Tuesday, April 20, 2010

கேட்டரிங்

கேட்டரிங்

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=278

அறிமுகம்
ஒருவரின் ஆரோக்கியம் அவரது உடல்நிலையை அடிப்படையாக வைத்தே அமைகிறது. உடல்நிலையைச் சீராக வைத்துக் கொள்வதில் உணவே முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவைச் சமைப்பது ஒரு கலை. அதைப் பரிமாறுவது இன்னொரு கலை. அப்போது விருந்தினரிடம் நடந்து கொள்ளும் பண்பும் ஒரு கலை.
இவையெல்லாம் இன்றைய நவீனச் சூழலில் நிறுவனமயமாகிவிட்டன. எனவே, உணவு சார்ந்த நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதனால் இந்நிறுவனங்களில் உலக அளவிலான வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் உணவுக்காகத் தினமும் ஹோட்டல்களைச் சார்ந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மட்டுமன்றித் தொழில், கல்வி நிறுவனங்கள், கப்பல், ரயில்வே, விமானத் துறையிலும் கேட்டரிங் படித்தவர்களுக்கு வேலை இருக்கிறது. கேட்டரிங் கலை சுற்றுலாத் துறையின் ஓர் அங்கமாகி விட்டது. எனவே, மெரிடியன், ஹில்டன், ஹயத், மேரியோட், பெஸ்டு வெஸ்டன், ரேடிசன் எனப் பன்னாட்டு நிறுவனங்களும் இதில் முதலீட்டைச் செய்து வருகின்றன.
கேட்டரிங் படித்தவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமன்றி, எளிய ரெஸ்டாரண்டுகளில்கூட வேலை வாய்ப்புகள் உள்ளன.
இவை தொடர்பான படிப்புகள் விவரம்
பி.எஸ்.சி உணவு மற்றும் மேலாண்மை (கேட்டரிங் சயன்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) இது 3 ஆண்டுப்படிப்பு தவிர, பி.எச்.எம். இளநிலை ஹோட்டல் மேனேஜ்மென்ட் 4 ஆண்டுகாலப் படிப்பும் உண்டு. தவிர ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்புகளும் உண்டு. நாடு முழுவதும் ஏராளமான கல்வி நிறுவனங் களில் இப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. இதனால் இப்படிப்பு உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் 3 வகையான ஆய்வுக்கூடங்கள் (சமையல் அறை) அவசியம். முதலாவது அடிப்படைச் சமையல் அறை, அதிகம் பேருக்குச் சமைக்கும் அறை, சர்வதேச உணவு வகைகள் தயாரிக்கும் அறை. மத்திய அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 19 இடங்களில் அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னையிலும் திருச்சியிலும் உள்ளன. இங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் சம்பந்தமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இதில் என்னவெல்லாம் சொல்லித் தரப்படும்? பெயரிலேயே இருப்பது போல் இரண்டு விதமான படிப்புகள் இதில் உள்ளன. சமையல், சமையலறை, சாப்பாடு பரிமாறுதல் போன்ற இன்னும் பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி படிப்பு ஒரு வகை. ஹோட்டல் சம்பந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர் களை உபசரித்தல், ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு இரண்டாவது வகை.
பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு சான்றிதழ்ப் படிப்பு எனப் பல வகை யிலும் நடத்தப்படுகின்றன. குறுகிய காலப் பயிற்சிகளும் உள்ளன. படிப்புக்கு ஏற்ற வகையில் 6 மாதம், ஓராண்டு எனப் படிக்கலாம். பெரிய படிப்புகளை 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் செலவழித்துப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் இல்லாதவர்கள்கூட உடனடி வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் பத்தாம் வகுப்பு முடித்ததும் குறுகிய காலச் சான்றிதழ்ப் படிப்புகளிலும் சேரலாம்.
உணவு தயாரிப்புக் கலை (craft course in food production):
ஒரு ஹோட்டலில் முக்கியமான இடம் உணவு தயாரிக்கும் இடம் ஆகும். சமையல் அறை என்றாலும் இப்பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உணவு தயாரிப்பு இடம் சுத்த மானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தால்தான் ஹோட்டல் நிறுவனத்துக்கே சிறப்பு இருக்கும். இந்த உணவுத் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றுவதற்குத் தேவையான தகுதிகளைத்தான் ஃபுட் புரொடக்‌ஷன் எனப்படும் படிப்புக் கற்றுத் தருகிறது. இப்படிப்பு ஒன்றரை ஆண்டுக் காலப் படிப்பாகும். இதில் சேருவோருக்கு ஆறு மாதங்கள் நேரடிப் பயிற்சி (இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங்) அளிக்கப்படும். சில கல்வி நிறுவனங்கள் ஓராண்டுக் காலச் சான்றிதழ்ப் படிப்புகளையும் நடத்து கின்றன. இதில் சேருவதற்குப் பத்தாம் வகுப்பு படித்தால் போதும். வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை.
பேக்கரி உணவு தயாரிப்புக் கலை (Craft Course in Bakery and Confectionary)
பிரெட், பிஸ்கெட், பன், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விரும் பாதவர்களே கிடையாது. அது மட்டுமல்ல, இயந்திரமயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் இது போன்றவை காலை உணவாகவோ, மதிய உணவாகவோகூட மாறிவிடுகின்றன. குழந்தைகளை மகிழ் விக்கும் இத்தகைய பேக்கரி உணவுப் பண்டங்கள் இல்லாத வீடுகளே இல்லை.
இந்நிலையில் இப்பண்டங்களின் தேவையும் அதிகரித்து வருவதால், இத்தொழிலும் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அதன் காரணமாக, இது தொடர்பான படிப்புக்கும் மதிப்புக் கூடி வருகிறது. பேக்கரி உணவுத் தயாரிப்புக்கலைப் படிப்பு ஓராண்டு டிப்ளமோ படிப்பாகும். இதில் 6 மாதங்கள் தொழில் பயிற்சியும் (இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங்) உண்டு.
10- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். வயது வரம்பு இல்லை. இதைப் படித்து முடித்தவர்கள் ஹோட்டல்களிலும் பேக்கரி களிலும் கேக், பிரெட், பிஸ்கெட், சாக்லெட்களைத் தயாரிக்கலாம். இல்லையென்றால் சொந்தமாகவும் தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம். இப்படிப்பை முடித்தோருக்குப் பெரிய ஹோட்டல்களில் கூட வேலை கிடைக்கும். ஆர்வமும் முயற்சியும் உழைப்பும் போதும். சுயமாகத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவியும் உண்டு.
இல்லப் பராமரிப்பு (Craft Course in House Keeping)
உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர்வாகம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கைகோத்துக் கொண்டிருக்கின்றன. ஹோட்டல் என்றதும் ‘சாப்பிட்டோம் தங்கினோம்’ என்று மட்டும் இருந்தால் போதாது அது சுற்றுலா மேம்பாட்டுக்கும் உதவாது. மாறாக, நல்ல இல்லத்தில் தங்குவது போன்ற உணர்வை அதன் சூழல் ஏற்படுத்த வேண்டும். அதைச் செய்வதுதான் ஹவுஸ் கீப்பிங் படிப்பு.
மாறி வரும் நாகரிக உலகில், மேலைநாட்டவர்களையும் வசீகரிக்க வேண்டுமானால் சொகுசுகள் சரிவரப் பராமரிக்கப்பட வேண்டும். ஹோட்டல் அறைகள், பூங்கா, மதுக் கூடம், கூட்ட அரங்கம், உணவு தயாரிப்பு அறை ஆகியவற்றைச் சரிவரப் பராமரித்தல், சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், அழகாக வைத்திருத்தல் ஆகிய பயிற்சிகள் தரப்படுகின்றன.
அவற்றைப் பராமரிப்போரிடம் சிறந்த வகையில் பணியைப் பெறுவதும் நிர்வாகவியலின் ஓர் அங்கமாகும். இத்தகைய பயிற்சிகளை அளிப்பது தான் இப்படிப்பு. ஓராண்டுக்கான டிப்ளமோ படிப்பு இது. இதிலும் 10-ஆம் வகுப்பு முடித்தோர் சேரலாம்.
உணவுச்சேவை (Craft Course in Food Service):
ஹோட்டல்களிலும் எளிதில் வேலைவாய்ப்பு அளிக்கும் இன்னொரு படிப்பு ‘கிராஃப்ட் கோர்ஸ் இன் ஃபுட் சர்வீஸ்’ ஆகும். இது ஆறு மாத காலப் படிப்பு ஆகும். ஆண்களும் பெண்களும் இதில் சேரலாம்.
கிராஃப்ட் கோர்ஸ் இன் ஃப்ரென்ட் ஆபிஸ் ஆபரேஷன் (Craft Course in Front Office Operation )
ஹோட்டலுக்கு வருவோரை முதலில் வரவேற்பது ஃப்ரென்ட் ஆபிஸ் தான். ஹோட்டல் குறித்த விவரங்களை இங்குதான் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் குறிப்பிட்ட ஹோட்டலில் தங்குவதா, வேண்டாமா என்பதைக்கூட இதுதான் முடிவு செய்யும். ரிசர்வேஷன் இன்பர்மேஷன், கேஷியர், பெல்டெஸ்க் என்ற பல பிரிவுகள் கொண்டது. இப்பிரிவு களில் சேவை புரிய முன்வருவோரைத் தயார் செய்வதே இப்படிப்பு ஓராண்டுக்கு உரியது. சில கல்வி நிறுவனங்கள் 10-ஆம் வகுப்பை முடித்தவர்களையும் வேறு சில கல்வி நிறுவனங்கள் பிளஸ் 2 முடித்தவர்களையும் சேர்த்துக் கொள்கின்றன.
ஃபிரென்ட்ஆபிஸர், லாபி மேனேஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூடிவ் அக்கவுண்டண்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன் எனப் பலதரப்பட்ட பொறுப்புகள் கிடைக்கும். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் மேனேஜராகவும் உயரலாம்.
இந்த மூன்று வருட டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூவில் நீங்கள் ஆர்ட்ஸ், சயின்ஸ், காமர்ஸ் ஆகிய எந்த குரூப் எடுத்திருந்தாலும் பரவாயில்லை. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் வொகேஷனல் குரூப் எடுத்தவர்களும் தகுதியுடையவர்களே.
வேலைவாய்ப்பு
இன்று சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சி இத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருப்பதோடு பணம், புகழ் அந்தஸ்து மூன்றையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது. பெண்களும், கணிசமான அளவு இத்துறைகளில் படித்து நல்ல பதவிகளில் வெற்றிகரமாகச் சாதித்து வருகிறார்கள். தவிர, இப்படிப்பிற்கு வெளிநாடுகளில் உள்ள ஏராளமான ஸ்டார் ஹோட்டல்களிலும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தரும் சக்தி உள்ளது.

நன்றி :
சி.எஸ்.சி. கம்யூட்டர் எஜுகேஷன் பிரைவேட் லிட்
மாணவர் வழிகாட்டி

No comments: