Saturday, January 19, 2008

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

எல்லாப் புகழும் இறைவனுக்கே !


இந்தி நட்சத்திரம் அமீர் கானின் இயக்கத்தில் வெளிவந்துள்ள "தாரே ஸ்மீன் பர்" இந்தியாவையே கலக்கிக்
கொண்டிருக்கிறது. அத்வானியே பார்த்து, உணர்ச்சி வச்ப்பட்டு கண் கலங்கினார் என்றால் மற்றவற்றை நாம்
ஊகித்துக் கொள்ளலாம். ஒரு பிஞ்சு உள்ளத்தின் எண்ணத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது
இந்தப் ப்டம்.

இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துள்ள என் பேரன் (உண்மையில் என் 'பெயரனும்' கூட) அந்த இளம்
கதாநாயகனின் அணுகுமுறையை தனதாகவே ஆக்கிக் கொண்டு, நெஞ்சில் அறைகிறார் போல் முன் வைத்த
கேள்வி, "பெற்றோருக்கு பந்தயத்தில் ஆசை என்றால் குதிரைகளை வளர்க்க வேண்டியது தானே அல்லாமல்
ஏன் ' மார்க்' ' மார்க்' என்று குழந்தைகளின் உயிரை எடுக்கிறார்கள்?

இப்போது அல்லாமா இக்பால் எழுதிய ஒரு கவிதையின் ஆங்கிலப் படிவத்தை எனக்கு அனுப்பி இருக்கிறான். குழந்தைகள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். இதோ
அதன் தமிழ் மொழிபெயர்ப்பு -- என்னால் முடிந்த வரை.

என் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் சிந்தனைகள் தான் என் உதட்டின் மேற்பரப்புக்கு வருகின்றன.
இறைவா ! என் வாழ்க்கையே ஓர் ஒளி விளக்காய் ஒளிர வேண்டும்; இருளே சூழ்ந்து வீடக் கூடாது.

உலகின் ஒட்டு மொத்த இருளும் என் முன்பிலிருந்து மறைந்து போகட்டும்
என்னுடைய ஒளிமயமான பிரசன்னத்தில் எல்லாமே 'தக்-தக' வென்று மின்னட்டும்.

தனித்து நிற்கும் ஒவ்வொரு மலரும் கூட ஒட்டு மொத்த பூங்காவுக்கும் அழகு சேர்க்கிறது
அதுபோல ஞானத்தின் இருப்பிடமாய் என் வாழ்வு மலர்ந்து மனித சமூகத்துக்கு பெருமை சேர்க்கட்டும்

வெளிச்சத்தை நாடி ஓடித் திரியும் நல்ல உள்ளங்கள் என்னைச்சுற்றி வலம் வரட்டும்.
அத்தகைய ஒளி மிக்கதாய் என் வாழ்க்கை மலரட்டும் - வளரட்டும்

இறைவா ! அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆசையை என்னில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய விடு.
நீ தந்த சக்தியின் பயனாய் ஞானத்தை - அறிவை தொடர்ந்து தேடும் வல்ல்மையை எனக்குக் கொடு.

வாழ்வு தேடி, ஆனால் வறுமையில் சிக்கித் தவிக்கும் அத்தனை பேருக்காகவும் என் வாழ்க்கையை
அர்ப்பணிக்கும் மனத் திண்மையைக் கொடு. ஏழை - எளியோர் - இயலாதோர் - பசி முதலான அத்தனை
பிணிகளிலும் அல்லல் படுவோருக்கு கடைசிவரை நான் துணை நிற்க நீ எனக்கு கிருபை செய்.

இறைவா ! நீ ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்களை எங்களுக்குத் தந்துள்ளாய் அவற்றை நாங்கள் தவறாகப்
பயன்படுத்தி விடாமல் எங்களைக் காப்பாற்று. நல்ல வழிகளிலேயே செல்ல கருணை செய்.எல்லோருக்கும்
நன்மையே செய்ய அருளாசி தா.

அல்லாமா இக்பால் மகத்தான கவிஞர். அதில் தர்க்கமில்ல. ஆனால் அந்தக் கவிதையை இந்தப் பிஞ்சு
உள்ளம் தேர்ந்து எடுத்து இருக்கிறது பாருங்கள் அதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது.

என் பேரன் அப்துல் ஜப்பார் (செல்லமாக "அபி") என் மூத்த மகன் ஆசிஃப் மீரானின் மூத்த மகன். எல்லாப்
புகழும் இறைவனுக்கே !

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

No comments: