Monday, August 16, 2010

இதோ ! ரமழான் வந்துவிட்டது

இதோ ! ரமழான் வந்துவிட்டது
(பி. எம். கமால்,கடையநல்லூர்)

பாவத்தை சுட்டெரித்துப்
பரிசுத்தப் படுத்துதற்கு
இதோ
ரமழான் வந்துவிட்டது !

ஆசை மையித்தை
அடக்குதற்கும்
ஆணவத்த்திமிரினை
முடக்குதற்கும்
இதோ
ரமழான் வந்துவிட்டது !

உணவுப்பொருட்களின்
உற்சாக வியாபாரம்
இப்போதுதானே இருமடங்காகிறது !
நாம் கைக்கொள்வது
ராத்திரி விருந்தா ?
பட்டினி விரதமா ?
கேள்விக்குறியோடு
இதோ ரமழான் வந்து விட்டது !

மன்னிப்பை வழங்குகின்ற
மன்னவனை நோக்கி
மன்னிக்க யாசிக்கும்
மாதம் வந்துவிட்டது !

தன்னையே இறைவன்
தானமாய் தருகின்ற
தவஞான மாதம்
தரையில் வந்துவிட்டது !
ஒளியான மாதம்
உளியாக வந்து விட்டது !
மனிதனைச் செதுக்கும்
உளியாக வந்து விட்டது !


பணத்தை ஏழைகளுக்கு
பகிர்ந்தளிக்கும் உங்களால்
பசியை அவர்களுக்கு
பகிர்ந்தளிக்க முடியுமா ?

ரமழானில் மட்டுமே
ரகசியமாய் முடிகிறது !

ஏழைக்கா நாமெல்லாம்
எடுத்து கொடுக்கின்றோம் ?
இறைவனுக்கல்லவா
மறைவாகக்கொடுக்கின்றோம் !
அதனால்தான்
இறைவன் தன்னையே
பரிசாகத் தருகின்றான் !

எத்தனையோ இசங்களால்
இயலாத ஒன்றை
ரமழான் மட்டுமே சாதிக்கின்றது !
நோன்பு ஒரு
வித்தியாசமான விருந்து !
பசிதான் இங்கே
பரிமாறப்படுகிறது !-
பரமன் இறைவன்
பிரதான விருந்தாளி !
காய்ந்த வயிறு
கம்யூனிசத்தின் பிறப்பிடம் !
நோன்பால் -
காய்ந்த வயிறோ
சோசலிசத்தின்
சொர்க்க பூமியாகிறது !
பட்டினி இங்கே
பங்கு வைக்கப்படுகிறது !

உண்ணாமல் பருகாமல்
உபவாசம் இருப்போரே !
இந்த மாதத்தில்
இருந்தேனும் உங்களை
கந்தலாகிடாமல் காத்துக் கொள்ளுங்கள் !

pmkamal28@yahoo.com

No comments: