Saturday, March 21, 2009

நட்புக்கு இலக்கணமான நண்பர்.

நட்புக்கு இலக்கணமான நண்பர்.
துன்பம் என்று வருகின்ற போது தூரப்போகும் நண்பர்கள் உண்மையான நண்பர்களா? மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் துன்பத்தை, துக்கத்தை பகிர்ந்துகொள்ள முன் வருபவரே உண்மையான நண்பராக ஒருவருக்கு திகழுவார்.
மக்கா நகரில் இஸ்லாத்தின் மகத்துவங்களை எடுத்துச் சொல்லிவந்தார் நபிகள் நாயகம்(ஸல்). விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நபிகள் நாயகத்திற்கு விவரிக்க இயலாத துன்பங்களையும் தொல்லைகளையும் விளைவித்தனர். நபிகளுக்கெதிராக பகைவர் கூட்டம் உருவானது. அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்து ஒரு கூட்டம் புறப்பட்டது. தகவலறிந்த நபிகள் நாயகம் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது.
இறைக் கட்டளையின்படி மக்காவிலிருந்து மதீனா செல்ல முடிவெடுத்தார்கள் நபிகள் நாயகம். பகைவர்களின் கண்களிலிருந்து தப்பிக்க எண்ணி, இரவோடிரவாக யாரும் அறியாமல் மக்காவை விட்டு கிளம்ப எண்ணிய நபிகள் நாயகம் அவர்களுக்குத் துணையாக அவரின் இனிய நண்பர் அபூபக்கர் சென்றார்.
எதிரிகள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் வழியாக அபூபக்கர் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார். அப்படி அவர் அழைத்துச் சென்றபோது, நபிகள் நாயகத்திற்கு முன்புறமாகக் கொஞ்ச நேரமும், பின்புறம் கொஞ்சநேரமும் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். பின்னர் நபிகள் நாயகத்தின் வலப்பக்கமாக கொஞ்ச நேரமும், இடப்பக்கம் கொஞ்ச நேரமும் ஓட்டமும் நடையுமாகப் போனார். வழி நெடுகிலும் இதேபோல நபிகள் நாயகத்திற்கு அரணாக முன்பாகவும், பின்புறமாகவும், இடவலப் பக்கங்களிலுமாக மாறிமாறி அபூபக்கர் சென்றார். நண்பர் இப்படி மாறி, மாறி ஓடிச் செல்வதைக் கண்ட நபிகள் நாயகம், "அபூபக்கரே, சிலசமயம் என் முன்பாக ஓடுகிறீர். சிலசமயம் என் பின்னால் வருகின்றீர்கள். திடீரென்று வலப்புறமாகவும் பிறகு இடப்புறமாகவும் மாறிமாறி வருகின்றீர்கள்? ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்?" என்று வினவினார்.
அதற்கு மறுமொழியளித்த சித்திக் அபூபக்கர்,"இறைத்தூதரே! எம் உயிரினும் மேலானவரே!
நபிகள் நாயகமே! நான் அப்படி நடக்கக் காரணம், நீங்கள் இந்த வழியாகத்தான் வருகிறீர்கள் என்பதை எதிரிகள் ஒருவேளை அறிந்து உங்களைத் தாக்க ஒளிந்திருப்பார்களோ என்று உங்களுக்கு முன்பாகச் செல்கிறேன். ஒருவேளை நம்மைப் பின்தொடர்ந்து வந்து உங்களைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது என்று பின்னால் வருகிறேன். ஒருவேளை எதிரிகள் பாதையின் வலப்புறம் மறைந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழும்போது வலப்பக்கமாக வருகிறேன். இடப்பக்கம் மறைந்திருந்து எதிரிகள் தாக்கினால் என்ன செய்வது என்று எண்ணி இடப்புறமாக நடந்து வருகிறேன்," என்றுரைத்தார். இதைக் கேட்ட நபிகள், "நீரல்லவா எனது உண்மையான நண்பர்," என்று சொல்லி அபூபக்கரைக் கட்டித் தழுவிக்கொண்டார். இப்போதும் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.


--
A.Ahamed Ismathullah Sait
Camp@Gulbarga-585 104
CELL : 0091 94804 83943

No comments: