழந்தைகளை சமூகத்தில் வளர்க்க வெட்கப்பட்டு கருவிலேயே அழித்துக் கொள்வதும் அல்லது பெற்றபின் கொல்வதும் தான் சிசுக்கொலை மிகைத்து வரக் காரணமாகும். கடந்த 11.08.2000 நாளிதழ்களில் வெளிவந்த ஒரு செய்தி இதற்கு சாட்சியம் கூறுகிறது.

நெல்லை ஈரடுக்கு மேல் பாலத்திற்கு கீழே பிறந்து தொப்புள் கொடியின் இரத்தம் கூட காயாத நிலையில் குழந்தை இறந்து கிடந்த தாம். தங்களின் ஐந்து நிமிட அற்ப சுகத்திற்காக ஒரு பச்சிளம் உயிரை பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? கடைசி நாளின் அறிகுறி களில் ஒன்றாக “விபச்சாரம் பெருகும்” என்று முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்களே ! அது இது தானோ? “நல்ல பெண்ணே இவ்வுலகின் மிகச்சிறந்த செல்வம்” என்று பெண்ணை போற்றி மகிழ்கிறது இஸ்லாம் !

ஜாதி மத பேதமின்றி இஸ்லாத்தின் இந்த உன்னதமான அறிவுரையை ஒவ்வொரு பெண்களும் பேணி பாதுகாத்து நாகரீக மோகத்திலிருந்து ஒதுங்கி பிற ஆடவருக்கு முன்பு வெட்கத்துடனும், ஒழுக்கத்துடனும் வாழ முற்பட்டால் போதும் தானாகவே முடிவுக்கு வந்து விடும் சிசுக்கொலையின் அத்தியாயம் ! இது தான் இன்றைய சமூகத்திற்கு வேண்டிய விழிப்புணர்வு !

குறிப்பு :

வாசகர்கள் தங்களது விமர்சனத்தை
SJAROOSI @ Yahoo.com என்ற மின்னஞ்சல் அல்லது
0091 – 9677839394 என்ற அலைபேசியிலோ பதிவு
செய்யலாம்.