Monday, April 20, 2009

வையகமும் வழிப்போக்கனும்

வையகமும் வழிப்போக்கனும்


நாட்கள் நகர்கின்றன நயமோடு

நாள்தோறும் தோன்றி மறைகிறது கதிரவன்

இயற்கை மனித குலத்திற்கு தந்த நாட்காட்டி

இறைவன் உலகிற் களித்த நன்கொடை


உலகே ஒரு நாளிலே விடியுமா

ஒரு பொழுதும் விடியாது

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு

வேளையில் தான் விடியும்


உலகே வியத்தகு விசித்திரம் தான்

ஒரே நாளில் தீட்டிவிட முடியுமா

வையகத்தையும வானகத்தையும்

வாழும் காவியங்களாய் வரைய முடியுமா


எழுத்தின் உளி கொண்டு விழி திறந்து

எண்ண அலைகளால் அந்த

உளியினை ஓயாமல் அடித்தாலும்

உலகெனும் அதிசயத்தை என்றாகிலும்


காகித ஓலைகளில் வடித்து

எழுத்துப் பேழையினுள் அடைத்து

படித்துப் பார்க்க : என்று

பறை சாற்றிவிட இயலுமா


எதை எழுதி வைக்க

எதனை மீதம் வைக்க

உலகம் என்னும் சொல்லோவியம்

உன்னதமான உயிர் காவியம்


சொல்லோவிய மதற்கு பொருள் தீட்ட

பொருளோவிய மெழுத நினைந்து

கையோடு கையேடு எடுத்தேன்

கண் முன்னால் வந்தன கேள்விகள்


பதில் எழுது எனக்கு என்றது

பதில்தானே பார்க்கலாம் என்றேன்

உலகம் என்றால் என்ன? என்றது

விழிகளால் நான் காண்பது என்றேன்


காண்பது தான் உலகமா

கண் சிவந்தது என் கேள்வி

என்றால் காணாதது தான் உலகமா

என்றே வினா தொடுத்தேன்


எள்ளி நகையாடியது என் உலகம்

எதை உலகம் என்றே தெரியாத

உலகறியா சின்னஞ் சிறு மனிதனே

உனக்கு தெரிந்த வரையில் எழுது


உலகை எழுதுகிறேன் என்று சொல்லாதே

உலகில் நானறிந்ததை ஏட்டில்

எழுத முயற்சிக்கிறேன் என்று சொல்

எழுதி முடித்துவிடும் செயலா இது

கேள்விகள் வேள்விகளாய் தொடர்ந்தன

பதில் தான் இல்லை கண்களை தீட்டினேன்

காவியம் எழுதவில்லை என்றாலும்

கவிதையாவது எழுதி வைப்போம்


என் கண்கள் முன்னால் விரிந்து

எல்லையே இல்லாமல் நின்றது வானம்

வின்னை நான் காண்pகிறேனா

வின் தான் எனைக் காண்கிறதா


மேகம் எனும் மேலாடை அணிந்த

மகா காவியம் தானோ வானம்

என்ன இது வானம் எழுதினேன்

இங்கே மேகம் அல்லவா எழுதப்படுகிறது


மேகம் தன் முகம் விலக்கி எனக்கு

வானம் காட்டாதா நான்

வானை முதலில் எழுதுகிறேன்

வான் மேகம் அடுத்தது


அதோ அங்கென்ன அற்புதம்

அடிக் கொரு நிறம் தருகிறதே

அந்த அடிவானம் இதற் கென்னவானது

அடித்தாற் போல் முகம் சிவந்துவிட்டது


எந்தன் பார்வை உன்னை அடித்ததோ

உன் மேக மலராடையா காரணம்

வெட்கம் கொண்டா முகம் சிவந்தாய்

விடியல் காண்கிறதாம் உலகின் என் பாகம்


ஒளி வட்டம் ஆர்ப்பரிக்கிறது

வெள்ளி வானம் ஆகிவிட்டது செவ்வானம்

மையிநட்டை மறைக்கிறது புலர்வானம்

மாலையில் உன்னை சந்திக்கிறேன்

கோபாவேஷம் அந்த கும்மிருட்டிற்கு


குளிர்ந்த அதிகாலை பொழுது

வைகரை நேரம் தரணியின் வசந்த காலம்

வட்ட ஒளி தகிந்து ஒளிர்கிறது

வானம் பார்த்து நிற்கிறேன் வானம்பாடியாய்


வெளிச்சம் ஒளியானது ஒளி வெப்பமானது

உலகை சுட்டெரிக்கிறது கiலாய்

வானம் நோக்கும் எனக்கோ

வையமே எனைச் சுற்றுவது போல் தோற்றம்


ஆகாயம் நோக்கும் நான் சூரியனை நோக்க

அது எழுதி முடிவு பெறவில்லை

மேக மலர் மேலாடை அரையாடையாக

மேலும் கூறு என்கின்றது


சூரியனோ சுடுகிறது எனை எழுது என்று

சூரியன் ஆகாயத்தின் அழகிய தாமரை

குளுமை தந்தது உதய வேளையில்

கருமை திரித்து வெண்மை தந்தது காலை வேளை

வெப்பம் தந்தது முன்பகல் வேளை

வெய்யில் தருகிறது நண்பகல் வேளை


அத்தனையும் குறைந்து மங்கி

அந்தி மயக்கமாய் வெம்மை குறைகிறது

எழில் தோற்றம் திரும்பிவிட்டது

என் இரு கண்கள் நிலை நிற்கிறது


கிழக்கின் கடல் ஆழத்தில் பிறந்து

மேற்கின் மலை உச்சியில் சாய்கிறது

என் உலகை இருள் சூழ்கிறது

என் விழிகள் இமைக்க மறுக்கிறது


காலையில் கொண்டு சென்ற

குளிர் காற்றை கனிவாய்

கொண்டு வந்து முகம் சேர்க்கிறது

கண்களை இருள் மருட்டுகிறது


நீலக் கடல் கதிரவனை பிரசவித்து விண்ணில் எறிந்தது

நற்காலை பொழுதில் நான் கண்ட காட்சி

மாலை சூரியனை மேற்;கு மலை சிகரம்

மடித்து தன் கடைவாயில் இட்டுக்கொண்டது


மாலைப் பொழுது மங்கிவிட்டது

மனிதனின் தேடல் மங்கிடவில்லை

இரவு இருட்டு கருநிற வானம்

இங்கேயும் தொடரும் அதிசயம்


மின்மினிப் பூச்சிகள் விண்ணில்

மிதக்க விடப் பட்டுள்ளதே

விண்ணின் மீன்களாம் அவை

வானம் இப்பொழுது தனிமரம் அல்ல


விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட

வெள்ளிப் பந்தல் கால்கள் இல்லாதது

இமைகளை ஒரு நொடி நான்

இமைத்து விட்டேனா வானத்தில் ஆச்சரியம்


விண்ணில் துளை ஏற்பட்டுவிட்டது

வட்ட வடிவ வெண் துவாரம்

வானம் பார்த்த பூமி இது

வெளிச்சம் வேண்டும் அல்லவா


வெண்ணிலா என்று பெயராம்

வட்ட முகமாம் வெள்ளி நிறமாம்

பூமிப் பந்தின் துணைவியாம்

பார்த்தாலே பேரானந்தம் தான்


ஏய் பூமி எனும் பூளோகமே

இரவு என்ன செய்யும் உன்னை


ஆதவன் உதிக்கும் வரை உனை

என் ஆவிபோல் காத்திருப்பேன்

கண் விழித்து காவல் நிற்கும்

காப்பாளினி இந்த ஒளி நிலா

கண்களது மயங்கி விடாதிருக்க

நிலா பெண்ணுக்கும் மாதம் தோறும்

நித்திரை நாட்கள் உண்டாம்


ஓரிரு நாட்கள் ஒதுங்கியிருக்க

வேண்டுமாம் நிலவும் நிலமும்

இயற்கையின் அதிசயமா இது

இயற்கையே அதிசயம் தான்


இரவுப் பொழுது நிலா முற்றம்

வெள்ளித் தாரகை களின்

தடைகளை மீறய பேரணி

தாடைகள் அசைய மறுக்கிறது


மீண்டும் தரணியில் விடிகின்றது

மாற்றமே இல்லாது நடவுகிறது

நேற்றைய என் கண் காட்சிகள்

நாளையும் தொடரத்தான் செய்யும்


விஞ்ஞானம் கண்டு பிடித்ததாம் விமானம்

எஞ்ஞானமும் இன்றி வானில் மிதக்கும்

பறவை பட்சிகளை என்னென்பேன்

பறந்து சென்று வானம் ஏகிவிட


பூமிப் பந்தால் ஏவப்பட்ட இயற்கை கோள்களோ

புறவைகளை புவியீர்ப்ப தில்லையோ

இறக்ககைகளால் விண்ணையும் மண்ணையும்

இணைத்து ஒன்றாக்க துடித்து தவிக்கும்

அயராத சமாதான தூதுவர்களோ


வானம் எழுதி நிறைவுற வில்லை

மேகம் வரைந்து முடிவுற வில்லை

ஆகாய சூரியனும் பிறை நிலவும் எந்தன்

எண்ண அலைகளில் சிறை படவில்லை


பறக்கும் பட்சிகளும் அந்தரத்தில்

பரந்த உலகிற்கு நான் எம்மாத்திரம்

காற்று உண்டு நீர் உண்டு

கடல் உண்டு மலையுண்டு


நீரருவி அதன் கம்பீரம்

நீரோடை நல்லாறு ஆழ்கடல்

நீரில் மிதப்பவை நீரடி வாழ்வன

நீpரில் மிதந்து நீராளும் பாய்மரம்


அடர் கொடிகள் பசுமை கானகம்

அதில் வாழும் உயிரினம் ஊர்வன நடப்பன

என்னால் எழுத இயன்றிடுமா

என் கண் முன்னால் உலகம் விரிகிறது


என் கருவிழிகள் இரண்டு போதாது

எழுதுகோல் தவியாய் தவிக்கிறது

எழுதித் தொடர கைவிரல்கள் பத்தும் போதுமா

என் ஜாதியாம் மனித ஜாதி

எழுதப் படாமல் இன்னும் உள்ளது


மானிட ஜாதியினை நான் எழுதிடவா

மனிதனில் எதை நான் எழுத

பெண்ணில் இருந்து மண்ணை அடையும்

பூமியில் புதிதாய் பிறக்கும் சிசுவில் துவங்கவா


அதன் சிரிப்பை வர்ணிக்கவா

முதல் மழலை பேச்சை சொல்லவா

பூளோகத்தில் பிஞ்சு பாதம் பதித்து

பூவின் அரும்பாய் புவியில் நடக்க முயலும்

எல்லையிலா இன்ப காட்சியை எழுத்தில் பதிக்கவா


இரு பெரும் ஜாதி உண்டு

இந்த மனித இனத்தில்

ஆணினம் பெண்ணினம்

எங்கு துவங்க எங்கே முடிவுற


பெண்ணை எழுதிடவா இல்லை

பெண்மையின் தன்மையை எழுதி தரவா

இயற்கையின் அதிசயங்களை எல்லாம்

ஒரு சேர மிகுந்தவள் பெண்


காலச் சக்கரத்தின் சுழற்சியில் இயற்கை

கடல் மலை காற்று கானகம்

மேகம் மழை அருவி ஆறு

மாற்றங்கள் கொள்வதில்லை

மங்கையர் பிறவி அப்படி இல்லை


ஏழு அரும் பருவங்களாம் எழுபது குணங்களாம்

என்றாலும் பெண் போன்ற

புனித பிறவி புவியில் இல்லையாம்

பேதை: பெதுவை: மங்கை: மடந்தை:

அரிவை: தெரிவை: பேரிளம் பெண்


இலக்கணங்களில் எழுதப் பட்டுள்ளது

இலக்கியங்கள் தெரிவிக் கின்றன

ஏழு பருவத்தையும் எழுத்தில் கோர்க்க

ஏழு ஜன்மம் வேண்டும்


வையகத்தின் இந்த வழிப்போக்கனால்

வைதீகம் எழுதிட முடியுமா

மனிதனின் பிறவியை கூறி

மனிதன் சாதித்த வற்றினை எழுத்தாக்கி


மனிதன் பேசும் மொழிகளை

இசையை நடனத்தை கவிநயத்தை

வாழும் கலையை வாழ்க்கை முறையை

வார்ப்பில் தந்திட இயலுமா


இன்னும் மான் இனம் உள்ளது

நீரின் மீன் இனம் உள்ளது

என் தாய் மொழியாம் தமிழ் உள்ளது

என் அருமை தேசமாம் இந்தியா உள்ளது


வாழும் நெறி தந்துள்ள

உலகிற்கு வாழ்வை அளித்துள்ள

இஸ்லாம் இன்னும் உள்ளது

உலகப் பொதுமறை திரு மறையாம் குர் ஆன் உள்ளது

தமிழ் கூறும் நல்லுலகின் திருக்குறள் உள்ளது


எண்ணிக் கொண்டிருக்கிறேன்

எழுதிக் கொண்டிருக் கிறேன்

நான் உலகை எழுதவில்லை

நான் காணும் உலகில் எழுதுகிறேன்


என்ன விந்தை வையம் இது

எனை கடந்து செல்கின்றதே

நின்று நிலையிலே நான்

நிகழ் காலம் எழுத நினைத்தேன்


இறந்த காலம் அல்லவா

எழுதி வைத்திருக் கிறேன்

நிகழ் காலம் என்னுள் உள்ளது

எப்பொழுது எழுது வேன்


எதிர்காலம் என் முன் உள்ளது

எப்படி எழுதப் போகிறேன்

என்னால் ஒருபோதும் இயலாது

இறுதியாக ஓர் உறுதி மொழி


மண்ணையும் விண்ணையும்

காற்றையும் நீரையும்

கடலையும் சோலையையும்

நெருப்பையும் நெடுவயலையும்

மலையையும் மலையருவியையும்

பறவையையும் விலங்கினங்களையும்

மனிதர்களாம் நம்மையும்


உலகை ஆளும் ஓரிறைவன்

விளையாட்டிற்காகவோ வேடிக்கையாகவோ

உண்டாக்கவில்லை உருவாக்கவில்லை

சிந்திக்கும் மனங்களுக்கு இவற்றில்

சரியான பாடங்கள் உள்ளது


வழிப்போக்கன் தான் நாம் இவ்வுலகிற்கு எனினும்

வந்தோம் வாழ்ந்தோம் வீழ்ந்தோம் என்றிலாது

வாழ்விற்கு வாகை சூட வாழ்ந்து

வாழ்வதனை வரலாறாக் குவோம்


தேடல் அறிந்த மனித உள்ளங்கள்

தேடுங்கள் தேடிடுங்கள்

தேடிக் கண்டெடுங்கள்

உலகை தேடாதீர்கள்

உலகில் உங்களை தேடுங்கள்.


முதுவை சல்மான்

ரியாத்

No comments: