Tuesday, June 15, 2010

தீன்குறள்

தமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழைச் சொன்ன அளவுக்கு இஸ்லாத்தைச் சொன்னதில்லை என்கிற ஒரு கருத்து உலவுகிறது.

சீறாப்புராணம் தொடங்கி மஸ்தான்சாஹிபு பாடல்கள் வரை, " கொண்டாடப்படும்" இஸ்லாமிய இலக்கியங்கள் பலவும் தமிழைப் பிழிந்து கொடுத்த அளவுக்கு இஸ்லாமியக் கருத்தாக்கங்களை மொழிந்திடவில்லை என்பது தமிழாய்ந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களிடம் குடிகொண்டுள்ள ஓர் ஆதங்கம்.

இது ஒருபுறமிருக்க, இஸ்லாம் என்றாலே இலக்கியத்துக்கு இடமளிக்கக் கூடாத ஒன்று என்பது போன்ற 'தூய' தோற்றத்தையும் சிலர் முனைந்து தோற்றுவித்துவருகின்றனர்.:-(

வாழ்விற்கு உகந்த இஸ்லாமிய நற்கருத்துகளை இதயத்திற்கு உகந்த இனிய தமிழ்மொழியில் இலக்கியமாக்குவதன் எதிர்பார்ப்பு இரண்டையும் அறிந்தவர்களின் விழிகளில் ஏக்கமாகிப் படர்ந்திருக்க, அந்தத் தாகநெருப்பைத் தணிக்கும் அளவில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்களின் நூல்கள் அமைவதுண்டு. 'இறைவா' என்கிற தலைப்பில் வந்த உரைவீச்சு நூல் ஒரு எடுத்துக்காட்டு.

ஒருமுறை அவர், தமிழில் இஸ்லாமியக்கவிதை எழுதுவது 'கத்திமீது நடப்பது மாதிரி கடினமான வேலை' என்று குறிப்பிட்டார். கவிதைகளின் மிகைப்பண்பும் வரம்புக்குட்பட்டே, ஆனால் சுவையாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அதில்.

என்னதான் திலகமாக இருந்தாலும் 'உன்புகழை வானமே அண்ணாந்து பார்க்கிறது' என்றெல்லாம் 'முத்து' வரிகளை உதிர்க்க இயலாது. கூடாது.


அவ்வகையில் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் இயற்றியுள்ள 'தீன்குறள்' தமிழ் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது.

திருக்குறளின் அடியொற்றி 'அ'வில் தொடங்கி 'ன்' னில் முடியும் தீன்குறள், இறைமொழி, நபிவழி இவற்றின் கருத்துகளை 101 அதிகாரங்களாக, 1010 குறட்பாக்களில் கொண்டுள்ளது.

ஒருசோறு பதமாக,

செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;அதை
எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)

என்பதைச் சுட்டலாம்.


இஸ்லாமிய நற்கருத்துகளை இனியதமிழில், பா வடிவில் வாசிக்க விரும்பும் யாருக்கும் இந்நூல் பயனளிக்கும்.

நூல் : தீன்குறள்

ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

விலை : ரூ. 100

கிடைக்குமிடம் :

தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081

செய்தி: Imantimes
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com


நூல் அறிமுகம் : தீன் குறள்

http://www.mudukulathur.com/noolarimugamview.asp?id=260

இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம்.
தமிழின் முதல் எழுத்து “அ”; இறுதி எழுத்து ‘ன்’ “அகர முதல எழுத்தெல்லாம்…” என்று ஆரம்பித்து, “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கியது திருக்குறள் என்பர் சில ஆய்வாளர்கள்.
‘அளவியல் ஒப்ப அனைத்தும், இறையின்
உளவியல் ஒப்பே உலகு”

என ஆரம்பித்து
“உறைந்தும் இறைபால் உயரார், மனத்துள்
நிறைந்து மகிழா ரெனின்”

என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது தீன் குறள் எனலாம்.
‘கடவுள் வாழ்த்து’ ஆரம்பித்து ‘ஊடல் ஊவகை’ யில் முடிப்பார் திருவள்ளுவர். வாழும் வள்ளுவரான பதுருத்தீனும் ‘இறை வாழ்த்து’ தொடங்கி ‘மன நிறைவு’டன் முடிக்கிறார்.
101 தலைப்புகளில் 1010 தீன் குறள்களைக் கொண்டிலங்கும் இந்நூல் இறை மறை, நபிமொழி ஆகியவற்றின் உள்ளீடுகளைக் கொண்டு வெளிச்சக் கருத்துக்களைப் பெளர்ணமிக்க வைத்துள்ளது. இந்தச் “சின்ன குருவிச்சிறகு” “அன்னப் பெருஞ் சிறகாம் மாக்கவிஞர் முன்னே” தீன்குறளால் மாட்சிமை பெற்றுள்ளது.
இந்நூலில் இல்லாதது எதுவுமில்லை என்று கூறுமளவுக்கு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் இஸ்லாமிய நெறியில் பொங்கிப் பிரவாகமெடுத்துள்ள சிறப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும் இதோ சான்றுக்கு இரு தீன்குறள்கள் :
“செய்யின் உவப்பஒரு தொண்டேனும் செய்க;
அதை எய்யின் இறப்ப தரிது” (தீன் குறள் 554)

(செய்ய விரும்பினால் ஊர் மகிழுமாறு ஒரு தொண்டேனும் செய்வீர்; அத்தகைய தொண்டு காலத்தால் அழியாதது).
“தொண்டு புரியார் தவசீலராயினும்
கண்டு புரியா துலகு” (தீன் குறள் 555)

(தொண்டு புரியார் தவ சீலராயினும் உலகம் அவரை இனங்கண்டு போற்றாது).
இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது; ஒவ்வொரு வரும் படிக்க வேண்டியது; எல்லாப் பள்ளிவாசல்களிலும் படிக்கும் பொருட்டு வைக்கப்பட வேண்டியது; மதரஸாக்களிலும் ஏனைய அரபிக் கல்வி நிலையங்களிலும் கட்டாயமாகப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட வேண்டியது; அனைத்து முஸ்லிம் கல்வி நிலையங் களிலும், பொதுநலச் சேவை அமைப்புகளிலும், அங்கிங்கெனாதபடி எல்லா நூலகங்களிலும் அவசியம் இடம்பெற வேண்டியது; சமுதாயப் புரவலர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கித் தேவையானவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட வேண்டியது. ஏனெனில் கவிக்கோ டாக்டர் அப்துல் ரகுமான் கூறிய வண்ணம் “தீன் குறள்” – இஸ்லாம் தமிழுக்குத் தரும் ‘மஹர்’; தமிழ் இஸ்லாத்திற்குத் தரும் ‘பரிசம்’. - ’எஸ்.எம்.எம்’.

நூல் : தீன்குறள்

ஆசிரியர் : தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
விலை : ரூ. 100
கிடைக்குமிடம் :
தளபதி தாரிக் பதிப்பகம்
65/1131 வ.உ.சி. நகர்
தொண்டியார் பேட்டை
சென்னை – 600 081


நன்றி : இனிய திசைகள் ( முதல் இதழ் )
டிசம்பர் 2002

No comments: