Wednesday, December 30, 2009

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

சின்னச்சின்ன விடயத்திற் கெல்லாம் தினமும்
சின்னப்பெண் போல்நீ சிணுங்காதே!-உன்
சிரிப்பை மறந்து சிறிது நேரம்-சுடும்
நெருப்பாய் நீயும் மாறாதே!

இருக்கும் நேரத்தை மகிழ்வாய்க் கழித்து
ஒருவருக் கொருவர் அன்பினைப் பகிர்ந்து
இன்ப நுகர்ச்சி கொள்வதே- இனிய
இல்லற வாழ்க்கை யாம்!

பெண்-ஆண் உரிமையில் சமமே யாயினும்
பெண்ணைவிட ஆண் ஒருபடி மேலேயாம்.
நுண்ணிய மொழிசொல்லும் திருமறையின்
உண்மைக் கூற்றினை உணராயோ?

ஆகாரம்தேடி உனைக் காக்க நாளும்
ஆண்மகன் வெளியில் செல்வானே-அவன்
ஆயிரமா யிரம்பிரச் சினையுடனே-தன்
ஆருயிர் மனைவிதேடி வருவானே.

இல்லம் நுழைந்ததும் எங்கே, ஏன் எனும்
பொல்லாக் கேள்வியைக் கேட்காதே!-அவனுக்கு
தொல்லைகள் தந்து துன்பமிழைத்து-நீ
அல்லல் பட்டு வாழாதே!

அண்டை வீட்டுப் பெண்டிரோடு-வீண்
சண்டை ஏதும் போடாதே!-அவரோடு
தேவையற்ற பேச்சு வார்த்தையில்-காலமதை
பாவையேநீ வீண் செய்யாதே!

மாமியாரே உன் அன்னை யாவார்
மாமனாரே உன் தந்தை யாவார்.
மாசற்ற மனதுடனே பணிவிடைகள் செய்துநீ
மாநிலத்தில் மகிழ்ச்சியாய் வாழ்வாயே!

செய்யும்செயலைச் சிறப்பாய் செம்மையாய்
செவ்வனே செய்திடப் பழகிக்கொள்-நீ
பொய்யான, நிலையற்ற தரணி யதில்
மெய்யான வாழ்க்கை வாழ்வாயே!

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

நாயன் உனக்கு நலவாய் எழுதிட்ட
நன்மை யாவும் கிடைத்துவிடும்-ஏக
நாயன் அருளுடன் நானிலத்தில் நாளும்
நன்றாய் நலமாய் வாழ்வாயே!
………………………………………………………………………

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி

kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
Sent from Chennai, TN, India

--

1 comment:

தமிழ் said...

வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

//

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

//