Thursday, September 11, 2008

கூடுதலாக 11 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி

கூடுதலாக 11 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி



புது தில்லி, செப். 11: நடப்பாண்டில் இந்தியாவிலிருந்து கூடுதலாக 11 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்வதற்கு சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு 1.68 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ஹஜ் பயணம் செல்வதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதல் யாத்ரீகர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு 1.57 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். நடப்பாண்டில் ஹஜ் பயணம் செல்ல உள்ள 1.68 லட்சம் பேரில் 1,23,211 யாத்ரீகர்கள் மத்திய ஹஜ் கமிட்டி மூலம் அனுப்பிவைக்கப்படுவர். எஞ்சியவர்கள் தனியார் சுற்றுலா அமைப்பினர் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்வர்.

சலுகைக் கட்டணம்: நடப்பாண்டில் 1,23,211 ஹஜ் யாத்ரீகர்கள் சலுகைக் கட்டணம் மூலம் மெக்கா செல்ல உள்ளனர். கடந்த ஆண்டு 1.10 லட்சம் பேர் சலுகைக் கட்டணத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

கட்டணம் உயர்வில்லை: ஹஜ் பயணிகளுக்கான விமானக் கட்டணம் உயர்த்தப்படாது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஹஜ் பயணிகளுக்கான விமானக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டைப் போல் ஒரு பயணிக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றார்.

அமைச்சரவை ஒப்புதல்: தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதிக் கார்ப்பொரேஷனின் பங்கு மூலதனத்தை ரூ.750 கோடியிலிருந்து ரூ.850 கோடியாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20080911143630&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&ndate=9/12/2008&dName=No+Title&Dist=