Friday, July 18, 2008

அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !

அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !
முதல்வர் டாக்டர் கலைஞர் - கருணைப் பார்வை கிட்டுமா ?

சேமுமு
prof_semumu@yahoo.com

கோவை உக்கடம் சந்திப்பில் 29-11-1997 அன்று காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக 30-11-1997 மற்றும் 01-12-1997 ஆகிய இரு நாட்களில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும், முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்ப்ட்டதும், பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் சித்திரவதைக்குட்பட்டதுமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதன் எதிரொலியாக 14-02-1998 அன்று கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதனைக் கோவை தனிநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உறுதியும் செய்துள்ளது.

43 வழக்குகள் பதியப்பட்டுச் சிறப்பு புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்பட்டு 181 பேர் மீது 28-09-1998 அன்று முதல் குற்றபத்திரிகையும் 05-05-1999 அன்று இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன. 1300 சாட்சிகள் விசாரணை 2002 ல் தொடங்கி 2006 ஜன்வரியில் முடிந்தது. 01-08-2007ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி 8 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலையாயினர். 43 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றவர்களுக்கு 13,10,7 ஆண்டுகள் சிறைவாசம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டதால் ஏறக்குறைய 100 பேர் வெளியே வந்துவிட்டனர்.

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக கைதான குற்றவாளிகளுக்கு தனிநீதிமன்றமோ சிறப்புப் புலனாய்வுக்குழுவோ அமைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு உடனடி ஜாமீனும் வழங்கப்பட்டது. இப்போது அவர்களில் யாரும் சிறையில் இல்லை. தடா, பொடோ போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்யப்பெற்ற பலரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து சிவகங்கை ஊராட்சித் தலைவரைக் கொன்றவர்களுக்குக் கூட ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டது. இன்னமும் கூடப் பல முஸ்லிம் சிறைவாசிகள் விசாரணை சிறைவாசிகளாகத் தமிழகச் சிறைகளில் இருந்துவருவது கொடுமையாகும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தரப்பட்ட தீர்ப்பில் ‘ஜாமீன் வழங்காதது குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்கவிடாமல் தடுத்து விட்டது' என்று நீதிபதியே குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. ஆக ஒரு வழக்கில் ஒருவர் பல்வேறு வழிகளில் ஜாமீன் பெற்றுச் செல்லும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருந்தும் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கொன்றில் இரட்டை ஆயுஸ் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் முகப்பேர் ராஜா சிறையிலிருந்த 16 நாட்களிலேயே ஜாமின் வழங்கப்பெற்றுள்ளார். தர்மபுரி மாணவிகள் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றுவிட்டனர்.

பழனிபாபா படுகொலை வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கச் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றதும் பிறகு அவர்கள் விடுதலை ஆனதும் மறக்க முடியாதவை ஆகும். மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் உயர்நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றதும் நினைவுகூரத்தக்கது. ஆயுள் தண்டனை மற்றும் பிற வருடச் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அப்பில் செய்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு ஜாமீனில் செல்ல உரிமைபெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இத்தகைய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

வழக்குகளில் கைதவோர் உடல்நிலை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்குக் கருணை அடிப்படையில் சட்டம் உரிமையளிக்கிறது. ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ. ராஜா உடல்நிலையைக் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றது நினைவிருக்கலாம். ஆனால் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 60 வயது தஸ்தகீர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்தும் கடைசிவரை ஜாமீன் மறுக்கப்பட்டு இறந்து போனார்; சபூர் ரஹ்மான் 10 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தும் ஜாமீன் கிடைக்காமல் நெஞ்சுவலியால் இறந்து போனார்.

விசாரணைச் சிறைவாசியாக 10 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த ஒரு முஸ்லிம் ‘எய்ட்ஸ்' நோயாளிக்கு ஜாமீன் வழங்கபடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயாளியாகச் சிறையில் வாடும் ஹைதர் அலி, மனநோய்க்குள்ளானவரைச் சிறைக்குள் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல் என்பதும் மீறப்பட்டு இன்னமும் இருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். சிகிச்சை பெறவேண்டிய சிறைவாசிகள் ஜாமீன்பெற்றுச் செல்ல உரிமை இருந்தும் முஸ்லிம் சிறைவாசிகள் அந்த உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.


தடா, பொடா பாயப்பெற்ற பல வழக்குகள் மறு ஆய்வுக்குக் கமிட்டிக்கு உட்படுத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையும் பெற்றனர். அதே சமயம் 1995 ல் மதுரை ராஜகோபாலன் கொலை விசாரணைச் சிறைவாசிகளாகவே அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர். 2006ல் மறு ஆய்வுக்கமிட்டி நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மறுஆய்வுக்கமிட்டி நியமிக்கப்படாமலிருப்பது எந்த வகையில் நியாயமென்று புரியவில்லை.

மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பரோலில் வெளியே வந்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 2002 ல் சுல்தான் மீரான் என்பவரைக் கொலை செய்து கோவையில் பெரும் பதட்டம் உண்டாக்கத் திட்டமிட்ட ஆயுள் தண்டைக் கைதி பூரிகமலும் அவரோடு ஆயுள் தண்டனை பெற்ற விஜயனும் பரோலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளபோது பொதுவாக முஸ்லிம் சிறைவாசிகள் பரோலில் செல்லக்கூட மறுக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.

ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணைச் சிறைவாசிகளாகப் பல ஆண்டுகள் சிறையிலிருந்து கடைசியில் அவர்கள் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுப் பல்வேறு வழக்குகளில் 71 முஸ்லிம்கள் விடுதலையாகியுள்ளனர். அவர்களில் 26 பேர் 9 ஆண்டுகளும், 11 பேர் 8 ஆண்டுகளும், 19 பேர் 7 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமையல்லவா !

பேரறிஞர் அண்ணா அவர்களின் நூறாவது பிறந்த தினம் வரும் செப்டம்பர் 15 ஆகும். அதனையொட்டித் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் எட்டாண்டுகள் தண்டனை முடித்த கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து முன்கூட்டி விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதை வரவேற்று நன்றி தெரிவிக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.

அவ்வாறு ‘பொது மன்னிப்பு எனற அரசு ஆணையின் பேரில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்வதென்பது அனைத்துக் கைதிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படவேண்டும் என்று உச்சநீதிமனறம் 02-11-2007 ல் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றக் குறிப்பையும் மனதிற்கொண்டு செயல்படக் கோரிக்கை வைக்கப்படுவதன் நியாயத்தைத் தமிழக அரசு உணருமென நம்புகிறோம்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 8 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலைபெறுவதற்குரிய தகுதியுள்ள முஸ்லி சிறைவாசிகள் 71 பேர் உள்ளனர். இந்த விஷயத்தில் அதிகாரவர்க்கம் பாரபட்சம் காடுமோ என்ற ஐயம் பலரிடம் இருந்து வருகிறது. எனவே தமிழினக் காவலாராக, சிறுபானமையினர் நல அரணாக இலங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எவ்விதப் பாரபட்சமும் காட்டாமல் இந்த 71 முஸ்லிம் சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு - சிறப்பு ஆணை அடிப்படையில் விடுவிக்கச் செய்வாரெனச் சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கிறது.

அதுமட்டுமன்றிப் பிற முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் மற்ற சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஜாமீன், பரோல் போன்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும்., மன நோயாளிகளாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சிறைவாசி ஹைதர் அலியை விடுவிக்க வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே இருந்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக் காலத்திலும் அப்பீல் செய்யும் காலத்திலும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்ற ஆனையின்படி மறு ஆய்வுக்கமிட்டி அமைக்க மதுரை ராஜகோபாலன் வழக்கில் கூறியபடி தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

அனைத்துச் சிறைவாசிகளுக்கும் அளிக்கப்பட்டு வரும் உரிமைகளை முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாதென்பதே சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

( கட்டுரையாளர் பேராசிரியர் முனைவர் சே மு முஹம்மதலி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் )

நன்றி :

இனிய திசைகள் தமிழ் மாத இதழ்
ஜுலை 2008
எண் 24 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
9444 16 51 53

No comments: