Wednesday, November 14, 2007

இந்திய பொருளாதார வளர்ச்சியும் , வளைகுடா இந்தியர்களும்

இந்திய பொருளாதார வளர்ச்சியும் , வளைகுடா இந்தியர்களும்

இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ஆக மாறி விட்டது.உலகின் மிகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறி விட்டார். இந்தியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சியா, வீக்கமா என்று என்னுள் மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இது வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். நமது கட்டுரையின் நோக்கம் இதை ஆராய்வது அல்ல. வளைகுடாவில் இருக்கும் லடசக்கணக்கான இந்தியர்களுக்கும் , இந்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதே ஆகும்.

பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள் 350,450 திர்ஹமிற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். . சுருக்கமாகச் சொன்னால் 80 சதவீதம் பேர் 8000 ரூபாய்க்குள் வேலை செய்பவர்களே. காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்து இந்த பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக டாலரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் நிலை திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2002 ல் 750 திர்ஹம் இருந்தால் 10,000 ரூபாய் அனுப்பி விடலாம். (2002 மே 1000 ரூபாய் = 74.30)ஆனால் இப்போது 970 திர்ஹம் தேவைப்படுகிறது. 2007 மே கிட்டத்தட்ட 15 முதல் 20 சதம் வரை இழப்பு ஏற்படுகிறது.ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்னதான் உயர்ந்தாலும் விலைவாசி குறைவதாய் இல்லை. அதற்கு அரசும் ஏதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பாலின் விலையும் , அரிசி, பருப்பின் விலையும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைவதே இல்லை.

5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது. 5000 த்தில் துபாய் செல்ல வாங்கிய கடன், அதற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என அனைத்தையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டவர்கள் இப்போது 4.000 எனும் போது மேலும் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். அபி அப்பா குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டுகாலமாக 350 , 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது.ஆனால் இந்தியாவில் எவையெல்ல்லாம் அத்தியாவசியத் தேவையோ அவையெல்லாம் விலை உயர்கின்றன. ஆடம்பரத் தேவை உள்ளவைகளின் விலை குறைகின்றன்.

இதனுடைய வெளிப்பாடு தான் சமீபகாலங்களில் துபாயில் நடக்கும் போராட்டங்கள் போன வாரம் 4000 பேர் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப்பட இருந்தனர். ஆனாலும் அதில் 100 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன். 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் - அபுதாபி சாலையில் மறியல் செய்யப்பட்ட போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள். எது நடந்தாலும் நாட்டாமை புஷ் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பவர்கள். டாலர் வீழ்ச்சியடைந்து வரும் போது அவர்களுடைய நாணய மதிப்பை அதிகரிப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு அதற்கு உரிமையில்லை.

1. டாலருக்கு நிகரான தமது நாணய மதிப்பை வளைகுடா நாடுகள் உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப் போவதில்லை.
2. வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.
3. இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி ' என்று திரும்பப் போவதும் இல்லை.
4. வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.
5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு?.எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.

.
மைலில் அனுப்பியவர் : Mansoor Khan
--
Adam.Arifin
http://www.geocities.com/adamarif

No comments: