Sunday, April 26, 2009

நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்

அப்துல் கையூம் அவர்களின் எள்ளலும்-துள்ளலும் இணைந்த எழுத்து நடையில் இசைமுரசு நாகூர் ஹனீபாவை பற்றிய கட்டுரை மிக மிக அருமை.

கட்டுரை நாகூர் ஹனீபா பற்றி - தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்கத்தக்க அளவிற்கு ஆதாரபூர்வமான தகவல்களை கொண்டிருக்கிறது.

தமிழ் முஸ்லிம்களின் இல்லங்களில் - ஒரு காலத்தில் ‘வெள்ளிக்கிழமை’ இரவு நேரங்களில் அவரின் பாடல்கள் ’டேப் ரிகார்டர்’ மூலம் ஒலிக்கப்படுவது ’சுன்னத்தாக’ கருதப்பட்டு வந்தது..


வீடியோவாக்கப்படும் தமிழ் முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகளில் மறக்காமல் (இன்றும்) இணைக்கப்படும் பாடலான
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்க வாழ்க..
மணமக்கள்
வாழ்க வாழ்கவே .
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க.. என்ற பாடலை யாரும் மறக்க இயலாது...

உண்மையில் நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு சரித்திரம்தான்..

அருமையான கட்டுரை தந்த ஆசிரியர் அப்துல் கையூம் அவர்களுக்கு
நன்றியும்..வாழ்த்துகளும்..


தோழமையுடன்
பிறைநதிபுரத்தான்
வலைப்பூ: உரையாடல்

-----------------------------------------------------------------------
Stand upright,
Speak your thoughts,
Declare the truth you have - that all may share,
Be bold, proclaim it everywhere:
They only live who dare


--- On Fri, 24/4/09, அப்துல் கையூம் wrote:


From: அப்துல் கையூம்
Subject: {TMB - 3010} நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்
To: "Tamil Muslim Brothers"
Date: Friday, 24 April, 2009, 12:18 AM



நன்றி : திண்ணை
ஏப்ரல் 23, 2009
- அப்துல் கையூம்

சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை
‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும்
எழுதவில்லையே என்று

குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று
கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் -ஒரு சரித்திரம், ஆகையால்
'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன்
செய்தேன்.

‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம்
இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார்
பாணியில் பால்பாயிண்ட்
பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட
மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு
அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி
‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு
‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை
மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்”
என்றால் மற்றவர் “பித்தளை”தானே?

அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள
நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப
நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு
அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது
சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற
பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில்
போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம்
எடுத்துக் கொண்டார்கள்.

மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி
இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த
என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின்
குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப்
பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்"
என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன்
பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில்
என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில்
அக்கறை
செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை
செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை
அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை
வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.
ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு
இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய
பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா
வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக்
கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு
இந்தியாவாகத் தெரிந்தது.

நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு
எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா
அறியாமோ?” “நிங்ஙள் அவரை
கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத்
தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே
அறிந்து வைத்திருந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள்.
அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும்
பொருந்துகின்ற

அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும்
மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.

‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில்
வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?”
என்ற கேள்வி எழலாம்.

“அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD
என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.

நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல்,
நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?

ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது
கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப்
போன்ற

உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற
விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன்
இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான்
வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று
பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர்
கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும்
என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும்
கொடுமையை
எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.

"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில்
‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து
எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை
எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.

இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள்
மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான்
செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற
அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது.
“முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர
சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை. ஹனிபாவின் சில
பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.

“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர்
பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ
எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள்
உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால்
ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு
கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர்
உண்டு.

“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்
வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”

என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு
குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.

“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹே
ஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”

என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக
ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.

தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர்
நாளடைவில்

“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்
கண்களில் ஏனிந்த கலக்கம்”

என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக்
கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல
வேண்டும்.

‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள்
முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த
முறை’யையும், ‘பெரியார் பிலாலின்
தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும்
பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய
சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன்
கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று
பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு
தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர்
அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த
கனிவான அறிவுரையை
காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன்
தத்ரூபமாக காட்சிதரும்.

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.

“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?
கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”

என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும்
கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே
உணர முடியும்.

தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர்
கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு
இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு
கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.]

ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே
பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத்
துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.

இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய
பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல
‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய
பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத
இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர்.

ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.

இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக
முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட,
நின்றுக்
கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க
வைத்த கதை.

இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும்
நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி,
உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை
செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற
மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான்
சகித்துக் கொள்ள முடியவில்லை.

எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள்
வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.

மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ
‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி
எத்தனை கட்டை என்ற விவரத்தை
காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை”
என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார்.
(‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)

ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த
நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர்
தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த
‘சிச்சுவேஷன் காமெடி’.

“இவரின் இசைக் கச்சேரி
ஒரு யாகம் .. .. ..
மூன்று மணி நேரம் –
மேடையில் சுற்றியுள்ள
வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..
இவர் சுருதியும்
கீழே இறங்காது”

என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.

"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற
தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட
குரல் வளம்
அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு
நிவேதிதா.

நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள்
சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர்
ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை
கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை
ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால்
அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை
வெளிப்படுத்தினார்.


நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு
அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில்
களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு
தோல்வியைத் தழுவினார்.

மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம்
இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.

பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம்
A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத்
நின்றிருந்தாலாவது
ஜெயித்திருப்பாரோ என்னவோ?

“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத்
இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய
நண்பர் அன்வாருல்லா.

கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று
நேற்று எற்பட்ட ஒன்றா?

“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து
முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து
இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.

தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும்
பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச்
செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது
குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட
என்பது அ.மா.சாமியின் கூற்று.

“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”

என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய
பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி
பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க
வீறு கொண்டு எழுவார்கள் வீரமறவர்கள்.

“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர்
பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு
தேவையாக இருக்கிறது”

என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.

1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன்
சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி
எழுதிய

“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”

என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.

கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு
ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம்
லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர்
துறந்தார்.

1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள்
பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில்
அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர
நிகழ்வு.

“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும்
மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.

இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன்
தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு
ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.

அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று
வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’
கலை அறியாது
‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய
இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி
மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.

தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல,
கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர்
இந்த வெள்ளிநரை வேந்தன்.

ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்
கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம்
முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில்
நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது
காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே
வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில்
சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.

“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”

என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்”
என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.

“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”

என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து
கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி
அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல்
காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக்
காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !

நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள்
அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து
செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"

என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.

'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்" என்பார்

இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா.
அப்துல் கபூர்.

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே" என்று.

அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை
ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று
தொடங்கும்

இன்னொரு பாடலிலும்

“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”

என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!”
என்ற பாட்டிலும்

“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”

என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக

“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை - என்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக்
காட்டியிருப்பார்.

இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி
பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம்
“நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க
வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.

84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த
மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும்
செய்யும்
பிரார்த்தனை.

அருஞ்சொற்பொருள்:

மெளத்து : மரணம்
யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!
தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்
ஈமான் : இறையச்சம்

திண்ணையில் அப்துல் கையூம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904235&format=html

No comments: