Friday, May 30, 2008

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்" இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை!சொன்னவர் அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!

"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த தமிழ்பற்றாளர் யார் தெரியுமா? தமிழகத்தில் பிறந்த தவத்திரு தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை!

என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'' என்று 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.

இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில் சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன் மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச் செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!

இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர் வரிசையில் இன்றைக்கு வாழும்வரலாறாக‌...பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் (George L.Hart)!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!

தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!

தமிழைத் தவமாய்,
வேதமாய்,
வேள்வியாய்,
சுவாசமாய்,
உயிராய்,
உணர்வாய்

நேசித்து தமிழ் வாழ, வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ளவர்களின் வரிசையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" பேரா.ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் இடம்பெறுகிறார்.


தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் பேரா.ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.


இவர் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பலகை-யில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 லிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர். தமிழ்மொழி பழமையான மொழி. தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள். காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி அந்தஸ்து உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங் களுக்குச் சென்றன என்ற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார். இவ‌ரும் பெர்க்கிலி ப‌ல்க‌லையில் த‌மிழ் துறையில் ப‌ணியாற்றிவ‌ருகிறார். பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" சமீபத்தில் தனது பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. "தமிழ்ப் பலகை" தலைவர் பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்களுடனான‌ மின்காணல்..

இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது.

சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல.
- பேரா.ஜியார்ஜ் ஹார்ட்




1996-ல் 'தமிழ்ப் பலகை"(Tamil Chair) ஒன்றைப் பெர்க்கிலி பல்கலையில் உருவாக முக்கிய காரணகர்த்தாவானவர்! நீங்கள் பட்ட சிரமத்திற்கு பலன் அடைந்ததாக/நோக்கம் நிறைவேறியதாகக் கருதுகிறீர்களா?

"1996-ல் 'தமிழ்ப் பலகை" என்பது ஓர் அறக்கட்டளை. அது பெர்க்கிலியில் எங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பாடத்திட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு பணத்தை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கொடுக்கப்பட்ட பணம் மாநாடுகள், மாணவர்களுக்கான ஆதரவு, மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் போன்றவற்றிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்றபிறகு, பெர்க்கிலியில் தமிழ்த்துறை (தமிழ் பீடம்) தொடர்ந்திருப்பதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்தை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. பெர்க்கிலியில் நாங்கள் மேற்கொள்ளும் தமிழ்த்துறை நடவடிக்கை சிறிதளவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக அது எங்களின் தென் ஆசிய மொழிகள் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக இருந்து வந்துள்ளது. கல்வித் துறை சார்ந்த ஒரு திட்டம் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எங்களின் திட்டத்தின் மையமாகக் கூறாக இருப்பது தமிழ்ப்பீட அறக்கட்டளையாகும். திட்டம் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி இருப்பதற்கும் திட்டம் தொடர்வதற்கு மிக அத்தியாவசியாமாகவும் இந்த அறக்கட்டளை உள்ளது.

தாங்கள் அழகுபடுத்திக்கொண்டிருக்கும் பெர்க்கிலி தமிழ் இருக்கை பத்து ஆண்டுகள் பூர்த்திசெய்து விழா எடுக்கும் நிலையில் பெர்க்கிலி தமிழ் இருக்கைபோல தமிழர்கள் அதிகம் வாழும் நியூயார்க், சிகாகோ போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கை அமைய தங்கள் ஆலோசனை என்ன?

உலகில் உள்ள வளமிக்க மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதனிடம் (மற்ற நவீன இந்திய மொழிகளைப் போல் அல்லாமல்) உண்மையிலேயே செம்மையான இலக்கியப் பாரம்பரியம் உள்ளது என்பதுடன் முக்கியமான விரிவடைந்து வரும் நவீன இலக்கியமும் உள்ளது. கிட்டத்தட்ட 7 கோடி மக்களால் பேசப்படும் மொழி அது. இருந்தாலும் கூட அது மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. தங்களின் பாரம்பரியம் எவ்வளவு வளமையானது என்பது ஒரு சில தமிழர்கள் மட்டுமே அறிந்துள்ளனர்-தமிழ்நாட்டிற்கு வெளியே மேலை நாடுகளில் கிட்டத்தட்ட அதனைப் பற்றி யாருக்கும் தெரியாது.

வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அல்லது தமிழ்ப்பீடத்தை அமைப்பது உண்மையில் பெரிய செயல்தான். டொறோன்டோவில் 3 லட்சம் தமிழர்கள் (பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்) உள்ளனர்- அவர்கள் நிச்சயமாக ஒரு விரிவான தமிழ்த் துறையை தமிழ்ப் பீடத்தை டொறோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைத்து அதற்கான நிதியை நிச்சயம் அவர்களால் வழங்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அமைத்து அவற்றிற்கு வளமூட்டுவது பெரும் பயன்மிக்க சாதனையாக இருக்கும்.
பெர்க்கிலியில் தமிழ் விழா என்று வருடம்தோறும் நடத்தி வருவதில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்கச் செய்வதுண்டா?
நாங்கள் நடத்தும் மாநாட்டில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்வதை வரவேற்கிறோம்.

7 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். இப்போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
உண்மை என்ன என்றால், எந்த ஒரு நவீன தென் ஆசிய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழ் மொழியின்கண் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது. தென் ஆசியாவின் மற்ற எந்த நவீன மொழியிடமும் சங்க இலக்கியம் போன்று ஒன்றும் இல்லை, சங்க இலக்கியம் தன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளதுடன் (சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை) கடன் வாங்கிய சொற்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளது.
இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை ஏன் எனில் வானம் நீல நிறமானது என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கூறுவது போலத்தான் இருக்கும். எவ்வித பகுத்தறிவுக் கேள்விக்கும் அப்பாற்பட்டு, தமிழ் மொழியிடம் உண்மையான செம்மைவாய்ந்த இலக்கியம் உள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த உண்மையை இறுதியில் உணர்ந்து கொண்டு முடிவு செய்தது நல்ல செயல்தான் இருந்தாலும் இந்த முடிவு அரசியல் அடிப்படையில் பெரிதும் தீர்மானிக்கக்பட்டதாகத் தெரிகிறது. கன்னட மொழியின் தொடக்ககால இலக்கியம் அதன் மரபுகளையும் அதன் சொற்களையும் மஸ்கிருதத்ததிலிருந்து பெற்றது என்ற போதும், இந்திய அரசாங்கம் தற்போது கன்னட மொழியை ஒரு செம்மொழியாக அறிவிக்க உள்ளது. அதனிடம் வளமான பாரம்பரியம் உள்ளதுதான் ஆனால் அது ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியை விட செம்மையான மொழியல்ல. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
ஹார்வார்டில் இயற்பியல் படிக்கப் போய் தமிழ் படிக்க நேர்ந்தது குறித்துச் சொல்லுங்களேன்?
வேதியில் மற்றும் இயற்பியலிலிருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் துறைக்கு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுத்த பல ஆண்டுகள் கழித்து மாறினேன். எப்படி மாறுவதற்கு இயற்பியல் பேராசிரியடம் கையொப்பம் நான் பெறவேண்டும். அவரிடம் என் திட்டத்தைச் சொன்னபோது நான் வேடிக்கையாகச் சொல்கிறேன் என்று நினைத்தார். ஆனால் என் திறன்கள்–என்னிடம் திறன்கள் இப்பினும்–அவை மொழிகளைக் கற்றுக்கொள்வதில்தான் இருந்தன.

சமஸ்கிருதத்தின் பால் நான் மிகவும் ஆழமாக ஆர்வம் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளைக் கற்றிருந்தேன். ஆகவே அற்றுடன் தொடர்புடைய சமஸ்கிருத மொழியின் அமைப்பு முறை வளர்ச்சி குறித்து நான் வியப்புடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். அதன்பிறகு, நான் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டேன். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிடமும் மிகவும் பழைமையான வளம் மிக்க இலலக்கியம் இருக்கிறது.

நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதும், நான் அதன் மொழியியல் அமைப்பு முறை, சொற்றொடரியல் ஆகியவை குறித்து, அவை இந்தோ-ஐரோப்பிய முறை சார்ந்ததல்ல, என்பதால் ஈர்க்கப்பட்டேன். மற்றொன்றையும் நான் சொல்வேன், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் கணினிக்கு அதிகமான அளவில் பொருத்தமுள்ள மொழி.

ஏன் சமஸ்கிருத்தத்தில் மிகவும் சிக்கல்மிக்க இலக்கண முறை உள்ளதுடன் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியின் அசாதாரணமான சிக்கல்தன்மையை விலக்கி ஆண்டது பாணினியாரின் பெரும் சாதனையாகும். அதனை அவரால் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடிந்தது என்பதால் அம்மொழியை இலக்கண வாய்ப்பாட்டு முறையில் தலைசிறந்ததாக ஆக்கி விடவில்லை. திராவிட மொழிகள் நேர்த்தியான, சீரான அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. (தமிழ் மொழியில் எண்களை எண்ணிப்பாருங்கள் அதே வேளையில் இந்தியிலும் எண்ணிப்பாருங்கள்).

கணினியில் தமிழில் எழுத மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எதனால்? என்னவிதமான மென்பொருளை உருவாக்கினீர்கள்? தற்போது அந்தமென்பொருளை எவராவது பயன்படுத்துகிறார்களா?

தமிழுக்காக ஒருங்குறியீடு முறை செயல்படுத்தப்பட்டதுதான் இதன் தொடர்பில் ஏற்பட்ட அதிமுக்கிய வளர்ச்சியாகும். இது தொடர்ந்து உருவாகி வரும் ஒன்று. துரவதிர்ஷ்டவசமாக தமிழுக்கு பல மாறுபட்ட (லிசா மற்றும் மெக்கின்டோஷில் நாங்கள் 70களில் உருவாக்ககியது உட்பட) குறியீடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணையத்தளமும் வெவ்வேறான எழுத்துருக்களையும் எழுத்துக் குறியீட்டு முறையையும் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆங்கில இணையத்தளமும் மாறுபட்ட, அஸ்கி குறியீட்டு முறை அல்லாத எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்ற தோரணையில் இது செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். முழுமையான எழுத்து ஒருங்குறியீடு முறையீடு இன்றி, கணினியில் தமிழ் பயன்பாடு பரவலாக இருக்காது.

பெர்க்கிலி தமிழ் இருக்கையில் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தமிழ்த்துறையில் ஏதும் சாதனை செய்திருக்கிறார்களா?
எங்களின் அறக்கட்டளை பல மாணவர்களுக்கு ஆதரவளிக்க எங்களுக்கு உதவியுள்ளது. காலப்போக்கில், நாங்கள் அளித்த ஆதரவின் வழி பலர் பயன் அடைந்ததுடன் அவர்கள் தங்களின் படிப்பையும் முடித்துக்கொண்டுள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய நூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இன்றைய நிலையில் உங்கள் கோணத்தில் பார்க்கும்போது இப்படி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியதுண்டா?

எனது அடிப்படைக் கருத்துக்களை நான் திருத்திக்கொள்ளவில்லை. மொழி பெயர்ப்புகள் நன்றாகவும் தடைகளற்ற சுமூக ஓட்டத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன். நான் மொழிபெயர்க்கும்போது இங்கும் அங்குமாக சில துரவதிர்ஷ்டவசமான தவறுகளைச் செய்தேன் – தமிழ் போன்ற மொழியை ஒருவர் பயிலும்போது, அதன் நுட்பங்களைக் காலப்போக்கில் இயல்பாக ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை மேம்படும். என்னுடைய முக்கிய பகுத்தாய்வவின் முடிவு என்னவென்றால், தொடக்ககாலத் தமிழ் இலக்கியமும் மகாராஷ்டிர பிரகிருதியும் தென் இந்திய இலக்கியப் பாரம்பரியங்களுக்கு, பல மரபுகளும் உட்பட, அதிகப் பங்களித்துள்ளன. இந்தக் கருத்துக்களை சமஸ்கிருதம் கடன் வாங்கிக்கொண்டதுடன் அனைத்து இந்தியக் கலாசாரத்தின் ஓர் கூறாக ஆகிவிட்டது. பருவ மழைக்காலத்தின்போது பிரிந்திருத்தல், மற்றும் தூதுவிடு கவிதை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

தமிழகத்தில் சாதிமதங்கள் உங்கள் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதில் நான் என்ன சொல்ல? என் இந்திய நண்பர் ஒருவர் அண்மையில் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார். அவர் அங்கு தலித்துகளுடன் பணியாற்றினார். அங்குள்ள பிள்ளைகள் அவரின் மனதை ஆழமாகக் கவர்ந்துள்ளனர். அவர்கள் அசாத்திய அறிவு கொண்டுள்ளவர்களாகவும், கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களாகவும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதை அவர் கண்டார். ஆனால் நவீன இந்தியாவில் அரசியலும் சமூகக்கருத்துக்களும் அவர்களின் தற்போதைய நிலையை இழக்கச் செய்ய செயல்படுகின்றன. சாதி மறைந்து வரவில்லை, அரசியலுக்கு அது மையப்பொருளாக ஆக ஆக இப்போது அது வலுவடைந்து வருவதாகவே தெரிகிறது. பகுதறிவுக்குப் புறம்பான சாதி, என் நண்பர் பணியாற்றிய தலித்மக்களின் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று. மனித ஆற்றலையும் திறன்களையும் விரயப்படுத்துவதற்கு அது வழிவிடுகிறது. சாதி என்பது சமயப் பழக்கவழக்கமல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்தது. தமிழ் நாட்டில் எல்லா சமயங்களிலும் சாதி பாகுபாடுகள் இருப்பதைக் காணலாம்.


நன்றி:தமிழோவியம்.

drimamgm@hotmail.com

No comments: