Tuesday, June 8, 2010

பொன்னாடை

பொன்னாடை
( எழுதியவர் : ‘ஷேக்கோ’ – இளையான்குடி )
“என்னங்க …” என்றாள் உள்ளே இருந்து ஹாலுக்கு வந்து கொண்டிருந்த கணவன் ஜலாலைப் பார்த்து அவனது மனைவி நஜ்மா.
“என்னது…?” என்று கேட்கும் தோரணையில் எழுதுவதை நிறுத்தி விட்டு, மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் ஜலால்.
“பெருநா வரப்போகுது … ஊட்லெ ஒரு சாமானும் இல்ல. புள்ளகளுக்கு துணி மணி வேற எடுக்கணும் …” அவள் அமைதியாகப் பட்டியல் போட்டுக் கொண்டிருந்தாள், தேவைகள் பற்றி.
“இப்ப அதுக்கு என்னெ என்ன செய்யச் சொல்றே …?” கணவன் ஜலால், கணீர் குரலில் மனைவியிடம் கேட்டான்.
“என்னெ என்ன செய்யச் சொல்றேன்டு என்னட்டயே கேக்றியலாக்கும்? நல்லாருக்குதே சேதி!” – மனைவி நஜ்மா, அலுத்துக் கொண்டவளாக கணவனைப் பார்த்தாள். பிறகு அவளே தொடர்ந்து பேசினாள்.
“எங்கெயாச்சும், கடன் கப்பெ வாங்கியாச்சும் துணிமணிகளெ எடுத்துத் தக்யக் குடுங்க. ஊட்டுச் சாமானுகளையும் கொஞ்சம் கொஞ்ச மாச்சும் வாங்கி வாங்க…” –அவள் அபிப்பிரயம் கூறிவிட்டு, அமர்த்தலாக நின்றாள்.
அதே நேரத்தில் –
“சார்…. தபால்” – என்ற குரல் வெளி வாசலில் கேட்டது. நஜ்மாவே வாசலுக்குச் சென்று, தபாலை வாங்கி வந்து கணவனிடம் கொடுத்தாள்.
தபாலை வாங்கிப் பார்த்த ஜலாலின் முகம் குப்பென்று மலர்ந்தது ! தபாலின் தலைப்பிலேயே, “பாராட்டு அழைப்பிதழ்” – என்ற வாசகம் கொட்டை எழுத்துக்களில் மிளிர்ந்தது. – அவனை அகமகிழச் செய்தது!
ஜலால், சுமார் 30 – 35 ஆண்டுகளாக இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக, எழுத்துப் பணி ஆற்றிவரும் அருங்கவிஞன் – பெருங் கதைஞன் – நற்சமத்தன் ! அவன் எழுதாத இஸ்லாமியத் தமிழ் ஏடுகள் இல்லை என்றே சொல்லலாம் – பங்கு பெறாத இஸ்லாமியக் கூட்டங் களும் இல்லை எனலாம் !
அந்த அரும்பணிபுரிந்து கொண்டே, அரசு வேலை ஒன்றிலும் தொண்டாற்றி, ஓய்வு பெற்று வீட்டில் இருந்து, எழுத்து ஒன்றே என் வேலை – என்பதாக எண்ணி செயல் புரிந்து வந்தான்.
மாதாமாதம் வரும் சொற்ப பென்ஷன் பணத்தைக் கொண்டு குடும்பம் நடந்தது. மனைவி, பிள்ளைகள் என்ற வகையில் இரு மகள்கள் மற்றும் அவன் – ஆக நான்கு பேர்களுக்கு அவன் வாங்கும் பென்ஷன் பணம் போதுமானதாக இருந்து வந்தது. என்றாலும் –
வேறு வகைச் செலவுகள் – நோய்நொடி – நல்ல நாள் பெருநாள் – விருந்தாளிகள் வருகை … என்றெல்லாம் வந்தால், திண்டாட்டம் தான் !
மனைவி கொடுத்த தபாலை வாங்கிப் பிரித்துப் பார்த்தான் ஜலால்.
அதில் –
“அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ! எங்களது இலக்கிய மன்றத்தின் சார்பாக, தாங்கள் சமுதாயத்துக்கு ஆற்றி வரும் இலக்கியப் பெரும் பணியைப் பாராட்டும் வகையில் தங்களுக்குப் பொன்னாடைப் போர்த்திச் சிறப்பிக்க இருக்கிறோம். எனவே – தாங்கள் தவறாமல் வருகை தந்து பாராட்டில் கலந்து, விழாவைச் சிறப்பித்துத் தரும்படி வேண்டுகிறோம். மிக்க நன்றி . தங்களின் – விழாக்குழு”
வாசகங்களை வாய்விட்டுப் படித்த போது மனைவி நஜ்மாவும் கூட உள்ளம் பூரித்துப் புலகாங்கிதம் அடைந்து போனாள் !
“சரி…” ஒன்னோட தேவைக்கி ஒரு வகையில வாய்ப்பு வந்துருச்சு. விழாவுக்குப் போய்ட்டு வந்த பிறகு ஒன்னோட சாமான்கள், துணி மணிகள் எல்லாத்தையும் வாங்கிக்கிறலாம் போ”
ஜலால் மனைவிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு எழுதிக் கொண்டிருந்த ஆக்கங்களைத் தொடர்ந்து எழுதத் தொடங்கினான்.
பாராட்டு விழா அரங்கம் பளீரென்று பளபளத்துக் காட்சி அளித்தது. அலங்கார வளைவுகள், ஆங்காங்கே விழா அழைப்புப் பேனர்கள் மினுமினுக்கும் ஜரிகைத் தோரணங்கள் …. இப்படியாக ஏகப்பட்ட பொருட்செலவில் எல்லா விதத்திலும் அமர்க்களப்பட்டது அரங்கம் !
விழாத் தலைவர் பேசினார். கேமராக்கள் பளிச்சிட்டன. அடுத்துப் பேசிய பேச்சாளர்கள், எழுத்தாளர்களின் ஏழ்மை குறித்தும் அவதிகள் குறித்தும் பட்டவர்த்தனமாக விளக்கினார்கள்.
அதன்பிறகு சில எழுத்தாளர்கள் பாராட்டப்பட்டனர். இறுதியாக –
முன்னோடி எழுத்தாளராகிய கவிஞர் – கதைஞர் முஹம்மது ஜலால் அவர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டு அவரது இலக்கியப் பணிகள் பாராட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டார் !
விழா முடிவுற்றது. அவரவர்கள் புறப்பட்டுப் போனார்கள். கலந்து கொண்ட பொதுமக்கள் தத்தம் ஊர்களுக்குப் போகும் பஸ்களைப் பிடிப்பதற்காக ஓட்டமும் நடையுமாகக் கிளம்பிப் போனார்கள்.
அருங்கவிஞர் – கதைஞர் – முஹம்மது ஜலால் அவர்களும் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
புறப்படுமுன், தனக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடையை விரித்துப் பார்த்தார். “ஆஹா ! என்ன அழகு ! என்ன பளபளப்பு ! குறைந்தது முன்னூறு ரூபாயாவது இருக்கும் !” என்று அகம் குளிர்ந்து வாயாரப் புகழ்ந்து கொண்டார் !
முதல் நாள் பாராட்டு விழாவுக்குப் போன கணவன் ஜலால், மறுநாள் மாலை ஊர் வந்து சேர்ந்ததைக் கண்டு கண்ணெல்லாம் களி பொங்க வாயெல்லாம் வாழ்த்துக் கூற, மனைவி நஜ்மா வரவேற்றாள்.
“என்ன்ங்க .. எப்டி இருந்துச்சு விழா?” – மனைவி மகிழ்வுடன் கேட்டாள்.
“பெரிய அமர்க்களம் போ ! அருமையான பேச்சுக்கள் – சொற்பொழிவு கள், அருமையான கவியரங்கம் அருமையான பாராட்டுக்கள் – ரொம்ப ரொம்ப விஷேசம் !” ஜலால் உண்மையிலேயே மனநிறைவுடன் கூறினான்.
“ஒங்களுக்கு என்னங்க குடுத்தாக?” மனைவி மிக ஆவலுடன் கேட்டாள்.
“எனக்கும் தான் பொன்னாடை போத்துனாக. மத்தவுகளுக்குக் கூட சும்மா பாராட்டுப் பத்திரம் தான் குடுத்தாக” – கணவன் பெருமையாகக் கூறினான்.
என்ன? வெறும் பொன்னாடை தானா குடுத்தாக ….? வேற போக்கு வரத்துச் செலவுக்குக் கூட ஒண்ணுந்தரலையா?” மனைவி மலைத்துப் போய்க் கேட்டாள்.
“போக்குவரத்துச் செலவா …? நீ ஒரு கிறுக்கச்சி ! இவ்வளவு பெரிய பொன்னாடையைத் தந்தவுக, செலவுக்கு வேறயா பணந்தருவாக?” – அவன் அப்பாவித்தனமாக மனைவிக்குப் பதில் கூறினான்.
மனைவி அசந்து போனாள் ! செலவுக்கென்று வைத்திருந்த பணத்தை, கணவன் வெளியூர் செல்வதற்கென்று கொடுத்தனுப்பிய அவளுக்கு, வெறும் துண்டோடு வந்து நின்ற கணவனையும், அவன் சொன்னதையும் பார்த்து விட்டு எரிச்சலாக வந்தது.
“எங்க … குடுங்க உங்க பொன்னாடையெ …” என்றபடியே, அவன் கையிலிருந்த பையைப் பறித்து உள்ளே இருந்த பொன்னாடையை வெடுக்கென்று வெளியில் எடுத்து விரித்துப் பார்த்தாள் அவள்.
முடிவாக அவள் அவனிடம் “ஏங்க … இந்த துணியெ வாங்குறதுக்குத் தானா, எங்கையிலெ செலவுக்கு வச்சிருந்த காசெப் பறிச்சிக்கிட்டுப் போனிய ? பெரிய பரிசா ஏதாச்சும் பணம் காசு கொடுத்து வாங்கிக்கிட்டு வரவியன்டு நெனைச்சுக்கிட்டு கெடந்தேன். கடைசிலெ இந்தத் துணியெப் போயி வாங்கியாந்து இருக்கியலெ !
பெருநாளக்கி புள்ளெகளுக்குத் துணி எடுக்க என்ன செய்விய ? அதனால இந்தப் பொன்னாடெத் துணியெவெ புள்ளைகளுக்கு ரெண்டு பேருக்கும் பாவாடெ தச்சுக் குடுத்துறலாம். பழய சட்டெகளைத் தப்பிக் குடுத்தறலாம்.”
-மனைவி நஜ்மா அலட்டிக் கொள்ளாமல் கணவனிடம் கூறிவிட்டு, பொன்னாடையுடன் உள்ளே போனாள்.
ஜலால், ஒன்றும் தோன்றாமல் திகைத்துப் போய் நின்றான். அவன் கண்முன்னால், அந்தப் பொன்னாடை நிழலாடியது !

நன்றி : நர்கிஸ் – மே 2010
( இக்கதையினை எழுதிய ஷேக்கோ அவர்கள் இளையான்குடியைச் சேர்ந்தவர். ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வயதான நிலையிலும் இலக்கியப் பணி செய்து வருகிறார். உடல்நலம் குன்றிய நிலையிலும் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அன்னாரது உடல் நலனுக்காக துஆச் செய்திட ஈமான்டைம்ஸ் கேட்டுக் கொள்கிறது. )

No comments: