Thursday, June 10, 2010

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடும் புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோடும், புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில்.


”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?


மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடும், வங்கி சேமிப்பு 7,172 ரூபாயும்


பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் இன்று தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்.


அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, பேருந்துகளில் திடீர் ஆய்வு என இவரைப் பற்றி அடிக்கடி படிக்கும் ஒவ்வொரு செய்தியும் மனதிற்குள் மிகப் பெரிய துள்ளலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.


ஒரு உதாரண மாவட்ட ஆட்சித் தலைவரான இவர். விவசாயிகள் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில் சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தால் என்ன என்று, ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார்.


வெப்படை அருகே ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதி தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அந்த ”ஜில்லாவின் கலெக்டர்” என அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்திருக்கும் செய்தி கேட்டும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறி அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார்.


கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஊக்குவிக்கிறார்.


எல்லாவற்றிக்கும் மேலாக.. புவி வெப்பத்தை குறைக்க உலகலவில் அதிகாரம் வாய்த்தவர்கள் அலட்சியம் காட்டிய போதிலும், உலகத்திற்கே உதாரணமாக தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்த்த வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு செயல்பட்டு, இது வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், நாமக்கல் நகர அரிமா சங்கம் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில் கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.


கிராம குறை தீர் மன்றம், மாதிரி கிராமங்கள், கிராமத் தோப்பு, ஒரு கோடி மரம் நடும் திட்டம், மாவட்ட ஆட்சியரின் கடிதங்கள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்தில் இது குறித்து நிறைய செய்திகள் உள்ளன.


தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் பெருமையும் கொண்டவர்


வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.

No comments: