Wednesday, August 6, 2008

லட்சியக் கவிஞர் இக்பால்

ஏப். 21: இக்பால் நினைவு தினம்

'ஸாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் எழுதிய
லட்சியக் கவிஞர் இக்பால்


எம்.ஜெ.முஹம்மது இக்பால்
(இக்கட்டுரையாளர் மதம், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் குறித்து எழுதிவருபவர். சமூக நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றுபவர். துபாய் பொறியியல் நிர்வாக சங்கத் தலைவர். துபாயில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர்.)

''மதம் ஒருவரோடொருவர்சண்டை போடச் சொல்லவில்லை.
ஹிந்த் நமது ஜென்ம பூமி ஹிந்துஸ்தான் நம்முடையது''

இந்தியச் சுதந்திர வரலாற்றிலேயே சுதந்திர தாகத்தை மக்களிடையே ஊட்டியவர்களில் கவிஞர்களின் பங்கு மகத்தானது. அதில் அல்லாமா டாக்டர் இக்பால் பங்கு அளப்பற்கரியது.

அல்லாமா இக்பால் அவர்களின் 61-ம் ஆண்டு மறைவு தினம் 2000 ஏப்ரல் 21. அவர்களின் நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம், இலட்சிய மனிதன் என அவர் கூறுவது, இளைஞர் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் அறைகூவல் எல்லாம் இன்றியமையாததாக உள்ளது.

அல்லாமா இக்பாலின் மூதாதையர்கள் அவரிலிருந்து 150 வருடத்திற்கு முற்பட்டவர்கள், காஷ்மீர் பிராமண பண்டித இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர், முஸ்லிம் சூஃபி ஞானியால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கொள்கைகளிலும், ஆன்மிகத்திலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்தார். ஷேக் நூர் முஹமதுவின் மகனாக பிறந்த இக்பால் இளம் பிராயத்திலேயே கல்வி, கேள்வி ஞானங்களில் சிறப்புற்று விளங்கினார்கள். பரம்பரை முஸ்லிமாக இருந்தவர்கள் இஸ்லாத்தின் உண்மை, ஞானநெறி போன்றவற்றை மறந்திருந்த அக்கால கட்டத்தில் இஸ்லாமிய ஞான நெறிகளை, கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்த அல்லாமா இக்பால் அவர்கள்,

''மீரும் மீர்ஸாவும்
தம் உள்ளத்தையும் சமயத்தையும்
அரசியலில் மூழ்கடித்து விட்டனர்.
இந்த பிராமணச் சிறுவன் மட்டுமே
அந்தரங்களை அறிந்தவனாக இருக்கின்றான்''

என்று பாடினார்.

இளம் வயது முதலே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அல்லாமா இக்பால் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை கால தாமதமாக வகுப்பிற்கு வரவே, ஆசிரியர் ''ஏன் தாமதம்'' எனக் கேட்க, அதற்கு இக்பால் அவர்கள் ''ஐயா, இக்பால் தாமதமாகத்தானே வரும்'' எனக்கூறி இக்பால் என்ற சொல்லுக்கு புகழ் என்றொரு அர்த்தம் உள்ளது என விளக்கி ஆசிரியரை வியக்கச் செய்தார்.

இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட நிபுணராக விளங்கிய ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ அவர்கள் அல்லாமா இக்பாலைப்பற்றி
குறிப்பிடும் போது ''உலகின் இக்கால மகா கவிகளில் அல்லாமா இக்பால் தலையானவர். உர்து, பாரசீக மொழிகளில் பாட்டுக்கள், கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த தொழிலாளி. கடந்த 30 ஆண்டுகளுக்கு அதிகமாக நான் அவரை ஒரு முதல்தரமான கவிஞராகவும், சிந்தனையாளராகவும் மதித்து போற்றி வருகின்றேன்'' என கூறுகின்றார்.

''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா''

தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டதற்கு அல்லாமா இக்பாலின் ''உலகம் முழுவதிலும் சிறந்தது எம் ஹிந்துஸ்தானம்'' என்று அர்த்தம் கொண்ட, இன்றும் எல்லா தரப்பினராலும் எல்லா நிகழ்ச்சியிலும் பாடலாக இன்றி இசையாக இசைக்கப்படுகின்ற ''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா'' என்கிற பாடல் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

இந்தியா பல மதங்கள், பல வழிபாடுகள், பல மக்களைக் கொண்டு நாடு. எனவே

''மதம் ஒருவரோடொருவர்
சண்டை போடச் சொல்லவில்லை
ஹிந்த் நமது ஜென்ம பூமி
ஹிந்துஸ்தான் நம்முடையது''

எனப் போற்றி புகழ்ந்தார். மேலும் ''ஓ சிந்தனையற்றவனே, உன் நாட்டை எண்ணிப்பார். மேல்நாட்டில் உன்னை அழிக்க சதி நடக்கின்றது. நடப்பதையும் நடக்க இருப்பதையும் பார். வெறும் பழங்கதை பேசுவதில் என்ன இருக்கின்றது? இதை உணராவிட்டால் இந்திய மக்களாகிய நீங்கள் அழிக்கப்படுவீர்கள். உலகச் சரித்திரத்தில் உங்களின் அடிச்சுவடு இல்லாது போகும்'' என்றும்

என்னரும் இந்தியச் சகோதரர்களே!

''நீங்கள் இத்தோட்டத்தின் பாதுகாவலர்கள். எனவே இதன் பிளவு நீங்க வழிகாணுங்கள். அப்பிளவு என்னும் பேய்க்காற்று செடிகளைப் பாழாக்கி விட்டது'' மேலும் ''நீ இந்தியாவை கண்டதில்லையா? இதயமுள்ள யாரும் போற்றும் நாடல்லவா அது! அதன் ஒவ்வோர் அணுவும் உலகின் மீது ஒளி வீசினாலும், அந்தோ! அது புழுதியிலும், குருதியிலும் கிடந்து தத்தளிக்கின்றதே'' என ஜாவீது நாமா எனும் புத்தகத்தில் தனது மகனிடம் கேட்பதாக எழுதுகிறார். தனது மகன் ஜாவீது இடம் கேட்பது என்பது இளைஞர் சமூகத்திற்கே விடுக்கும் அறைகூவல் அது!

மேலும் ஒரு பாடலின் மூலம் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் போது

(காஜா மொயினுதீன்) க்ஷ¤ஸ்தி
சத்தியத்தின் செய்தியை எந்தப் பூமியில் பரப்பினாரோ,
(குரு) நானக் எந்தப் பூங்காவில்
ஏகத்துவ கீதத்தை பொழிந்தாரோ,
தாத்தாரிய (முகலாயர்கள்) எதைத்
தமது சுய நாடாக ஆக்கிக் கொண்டனரோ,
எது ஹிஜாஸ்வாசிகளை அரபுப் பாலையை விட்டு வந்து
(தன்னகத்தே) குடியேறச் செய்ததோ
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

பாரஸீக வானிலே உடைந்து கிடந்த
(ஞானியர், கவிஞர்களாய) விண்மீண்கள்,
மீண்டும் ஒளி தந்து ஜொலிக்கச் செய்த
வானம் எங்குளதோ,
ஏகத்துவத்தின் நாதத்தை
உலகம் எத்தலத்திலிருந்து கேட்டதோ,
அரபு நாட்டின் அதிபர் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு
தண்ணென்ற பூங்காற்று எங்கிருந்து வீசியதோ,
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

மூஸா(அலை) இறைவனுடன் பேசிய
ஸீனா மலை உலகின் இதயமாகும்.
நூஹ§ (அலை) அவர்களின் கப்பல் (கடைசியில் வந்து)
முகாமிட்டுத் தங்கிய ஜுதி மலையும் சிறப்புடையதே!
(இது போலவே) வானமளாவ வளர்ந்து மாளிகை போல்
அழகு தந்து நிற்கும் இமயமலை எங்குளதோ,
எதன் சாரலில் வாழ்வது சொர்க்க வாழ்வோ
அதுவே என் தாய்த்திரு நாடு?
அதுவே என் தாய்த்திரு நாடு.

என தாய் நாட்டின் மீது உள்ள நேசத்தை பற்றி பாடலின் வாயிலாக கூறுகின்றார்.

அரசியல்

சிறப்பு மிக்க அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1930-ல் அல்லாமா இக்பால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931-ல் லண்டனில் நடந்த 2-வது வட்ட மேஜை மாநாட்டிற்கு இக்பால் அவர்கள் ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அவர்கள் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நேருவிடம் முஸ்லிம்கள் நலம், சிறுபான்மையினர் நலம் இவற்றை எல்லாம் எடுத்துக்கூறி சுதந்திரம் பெற்ற பிறகு இவையெல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என கூறினார், அவருடைய கருத்துகள் நேருவின் அயல் நாட்டு கொள்கைகளில் மிகவும் பிரதிபலிக்கவே செய்தது. அல்லாமா இக்பால் மரணப்படுக்கையில் இருந்தபோது பஞ்சாபில் கஞ்ச் மஸ்ஜித் தகராறு விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளை அடக்குவதற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அதை அறிந்து வேதனையடைந்த அல்லாமா டாக்டர் இக்பால் இயலாத இந்த நிலையிலும் ''என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய், கலவரம் நடக்கும் இடத்தில் வையுங்கள் துப்பாக்கி குண்டு முதலில் என் இதயத்தை துளைக்கட்டும். அப்பொழுதாவது ஒற்றுமை நிலைக்கட்டும்'' என உணர்ச்சி வசப்பட்டு கூறினார். பிற சமய மக்களையும், மதங்களையும் மதித்து வாழவேண்டும் என்று அல்லாமா இக்பால் அவர்கள் கூறினார். திருக்குர்ஆன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அடிப்படையில் மாற்று மதத்தினவர்களிடம் சுமூகமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தினார் கவிஞர்.

சமய நல்லிணக்கம்

இஸ்லாத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு திருகுர் ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முறையையும் செம்மையுடன் பின்பற்றிய கவிஞர் நபியினை தரிசிப்பது என்பது நம் உடலை அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு உட்படுத்தி மனித நேயத்துடன் நடப்பது எனவும், இறையினை தரிசிப்பது நபியினால் போதிக்கப்பட்ட சொல், செயல்களை பின்பற்றி, இறையோடு சம்பந்தப்படும் கருணை, இரக்கம் முதலிய குணங்களை நம் மனதுள் வளர்த்து உலகிலும் அவை நிலவும்படி செய்தல்தான் என்கிறார். இஸ்லாமிய சமாதான அடிப்படையில், சாந்தி நிலவச் செய்தால் உலகில் அமைதி நிலவும் எனக்கூறும் கவிஞர், பிற சமயங்களை அன்புடன் நோக்கினார். கிருஷ்ணபகவானின் கீதை பெரிதும் அவரை கவர்ந்திருந்தது. ஹிந்து சமுதாயத்தை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும் எனக் கூறிய கவிஞர், அலஹாபாத் முஸ்லிம் லீக் மகாநாட்டில் அவர் எழுப்பிய உரை ''பிற வகுப்பினரிடம் கெட்ட எண்ணங்கொண்ட எந்த வகுப்பும் கீழ்த்தரமானது; வெறுக்கத்தக்கது. பிற வகுப்பினரின் பழக்கவழக்கங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் நான் மரியாதை காட்டுகின்றேன். அவசியமேற்படின் திருக்குர் ஆன் கட்டளையிடுகிறபடி அவற்றை பாதுகாப்பது என் கடமையாகும். எனினும் என் வாழ்க்கை, நடத்தை ஆகியவற்றின் உற்பத்தியாக விளங்கும் வகுப்பிடம் நான் அன்பு கொண்டுள்ளேன்; அவ்வகுப்பு தன் மதம், தன் இலக்கியம், தன் கலாச்சாரம் ஆகியவற்றைத் தந்து எனது உணர்ச்சியில் ஜீவசக்தியாக நின்று நான் இன்றுள்ள நிலைக்கு என்னை உயர்த்திற்று.

மேலும் ஒரு பாடலில்

நான் கோயிலுக்கு மரியாதை செய்கிறேன்;
கஃபாவின் முன் அடிபணிகிறேன்.
என் மார்பில் பூணூல் உண்டு;
என் கையில் ஜெபமாலை மிளிர்கிறது.

என தனது உரையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும் தனது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

சிறப்பு மிக்க உர்தூ, பாரஸீக சிந்தனையாளர் ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ ஒரு கடிதத்தில் அல்லாமா இக்பாலை பற்றி குறிப்பிடுகின்றார்.

''இக்பால் முஸ்லிம் தத்துவத்தையும், முஸ்லிம் கலைப்பண்பையும், முஸ்லிம் தீரச் செயல்களையும் பற்றி அதிகம் எழுதியுள்ளார் என்பது உண்மைத்தான். ஆனால் மில்டனைக் கிறிஸ்த்தவக் கவிஞன் என்று கூறி அவர் கவிதைகளை கட்டுப்படுத்தவோ, காளிதாஸனை ஹிந்து சமயக் கவி என்று கூறி அவர் கவிப் பெருமைக்கு வேலியிடவோ யாரும் முயன்றதில்லை; மற்ற மதத்தினரும் இதே காரணத்திற்காக இக்கவிஞர்களின் பெருமையைக் குறைத்துக் கூறியதுமில்லை. இக்பால் முஸ்லிம் சரித்திர வெற்றிகளையும் கலாசார சாதனைகளையும் குறித்து எழுதினால், அதற்காக முஸ்லிமல்லாதவர் அவரைக் குறையாக மதிப்பிட்டு விட முடியாது.

''ஊணாலும் உடலாலும் பொருளாலும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். மந்தமாய் இருத்தலின்றிப் பூரண மனோ எண்ணத்துடனும் சக்தியுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரவேண்டும். போலி ஒற்றுமை நிலைக்காது. உள்ளம் பொருந்த ஒற்றுமையாய் இருங்கள். ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும் நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும். நல்லவற்றையே சிந்தியுங்கள். நல்லனவே செய்யுங்கள். வல்லவனுக்கு இது உகந்தது'' என மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள் மனிதர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஆன்மிகம்

ஆழ்ந்த நாட்டுப்பற்று கொண்டும், இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்ட கவிஞர் இக்பால் அவர்கள், இளைஞர்கள், செயலாற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும், அயராமல் உழைக்க வேண்டும், நாட்டைச் சீர்படுத்த வேண்டும் என்று எப்பொழுதும் இளைஞர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்தார். மனிதனின் அகமிய வளர்ச்சிக்கு அன்பு, தேவையற்ற உலக ஆசைகள் பற்றிய அக்கறையே முற்றுமற்றிருப்பது, தீரம், சகிப்புத்தன்மை, உணவு தேடல், திறனை வளர்த்தல், ஆகியன முக்கியமானவை என்றார். லக்ஷ¤யங்களையும், மதிப்புகளையும் உண்டாக்கி அவற்றை எய்த முயற்சிப்பதே அன்பின் உன்னதமான படித்தரமாகும் எனக்கூறும் கவிஞர் அச்சம், யாசகம், அடிமைத்தனம், சாதி பிரிவு, உயர்குலம், தாழ்குலம், பேதம் ஆகியவை களையப்பட வேண்டும் என்கிறார். பொதுவாக சட்டங்களுக்கு கீழ்படிந்து, தன்னை கட்டுப்படுத்தி, இறைவனின் பிரதிநிதித்துவத்தை எய்துதல் மனிதனுக்கு அவசியம் என்கிறார் அல்லாமா இக்பால் அவர்கள்.

சுதந்திர வேட்கையூட்டிய, இளைஞர்களை எழுச்சியூட்டிய பாரதியும், இக்பாலும் இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே இயற்கை எய்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் கனவு கண்ட இலக்ஷ¤ய இந்தியா, இலக்ஷ¤ய இளைஞர்கள் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. சமுதாய விஞ்ஞானிகள் தோன்ற வேண்டும், சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை வளர வேண்டும்.

''மனித இனம் ஒரே இனம். சாதியெனும் உயர்வு, தாழ்வு ஒழிய வேண்டும். இதைக் கடமையாகவும் கொடுமையாகவும் கடைப்பிடிப்பவர்கள் அழியவேண்டும். இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அதன்படி தண்டனை கொடுப்பதில்லை. மனிதனின் உள்ளத்தையே இறைவன் நோக்குகின்றான். ஒற்றுமை, சுதந்திரம், சகோதரத்துவம் மனிதனுக்குள் இருக்க வேண்டும். மனிதனின் உள்ளம் பாற்போல் இருக்க வேண்டும். இவனே ஜயம் பெற்றவன்'' என நபி(ஸல்) அவர்களின் திருப்பேரர் மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலான அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்கள் மனித இனத்தில் ஏற்ற தாழ்வுகளை இல்லை என்பதை அழகாக எடுத்தியம்புகிறார்கள்.

அல்லாமா இக்பால் அவர்கள் கூறுகின்ற ஒவ்வொரு மனிதனும் சிறிய அளவில் ஒரு சிருஷ்டிகர்த்தனே. இச் சிருஷ்டி சக்திகளைப் பாழாக்குவது பெரும் பாவமாகும்.

''செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர்
ஒருக்கணமவது ஓய்பவர்கள்
சதா சுழன்றுகொண்டிருக்கும்
கால சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்''

என்று கூறும் கவிஞர்

''ஹே, இந்தியாவே,
உன் நிலை என்னை சுழலச்செய்கிறது
கதைகளிலெல்லாம், உன் கதையே வெகு துயரமானது''

என்று தனது நாட்டைபற்றி ஆதங்கப்படுகின்றார்.

''இந்தியர்களே! வானத்தின் அங்கியுள்ளே
இடி மறைந்திருக்கிறது.
இப்பாரத பூமியின் புல்புல் களான நாம்
கவலையற்று நம் கூடுகளில் தூங்கிக்
கொண்டிருக்க இதுவன்று நேரம்''

என்று இந்தியர்களை விழிக்கச்செய்கின்றார்.

மேலும் அவர் வடித்த இதய ராகம் இன்றைய சூழலில் எவ்வளவு பொருந்தும்.

''என்னருமை மக்களே!
இப்பூமியில் ஒரு புதிய தேவாலயத்தை
அன்புக்கோயிலை,
பரஸ்பரம் ஒருவரையொருவர்
நேசிக்கச் செய்யும் நிலையத்தை
எழுப்புவோம் வாரீர்!''

என தன் தாய் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

நம் இந்தியர்கள் சாதி, மத இன பேதமின்றி ஒன்றுபட்டு, இலக்ஷ¤ய கவிஞர், சிந்தனையாளர், தத்துவஞானி அல்லாமா டாக்டர் இக்பாலின் வார்த்தைகளை செவியுற்று புதியதோர் இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என்பதையே இந்த 60-ம் ஆண்டு நினைவு தினத்தின் செய்தியாக கொள்வோம்.

http://www.ambalam.com/idhal/special/2000/April/special23_03.html

No comments: