Monday, December 3, 2007

இறுதியில்.. இறை இல்லத்தில்...

இறுதியில்.. இறை இல்லத்தில்...
- இப்னு ஹம்துன்
முதல் ஆலயம் நீ!
முதல்வனின் ஆலயம் நீ!

கஃபாவே - உன்னைக்காண
கண்ணுக்குள் ஒரு ஆவல்
கனன்றுக்கொண்டேயிருக்கிறது.

அருள் நிரம்பிய உன்
அழைப்புக்கு செவியேற்போர்
அதிருஷ்ட சாலிகள்.
ஆன்ம தேகத்தில் திரண்ட
பாவ அழுக்குகளை
'ஜம் ஜம்' நீரால் கழுவி
மூமின் என்று முத்திரைப் பெறுகிறார்கள்
கழுவப்பட்ட அழுக்குகளுக்கு
கதிரொளியே பகரமாகிறது!

இறுதிக்கடமையே....!
இறக்கிவைக்க, இறக்கி வைக்க
எல்லா சுமைகளையும் நீ
ஏற்றுக்கொள்வதால் தானோ
இந்த மனிதர்கள்
உலகின் எல்லா இடங்களிலும்
பாவங்களைப் பொறுக்குகிறார்கள்?

கருவறைத் தொடங்கி
கல்லறை வரை
காலடித் தொடரும் ஷைத்தான்
உன்னிடத்தில் வரும்போது
கற்தூணாகி விடுகிறான்
ஆனாலும் தப்ப முடியாமல்
கல்லெறிந்து கொல்லப்படுகிறான்.

ஏ! மனிதா..!
இறை அளித்த வாழ்வுநெறியை
வெட்டியும் தைத்தும் உடுத்துவதால்
நீதான் கிழிந்துப்போகிறாய்.
வெட்டாமல் தைக்காமல்
அப்படியே அணிந்துக்கொள்.
இஹ்ராம் போலொரு இலக்கணம்
இதமாய் உணர்த்துகிறாய்.

அரசர்களாய் வந்தவர்கள்
அதிகாரிகளாய் வந்தவர்கள்
'தான்' கரைந்தபின்
தெரிந்துகொள்கிறார்கள்
வான் மறையோனவன் வல்லமையை.

இறைத்தோழர் இபுறாஹிம்
உணர்த்திய வழியில்
இறுதியில் ஒரு குர்பானீ!
மனோஇச்சையை அறுத்து.
'வந்து விட்டேன்..... இதோ வந்துவிட்டேன்...!'

(90'களின் தொடக்கத்தில் 'மணிச்சுடர்' நாளிதழில் பிரசுரமான கவிதை)
(நினைவில் தங்கிய வரிகள்)

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com

No comments: