Saturday, December 20, 2008

அஜீரணத்தை போக்கும் இஞ்சி

அஜீரணத்தை போக்கும் இஞ்சி
இயற்கை நமக்கு அளித்துள்ள மருத்து குணமுள்ள பொருள் இஞ்சி. இது அஜீரணத்தை போக்கி, உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

சில வீடுகளில் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு பதில் இஞ்சிச் சாறு பருகுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலான வீடுகளிலும், கடைகளிலும் இஞ்சி டீயை பலர் விரும்பி சாப்பிடுவதை அறிந்திருக்கலாம்.

இஞ்சியில் அத்தனை நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணரவும் உதவுகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச் சிக்கலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

அசைவ உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது உடலில் தேவையற்ற சதையை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி சாப்பிடுவதால் அவை ஜீரணமாகி உடலின் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

நீங்களும் நூறாண்டு காலம் வாழலாமே..!
- தொகுப்பு : எஸ்.சரவணன்

நூறாண்டு காலம் நலம் காத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு, எளிதில் பின்பற்றக் கூடிய சில வழிமுறைகளை, டாக்டர் த்ரிஷா மெக்னாயர் என்பவர் எழுதிய "தி லாங் லைஃப் ஈக்குவேஷன்" என்ற புத்தகம் எடுத்துரைத்துள்ளது.

அதன்படி, ஒருவர் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்வதற்கு, அவர் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும்; அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; கைகளை கழுவுதல் வேண்டும்; தினமும் பல் துலக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார், அந்த மருத்துவர்.

ஆய்வு ஒன்றினை மேற்கொள் காட்டி, டாக்டர் த்ரிஷா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது இதுவே:

* கைகளை நன்றாக கழுவி, எப்போதும் தூய்மையுடன் இருந்தால், ஆயுளில் 2 ஆண்டுகள் கூடுகிறது.

* பற்களை சுத்தமாக பராமரித்து வந்தால், வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் உயர்கிறது.

* பெண்ணாக இருந்தால் அவரது கணவரும், ஆணாக இருந்தால் அவரது மனைவியும் நிலையான ஒரு துணையாக அமைந்துவிட்டால், ஆயுளில் எட்டு ஆண்டுகள் கூடுவது உறுதி.

* அன்றாடம் தவறாமல் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், வாழ்நாளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூடும்.

அதேநேரத்தில் புகைப்பழக்கம், துரித உணவுகள் உட்கொள்ளுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளாமை மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழலோடு வாழ்வது ஆகியவை நமது வாழ்நாளில் 20 ஆண்டுகளை குறைத்துவிடும் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: