Sunday, June 20, 2010

மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி

மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி

( மேலப்பாளையம் த.மு.சா. காஜா முகைதீன் எம்.ஏ.எம்.பில்., )

இஸ்லாமிய இலக்கியங்களில் கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, முனாஜாத்து, படைப்போர் ஆகியவை இஸ்லாமிய இலக்கியங் களுக்கே உரித்தான புதிய வடிவங்களாகும். அவற்றின் உள்ளடக்கம் வேறுபட்ட தன்மைகள் உடையன. மஸ் அலா இலக்கியம் மட்டுமே எவ்விதக் கற்பனையும் கலவாத உள்ளடக்கச் செய்திகளைக் கொண்டுள்ள ஆயிரம் மஸ்அலா, வெள்ளாட்டி மஸ்அலா, நூறு மஸ்அலா என்னும் மூன்று வகை மஸ்அலா இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் இயற்றியுள்ளனர்.
காலத்தால் முந்திய ஆயிரம் மஸ் அலா என்னும் அதிசய புராணம் வண்ணப் பரிமளப் புலவரால் கி.பி. 1572 இல் இயற்றப் பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்…) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அல்குர் ஆனிலும் ஹதீதுகளிலும் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய வரலாறு மற்றும் போதனைகளே இதில் முற்றாக வழங்கப்படுகின்றன.
மஸ் அலா என்னும் அரபிச்சொல் ஆல் (கேள்வி) என்னும் வேர் சொல்லிலிருந்து தோன்றியதாகும். நபிபெருமான் (ஸல்…) அவர்கள் மதினாவில் இருக்கும் பொழுது மதினாவிற்கு அண்மையிலுள்ள கைபர் என்னும் பகுதியில் வேதியர் அப்துல்லா இப்னு சலாம் என்பாரை சந்தித்து இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என ஜிப்ரயீல் (அலை) மூலம் நபிபெருமான் (ஸல்) அவர்களுக்கு இறைக்கட்டளை கிடைக்கிறது. இதன்படி உக்காஸ் (ரலி) அவர்களைத் தூதுவராக அனுப்பி நபி பெருமான் (ஸல்…)அவர்கள் தம்மைப் பற்றியும் இஸ்லாத்தின் நெறி பற்றியும் அப்துல்லா இப்னு சலாமிடம் அறிவிக்கும்படிச் செய்தனர். இதனை செவிமடுத்த அப்துல்லா இப்னு சலாம்.
அர்த்தமொன் றறியா வண்ணமாயிர மசலாவுங்கள்
சித்தமன் புறவேகொண்டு சென்றவர்க்கருள்வேன்.
(ஆயிர மஸ் அலா :32)
என இயம்பி நபி பெருமானை சந்திக்கும் முகமாக 700 யூதர்களுடன் அப்துல்லா இப்னு சலாம். மதினாமாநகர் வர ஆயத்தப்படுகிறார் இதனை நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவித்து, அப்துல்லா இப்னு சலாம் விடுக்கும் ஆயிரம் வினாக்களுக்குரிய விளக்கங்களையும் இறைக்கட்டளைப்படி நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவிக்க அக்கருத்துக்களையே விளக்கமாக நபி (ஸல்…) அவர்கள் அளிக்கிறார். இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்படி நடப்போருக்குரிய பயன்களாக ஆயிரம் மஸ் அலாவின் தொடக்கத்தில் வண்ணப் பரிமளப் புலவர்.
மூதறி வுண்டாம் நாளும் முதலவன் கிருபை தோன்றும்
தீதறுந் துன்பந் தீருஞ் செல்வமுஞ் சிறப்பு முண்டாம்
பூதலத் துயிர்கள் யாவும் புகழ்ச்சியும் மகிழ்ச்சியான
ஆதியை யிறசூல் தம்மை யகம்மகிழ்ந்தருளுவோர்க்கே (ஆயிரம் மஸ் அலா : 2 ) என்று விளங்க வைக்கிறார்.
நான் உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று திருக் குர்ஆன் மற்றொன்று அல்ஹதீஸ் இவ்விரண்டையும் உறுதியாக பற்றிக்கொள்ளின் நீங்கள் ஒரு போதும் வழி தவறமாட்டீர்கள் என்று தம் சமூகத்தினருக்கு நபி (ஸல்…) அவர்கள் அறிவிப்புச் செய்ததற்கிணங்க குர்ஆன் ஹதீஸ்களே ஆயிரம் மஸ் அலாவின் நற்செய்திகளாக உள்ளன.
அப்துல்லா இப்னு சலாமின் ஆரம்பக் கேள்வி தீனென்றால் என்ன? என்பது ………………………………………………… தீனாவதே சாறான கலிமா சாஹா தத்துடன் ஈறாத சிபத்தில் ஈமானுமாம் (ஆயிரம் மஸ் அலா : 72)
என்று இஸ்லாத்தின் அடி நாதமான கலிமா பற்றியது நபி (ஸல்…) அவர்களின் பதில். லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லா என்பதே நபி (ஸல்…) அப்துல்லா இப்னு சலாமுடைய உள்ளத்தின் பதித்த முதல் செய்தியாகும். இது.
தொடர்ந்து இஸ்லாத்தின் கொள்கைகளில் ஏற்கப்பட்டவை விலக்கப் பட்டவை, நல்லார், அல்லார், திருக்குர்ஆன் சிறப்பு ஜிப்ரயீல் (அலை) யின் செயல்பாடு, கதிரவன் சந்திரன் பற்றிய விளக்கங்கள், சொர்க்கத்தின் சுகம், நரகத்தின் கொடுமை பற்றியும் ஆபில் காபில் தஜ்ஜால் ஆகியோர் பற்றியும் இறுதி நாள் பற்றியும் விளக்கங்கள் நபி (ஸல்…) அவர்களின் விடைகளில் இடம் பெற்றுள்ளன.
மனிதப் படைப்பு குறித்து திருக்குர்ஆன் (22.5) நிச்சயமாக நாம் உங்களை எண்ணிலிருந்து சிருஷ்டித்தோம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒருமண்ணாற் படைத்த மாந்தன் ஒரு வடிவாய்
ஆவரென்றே
கருதியே பலமன் கொண்டு கருப்பிடித்தனமத்தா னந்தப்
பரிசுவால் மானுட ரெல்லாம் பலவண்ணானாரென்ன
மருவியே இரசூல் கூற …
என்பதில் மனிதப் படைப்பின் தன்மை பற்றிய இறைவாக்கைப் பற்றி வண்ணப் பரிமளப்புலவர் மஸ் அலாவில் பதிவு செய்துள்ளார்.
கியாமத் (இறுதி) நாளின் அடையாளங்கள் வரிசைப்படுத்திக் கூறிய புலவர். உங்கள் மீது உங்கள் இறைவனால் சாட்டப்பட்டிருக்கும் மலக்குல் மவுத் தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள் (அல்குர்ஆன் 32 :11) என்று மனிதனின் இறப்பையும், அவன் இறுதி நாளில் எழுப்பப்படுவதனையும் பற்றிய இறைமறைக் கருத்துக்களையும், நன்மை, தீமை பற்றி வானவர் எடுத்துரைப்பதையும்.
கியாமத்தான கியாமத்து நாளிலே – கருதிநாயன்
கணக்குகள் கேட்டு நாள்
நியாயத் தாயடியாரை எழுப்புமந்தேரஞ் – சாலி
குவானவர் தங்களைத்
தயாநட் பானது கொண்டந்தப் பூமியின் தக்க
கூட்டுற வாக்குவா ரென்னவே
பயானைப் பேச நபி பதம் போற்றி வந்தவர் சூதர் – மறு மொழி கூறுவார். (மஸ் அலா :797)
இவ்வாறு இறை மறையின் செய்திகளே இதில் படிப்பினையாக இடம் பெறுகின்றன. இறுதிநாளில் உயிர்கள் அனைத்தும் இறைவன்பால் சென்றபின் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்? இதனை
இனிமேல் துனியாவோடு இகழ்ச்சியிலை
பனிஆதம் பிறப்பும் இறப்புமில்லை
யுனுசேர் அருணத்து உதயங்களிலை
அநியாயம் அவலம்பவம் கசடுகளிலையே
(ஆயிர மஸ் அலா : 962)
என்று ஒரு மஸ் அலா உரைக்கிறது. உலகின் அழிவுக்குப்பின் உலக வாழ்க்கை நன்மை செய்தோர்க்கு நன்மையும் தீமை செய்வோர்க்குத் தீமையும் வந்து நேரும் என்பதை,
நன்மை செய்தவர் சொர்க்க மாநகரெய்தி வாழ்வர்
தின்மை செய்தவர் நரகமானது சேர்ந்திருப்பர்..
என இவ்வாறு மனிதப் படைப்புத் தொடங்கி இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளையும் இம்மை மறுமைப் பயன்களையும் மஸ் அலாக்கள் வாயிலாக நபி (ஸல்) மொழி மறுமொழிகள் அப்துல்லா இப்னு சலாமுக்கு தீனுல் இஸ்லாம் பற்றிய தெளிவினை ஏற்படுத்தியது. அந்நிலையில்
மாமானமும்புகழ் முகம்மதே, எங்களின்
வாழ்வே குதாய் தூதரே
சூமானியமான வழிபிழைத் தேநின்ற சூதர்
அங்கிடமானதை
யீமானி லேநீனிலே சாருமசலாவுத் தமாமாய்ப்
பயானோதினீர்
சாமானி யாமோக சாருமசலாவுந் தமாமாய்ப்
பயானோதினீர்
அப்துல்லா இப்னு சலாமின் இக்கூற்றில் அவருக்கு ஏற்பட்ட தெளிவு வெளிப்படுகிறது.
மஸ் அலாக்கள் மூலம் நபி (ஸல்…) அளித்த மெய்மைகளை உள்வாங்கிய அப்துல்லா இப்னு சலாம் தம்முடைய குழுவினர் ஏழு நூறு பேர்களுடன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். இவ்வதிசயப் புராணமென்னும் ஆயிரமசலா ஒவ்வொன்றிலும் இஸ்லாமியமார்க்கக் கல்வியை வண்ணப்பரிமளப்புலவர் பரிணமிக்கச் செய்துள்ளார்.

நன்றி : சம உரிமை ( ஜுன் 2010 )

No comments: