Friday, July 2, 2010

மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !

மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !

( ஆக்கம் :- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=182

நூற்றுக்கும் குறைவான வீடுகளே இருக்கும் எங்கள் ஊர் ஒரு குக்கிராமம் தான். எழில் பொங்கும் இயற்கை வளத்தை போர்வையாய் போர்த்திக் கொண்ட ஒரே கிராமம் எங்கள் ஊராகத் தானிருக்கும். நெஞ்சை நிமிர்த்திய தென்னை மரங் களும், வெட்கத்துடன் தலை குனிந்து நிற்கும் வாழை மரங் களும் தான் எங்கள் ஊரின் பசுமை புரட்சி நாயகர்கள் ! சிறிய ஊராயிருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் கூடி வாழும் ஓர் அதிசய சமத்துவபுரம் என்றே சொல்லலாம் ! ஏனென்றால் எமது மக்களுக்குள் ஜாதி பிரிவினையோ, தீண்டாமையோ கடுகளவுமிருக்காது.

ரம்ஜான் ,தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற எந்த பண்டிகை யானாலும் அவற்றை ஊர் சார்பில் கொண்டாடுவது தான் எங்கள் கிராமத்தின் தனிச்சிறப்பாகும். இந்த கண் கொள்ளக் காட்சியை காண்பதற்கென்றே அக்கம் பக்கத்து ஊர் மக்களெல்லாம் எங்கள் ஊரின் சிறப்பு விருந்தினர்களாக வந்து செல்வர். ராவுத்தரின் டீக்கடையும், மூர்த்தியின் மளிகைகடையும், கென்னடியின் காய்கறி கடையும்தான் எங்கள் கிராமத்தின் வணிக (shopping mall) வளாகங்கள் !

எங்கள் ஊரின் நுழைவு வாயிலை அழகு படுத்திக் கொண்டிருப்பது ஊமை குளம் தான். அந்த குளத்திற்கு நீர் வற்றிய அனுபவம் இன்று வரை கிடையாது ! மழை பெய்தாலும், பொய்த்தாலும் வற்றா ஜீவநதி போல அந்த குளம் தான் எங்கள் ஊரின் வாழ்வாதாரமாய் திகழ்கிறது. வெளியூர் காரர்களையும் கூட புன்சிரிப்புடன் வரவேற்கும் அந்தக் குளத்தின் பெயரையே தான் எங்கள் ஊரின் பெயராக வும் வைத்துள்ளோம் !

சுற்று வட்டார பதினெட்டுப்பட்டி கிராமத்து மக்களாலும் மதிக்கப்படும் ஊமைகுளம் கிராமத்தில் பிறந்ததற்காக நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்வோம். வற்றாத ஜீவநதியாய் இருக்கும் ஊமை குளத்தால் எங்களுக்குப் பெருமையா? அல்லது எங்களின் நல்ல பழக்க வழக்கங் களால் ஊமை குளத்திற்குப் பெருமையா? என்பதை பிரித்துப் பார்க்க முடியாது !

பரந்து விரிந்த வயற்பரப்புதான் எங்களின் பொருளாதார சந்தை. நெல்,கரும்பு,தென்னை,வாழை போன்றவைகள் மிகுத மாய் விளையும் எங்கள் கிராமத்தின் மண்வளம் கண்டு விவசாய அதிகாரிகளே அதிசயித்துப் போவதுண்டு. படித்தவர் கள், பாமரர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருமே வயற் காட்டில் இறங்கி வேலை செய்வது கூடுதல் சிறப்பாகும். எங்களின் விளைச்சலுக்கு தேவையான தண்ணீரை ஊமை குளமே வழங்கி வருகிறது !

கோடை வெப்பத்தின் போது அக்கம் பக்கத்து ஊர்களின் குளங்கள், கண்மாய்கள், கிணறுகளெல்லாம் வற்றும் போது அவ்வூர் மக்கள் பெரிதும் நம்பிக்கையுடன் தண்ணீருக்காக எதிர்பார்த்து வருவது எங்களின் ஊமை குளத்தை தான். காவிரி நீருக்காக தமிழகமும் கர்நாடகமும் அடித்துக் கொள்வதை போல, முல்லை பெரியாறுக்காக கேரளாவும் தமிழகமும் மல்லுக்கட்டுவதை போல, பாலாறுக்காக தமிழகமும் ஆந்திராவும் கீரியும் பாம்புமாக இருப்பதைப் போல இல்லாமல் சுற்று வட்டார பதினெட்டுப்பட்டி கிராமத்து மக்களுக்கும் பயன் தரும் வகையிலேயே ஊமைகுளம் வாழ்ந்தது !

நாங்களும் இந்த விஷயத்தில் பரந்த மனப்பான்மையுடன் தான் நடந்து கொள்வோம். காரணம் நீர் வளமென்பது இறைவனின் அருட்கொடை ! அது மனிதனாய் பிறந்த அனைவருக்குமே சொந்தமானது என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கையுடையவர்களாய் வாழ்ந்ததால் தான் எவ்வளவு பெரிய கோடை வெப்பமானாலும், மழை பெய்தாலும், பொய்த்தாலும் எங்கள் ஊமைகுளம் மட்டும் வற்றா ஜீவநதியாய் இருந்து கொண்டிருக்கிறது. எங்கள் ஊர் மக்கள் தங்களது குடும்பத்தின் நல்லது கெட்டதென எதுவாக இருந்தாலும் ஊமைகுளத்தை சாட்சியாக வைத்துதான் முடிவு செய்வர் !

ஆமாம், குளத்தாங்கரையில் குளிக்கும் போது தான் மற்றவர்களோடும் கலந்து பேசி செல்வோம். நாங்கள் பேசிக்கொள்ளும் எந்த ரகசியமானாலும் அதை ஒட்டு கேட்டு பிறரிடம் கோள் சொல்லும் பழக்கம் ஊமைகுளத்திற்கு கிடையாது ! அந்த நம்பிக்கையில் தான் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போதே முக்கியமான விஷயத்தை கூட பேசிக் கொள்வோம்.

ஒரு நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய ராணுவ அதிகாரிகளில் சிலரே நம் நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டவருக்கு விற்ற கொடுகையை கடந்த காலங்களில் தினசரி பேப்பர்களில் படித்த நினைவுண்டு. ஆனால் இது போன்ற ஈனத்தனமான வேலைகளை எங்கள் ஊர் ஊமைகுளம் செய்த்தே இல்லை. மொத்தத்தில் பொதிகை சேனலின் சிறப்பு அடையாளமான வயலும் வாழ்வுமாகவே தான் எங்களது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது !

எங்களில் யாரும் யாருக்காகவும் கடனாளியாக இல்லாமல் எல்லோரும் உழைப்பாளிகளாகவும், முதலாளிகளாகவுமே வாழ்ந்து கொண்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் தான் எங்கோ உள்ள இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி பேரலைகளில் சிக்கி சின்னா பின்னமான கடலூர் மாவட்ட தேவனாம்பட்டினத்தைப் போல எங்கள் ஊரிலிருந்து 10 மைல் கல்லுக்கு அப்பால் உள்ள ஊரான மாயாவி குளத்து மக்களின் வெளிநாட்டு மோகம் என்ற பூகம்பத்தால் சிக்கி சின்னாபின்னமாகி போனது எங்கள் ஊர் ஊமைகுளமும் தான் !

படிப்பறிவில்லாத நாங்கலே ஆயிரக்கணக்கில் டாலர்களையும், தீனார்களையும் பார்க்கும் போது படித்த இளைஞர்களான உங்களால் ஏன் வெளிநாடுகளில் சம்பாதித்து குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரனாக முடியாது ? என எங்களைப் பார்த்து கேள்வி கேட்பது போலிருந்தது அவர்களது நடையும், பாவனைகளும் ! மாயாவி குளத்தை சேர்ந்த வெளிநாட்டு அடிமைகள் சிலரின் கவர்ச்சியான வெளித்தோற்றத்தை கண்டு எங்கள் ஊர் இளைஞர்கள் சிலரும் கூட வெளிநாட்டு உழைப்பை பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர்.

அதன் விளைவு தற்பொழுது எங்கள் ஊரின் வயற்பரப்பில் முக்கால் பகுதி விளைநிலங்கள் கட்டுமானங்களால் அழிக்கப்பட்டுவிட்டன. ஆம், வெளிநாட்டு பணத்தின் ஆணவம் பங்களாக்களாக உருமாறிவிட்டதால் உயிரென மதித்து வந்த எங்களது சுய நிர்ணய விவசாயமென்னும் பொருளாதாரச் சந்தையை நாங்களே குழி தோண்டி புதைத்து விட்டோம். இப்போதோ, உலகப் பொருளாதார சந்தையின் சரிவை கண்டு திகிலடைந்து நிற்கிறோம். காரணம் படித்த எங்களின் பலரது வேலைவாய்ப்புகளும் கேள்விக் குறியாக்கப்பட்டு விட்டன.

படித்த நாங்கள் வெளிநாட்டு கரன்சிகளை வைத்து ஊரில் காட்டிய பந்தாவால் படிப்பறிவில்லாத எங்கள் ஊர் இளைஞர்களின் மனநிலையிலும் மாற்றம் வந்த்து. அதன் விளைவு, அவர்களிடம் இருந்த சொற்ப விளைநிலங்களும் பன்னாட்டு குளிர்பான கம்பெனிக்காக விற்கப்பட்டு அதில் கிடைத்த சொற்ப பணத்தையும் ஒரு போலி ஏஜெண்ட் வசம் கொடுத்து வெளிநாடு போனவர்கள் குடியுரிமை மீறல் சட்டத்தின் கீழ் கைதிகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

எதற்காக எனக் கேட்கிறீர்களா ? போலி விசாவில் அந்நாட்டிற்குள் நுழைந்ததற்காகத் தான். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் எனக் கூறுபவர்களே, தினமும் ஏமாறுவது தான் இன்றைய வாழ்வியல் எதார்த்தம். பசுமையான வாழ்க்கை சொர்க்கத்தை இழந்து மேலை நாட்டு ஆடம்பர கலாச்சாரமென்னும் நரக வாழ்க்கையை தேடிக்கொண்ட எங்களது எதிர்காலம் மட்டுமா சூனியமானது ? எதுவுமே அறியாத எங்கள் ஊரின் ஊமைகுளத்தின் எதிர்காலமும் தான் சூனியமாகிக் கொண்டிருக்கிறது !

பன்னாட்டு குளிர்பானக் கம்பெனியின் கழிவுகள் ஊமைகுளத்தில் கலந்து குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ லாயக்கற்றதாய் மாறிவிட்டது. எங்கள் வாழ்க்கையில் முதன் முதலா இப்போது தான் ஊமைகுளம் வற்றிக்கொண்டிருக்கும் கொடுமையை பார்க்கிறோம். விரைவிலேயே எங்களின் கண்களை விட்டும் ஊமைகுளம் மறைந்து விடும். அந்த பாவத்தை மட்டும் மறக்கவோ, மறைக்கவோ முடியாமல் நாங்கள் சுமந்து வாழப் போகிறோம்.

கடந்த 19-08-09 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநில உணவு அமைச்சர்களின் மாநாட்டில் பேசிய விவசாய அமைச்சர் சரத் பவார் இவ்வருடம் மழை குறைவாக பெய்ததால் 1.37 கோடி ஏக்கர் அளவுக்கு நெல் பயிரிடுவது குறைந்து விடுமென்றும் அதனால் ஒரு கோடி டன் அரிசி உற்பத்தியும் குறையும் என்றார். இந்த தகவலால் நாட்டில் அரிசி (தட்டுப்பாடு) பஞ்சம் வந்து விடுமோ? என நாட்டு மக்களை கவலை கொள்ள செய்துவிட்டது.

மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் ஆந்திர மாநில விவசாயிகள் மழை பெய்ததால் வறட்சியின் பிடியில் சிக்கி தற்கொலை செய்து வருகிறார்கள். கடந்து 40 நாளில் மட்டும் 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். என்ற செய்திகளையெல்லாம் தினசரி பத்திரிகைகளில் படிக்கும் போது நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது. மழை பெய்தாலும், பொய்த்தாலும் விவசாயத்திற்கும் மனிதர் களின் வாழ்வியல் தேவைகளுக்கும் குறைவின்றி நீராதாரத்தை வழங்கி வந்த எங்கள் கிராமத்து ஊமை குளத்தின் இயற்கை வளத்தை எங்களின் ஆடம்பர வாழ்க்கை யென்னும் மோகத்திற்காக நாங்களே அழித்து விட்டோமே என நினைத்து ஓ… வென கதற துடிக்கிறது எங்கள் நெஞ்சம்.

வெளிநாட்டு சிறைகளில் வாடி வதங்கி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் எங்கள் கிராமத்து இளைஞர் களும், வேலை பறி போய் விடுமோ? என அச்சப்பட்டு வாழும் எங்கள் ஊர் வெளிநாட்டு உழைப்பாளிகளும் ”என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் – ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் –

ஒழுங்காய் – பாடுபடு – வயற்காட்டில் – உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் “ என்ற பாடல் வரிகளை வாழ்க்கை தத்துவமாக ஏற்றிருந்தால் இத்தனை இடர்பாடுகளுக்கும் ஆளாகாமல் தவிர்த்திருக்கலா மல்லவா?
குளங்கள் இல்லா ஊர்கள் இல்லை என்ற நிலையை மாற்றி குளங்கள் உள்ள ஊர்களே இல்லை என்ற “சாப” புரட்சிக்கு வித்திட துடிக்கும் கிராமத்து மக்களே எங்களை பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ளுங்கள். இருக்கும் குளங்கள், கண்மாய்கள், பொதுக்கிணறுகளையாவது நம்மில் ஒருவர் என நினைத்து பாதுகாக்க முன் வாருங்கள். சிறப்பு பொருளாதார மண்டலம், துணை நகரங்கள், பண்ணாட்டு வர்த்தக நிறுவனங்கள் என திட்டங்களை அறிவித்து அதற்காக விளைச்சல் பூமிகளையெல்லாம் கபளீகரம் செய்ய துடிக்கும் அரசியல் (ஊழல்) வாதிகளின் சூழ்ச்சிக்கு பழியாகி விடாமல் உயிரை கொடுத்தேனும் இயற்கை வளங்களையும் விளை நிலங்களையும் பேணி பாதுகாப்பது இந்தியனாய் பிறந்துள்ள ஒவ்வொருவரின் மீதான கடமை என நினைத்து வாழ்வோம் ! இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் !!

இப்படிக்கு

பொது மக்கள்

ஊமை குளம்

குறிப்பு :-
வாசகர்கள் தங்களின் விமர்சனங்களை SJAROOSI@ yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 050 – 7959960 என்ற கைப்பேசிக்கோ தெரியப்படுத்தலாம் !

No comments: