Saturday, August 16, 2008

கனவு மெய்ப்பட...

கனவு மெய்ப்பட...

கு.சிவக்குமார்


சென்னை, ஆக. 15: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனையொட்டி, பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க கிராமப்புறங்களில் இருந்து சென்னை நகர் நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு சென்னை நகரில் நீண்டநாள்கள் தங்கி, படித்து தங்களது கனவை நனவாக்கிக் கொள்ள குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை வாய்ப்பளிப்பதில்லை. இதனால் தங்களது லட்சியம் வெறும் கனவுதான் என்ற விரக்தியில் ஊருக்குத் திரும்பி விடுகின்றனர்.

அரசின் கவனத்துக்கு...:கடந்த ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அந்தப் பிரிவின் நலத்துறை வாயிலாக தலா ரூ. 25 ஆயிரம் அளிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் எத்தனையோ ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பாராட்டியே தீர வேண்டும்.

அதேசமயம் இந்த இடத்தில் நாம் ஒன்றைப் பற்றி சிந்திக்கத் தவறக்கூடாது. ஏழ்மை என்னும் நோய் சமுதாயத்தின் குறிப்பிட்ட பிரிவை மட்டும் தீண்டிப் பார்ப்பதில்லை. முற்படுத்தப்பட்ட மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இந்த பிரிவுகளைச் சேர்ந்த எத்தனையோ மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவுடன் பொருளாதாரச் சூழ்நிலையால் படிப்பில் முழுக் கவனத்தைச் செலுத்த இயலாத நிலையில் சென்னை நகரில் சோகத்துடன் உலா வருவதைக் கண்கூடாய் காண முடிகிறது.

இந்நிலையில் இதுபோன்ற மாணவர்களுக்கும் அரசு நிதியுதவி அளித்து உதவிக் கரம் நீட்டினால் ஆண்டுதோறும் இன்னும் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து இந்த தேசத்துக்கு சேவை புரியப் புறப்பட்டுச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

செயல்பாடு சரியல்ல...:சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் குடிமைப் பணி பயிற்சி மையம் அண்ணா நகரில் அமைந்துள்ளது. அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த பயிற்சி மையம் கடந்த சில ஆண்டுகளாகச் சரிவரச் செயல்படுவதில்லை என்ற அதிருப்தி மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை உடனடியாக அனுமதித்து முதன்மைத் தேர்வுக்கு படிக்கும் நிலையை கல்வி நிறுவனம் உருவாக்கிக் கொடுப்பதில்லை என்பது மாணவர்களின் முக்கியக் குற்றச்சாட்டு. சென்ற ஆண்டு முதல்நிலைத் தேர்வு முடிவு வெளிவந்த சில நாள்கள் வரை மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கட்டடம் சீரமைக்க வேண்டும், வருமானச் சான்றிதழ் பெற்று வாருங்கள் என பல்வேறு காரணங்களைச் சொல்லி தங்களை இழுத்தடித்து, மன அழுத்தத்துக்கு ஆளாக்கியதாக ஒட்டுமொத்த மாணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாங்கள் அனுமதிக்கப்படும் போது கல்வி நிறுவனத்தின் சில அறைகளில் மின்விளக்குகள் இல்லை என்றும், அந்த அறைகளுக்கு தங்களையே மின்விளக்குகள் வாங்கி பொருத்தச் சொல்லிக் கல்வி நிறுவன நிர்வாகிகள் வற்புறுத்தியதாகவும் சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வி நிறுவனத்தில் அளிக்கப்படும் உணவும் தரம் குறைந்ததாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டு சில மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதைக் கல்வி நிறுவன நிர்வாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுபோனாலும் எவ்விதப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்று அமைதியாக இருந்துவிட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதைக் கல்வி நிறுவன அதிகாரிகள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் நடந்த தவறுகள் இந்த ஆண்டும் தொடராமல் பார்த்துக் கொள்வார்களா அதிகாரிகள்?

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080815133812&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/16/2008&dName=No+Title&Dist=0

No comments: