Tuesday, October 26, 2010

உத்தி…!

உத்தி…!

. M. குதுப்கான்
”ஹலோ …. யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும் ரபீக்தானே? சுல்தானோட மகன் ரபீக்?
‘’ஆமா …. நீங்க?’’
‘’நான் தான் கம்பம்ல் இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?
‘’ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’
‘’நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’
‘’சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…’’
’’ஏன் இப்ப அழகா இல்லயா?’’
‘’இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’
‘’அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’
‘’தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’
‘’சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”
‘’தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’
‘’ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர் –ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’
‘’நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’
‘’அவன் என்ன செய்யறானாம்?’’
‘’ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’
’’வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’
‘’ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’
‘’ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.’’

நன்றி : சமரசம் : ஆகஸ்ட் 1-15,2010 இதழிலிருந்து

No comments: