Wednesday, June 25, 2008

பனாத்வாலாசாஹிபின் நினைவு கூறத்தக்க பணிகள்

"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்

B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி

No comments: