Friday, July 25, 2008

'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?' - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கருத்து

'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?'

மனம் திறக்கிறார்கள் எம்.பி.க்கள்!

வருகின்ற 22ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். சிறிய கட்சித் தலைவர்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சு.

"ஒரு எம்.பி.க்கு 25 கோடி ரூபாயிலிருந்து, 30 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் பேசப்படுகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான ஏ.பி. பரதனே குற்றம் சாட்டியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் அரசை ஆதரித்த இடது சாரிகள், இப்போது மற்ற கட்சிகளும், சுயேச்சை எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிக்க முன் வருகின்ற நேரத்தில் இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில், "எம்.பி.க்கள் விலை பேசப்படுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டோம்.

காதர் மொகைதீன்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்

எம்.பி.க்களை இவ்வளவு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களுக்குச் சேவை செய்யவே எங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பணம் வாங்குவதற்காகத் தேர்ந்து எடுத்து அனுப்பவில்லை. இது மாதிரி குற்றச்சாட்டுகளைச் சொல்வது பாராளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். ஏதோ ஒரு நேரத்தில் எங்கோ ஒரு எம்.பி. பணம் வாங்கியிருக்கலாம்.

அதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எல்லோருமே பணம் வாங்குகிறார்கள்; பேரம் பேசுகிறார்கள் என்று கூறுவது அபத்தம்.
வாக்கெடுப்பில் தனிப்பட்ட எம்.பி.க்களின் முடிவு ஒன்றும் இல்லை. கட்சித் தலைமை ஒரு முடிவை எடுத்து சொல்லப் போகிறது.

அதன்படி எம்.பி. வாக்களிக்கப் போகிறார். எந்த எம்.பி.யாவது மாறி வாக்களிக்க நினைத்தால் அதை ஓப்பனாகவே சொல்லிவிட்டுச் செய்கிறார். அப்படியிருக்கையில் பணம் விளையாடுகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டுவது நாட்டைக் கெடுக்கிற வேலை.

இந்தப் பிரச்சாரங்கள் பத்திரிகை தர்மத்திற்கும் உகந்ததல்ல. இது மாதிரி பிரச்சாரம் செய்வதும், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் நம் நாட்டு ஜனநாயகத்தை வளர்க்க உதவாது. மாறாக நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, ஜனநாயகத்தைக் குலைத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். குதிரை பேரம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாடு குழம்பிக் கிடப்பதை விரும்புகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

http://www.tamilanexpress.com/politics/politics.asp

No comments: