Saturday, August 30, 2008

இலங்கை பத்திரிகாசிரியரின் மறைவு - ஓர் இரங்கல்

"நவமணி' இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் நாடித்
துடிப்பு. அதன்நாளங்களில் இரத்தமாக
ஓடோ ஓடென்று ஓடி அதற்கு உயிர்த் துடி[ப்பைத் தந்தவர், இன்று தானே அதை
இழந்து அமரராகிவிட்டார்.

சாதாரண நிருபராக இருந்து, பத்திரிகாசிரியராக உயர்வதற்குள் அவர் பட்ட
கஷ்டங்கள், பெற்ற அனுபவங்கள்
வரும் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடியவை. ஆனால், அது முறையாகப்
பதியப்படவில்லை என்பது சோகம்.
ஒரு ஒலிப்பதிவுக் கருவியுடன் என்னோடு ஒன்றிரண்டு மணி நேரம் உட்காருங்கள்.
உங்கள் அனுபவங்களை அசை
போடுங்கள். அதை ஒரு நூலாக - வாழ்க்கைச் சரிதமாக வடிக்கும் பொறுப்பை நான்
ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால், வேலைப்பழு காரணமாக, நேரத்தோடு நித்தம் நித்தம் யுத்தம் நடத்திக்
கொண்டிருந்த அவருக்கு நேரமே
கிடைக்கவில்லை. காலமும், காலனும் கூட காத்திருக்கத் தயாரில்லை.

அரசியலில் ஆழ்ந்த புலமை, சமூகப் பிரச்னைகளில் பிரக்ஞையுடன் கூடிய அக்கறை,
அதை எழுத்தில் வடிக்கும்
வல்லமை. முகம் நோக்காது, விளைவுகளை எண்ணாது, அதே சமயம் முகத்தில்
அடித்தாற்போல் சொல்லாமல்
நளினமாகவும், நாகரீகமாகவும் உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த பாங்கு. அவரை
'பெரிய ம்னிதர்' என்று
முத்திரை குத்தப்பட அருகதை உள்ளவராக்கியது.

உயர் மட்டத்திலுள்ள அத்தனை சமூக - பொருளாதார - அரசியல் பிரமுகர்களையும்
தோழமையுடன் கைலாகு
கொடுத்துப் பழகும் அளவுக்கு பரிச்சயம். ஆனால், இந்த செல்வாக்கின் ஒரு
துளியையேனும் தன் சொந்த
லாபங்களுக்காகப் பயன் படுத்தினாரா என்றால், அழுத்தம் திருத்தமாக வரும்
பதில் " இல்லை" என்பதாகும்.

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன ? அது வேறொன்றுமில்லை. இலங்கையில்,
அதுவும் தமிழில், அதுவும்
கட்சி சாராது, நடுநிலை நின்று பத்திரிகை நடத்துவதுதான் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். அது மலையைப்
புரட்டி கட்லில் உருட்டும் பணி. அதை எவ்வித நெம்புகோலும் இல்லாமல்
நெஞ்சுரத்துடன் செய்தார் என்பதுதான்
அவருடைய தனிச்சிறப்பு.

பத்திரிகை வெளிவராமல் இருக்க 99 ஒன்பது காரணம் இருக்கும். அதற்காக
அச்சமோ, கவலையோ படமாட்டார்.
வெளிவர உதவும் அந்த ஒரு காரணம் போதும். பத்திரிகையை வெளிக்கொணர்ந்து
விடுவார். பத்திரிகை அச்சிட
மசிதான் தேவை.ஆனால் இவர் உபயோகித்த மசி இவரது உதிரமும், வியர்வையும் !

சரக்கு குவிந்து கிடந்தது. பக்கங்கள் இல்லை. எதை எடுப்பது, எதை விடுவது,
எப்போதும் அவரை வாட்டிய சவால்.
சளைத்தாரில்லை. பொருளாதாரம் புறமுதுகில் ஓங்கி அடித்தது. தினசரியாக
நட்த்துவது நஷ்டத்தால் இடித்தது.
அதனால் என்ன ? மாற்று வழி கண்டு பிடி. வாரம் ஒரு முறை அல்லது
இருமுறையாக்கு. காலம் கனியாமல்
போகாது அன்று பார்த்துக் கொள்ளலாம் என்கிற வைராக்கியமும் விடா
முயற்சியும் எல்லோருக்கும் வந்து விடாது.

லண்டன் "தீபம்" தொலைகாட்சியில் நான் வாரம் தோறும் நடத்தும் அரசியல்
விமர்சன நிகச்சிக்கு " அரங்கம் -
அந்தரங்கம்" என்று பெயர் வைத்தேன். என்ன ஆச்சரியம் ! நான் அடுத்த முறை
இலங்கை வந்தபோது பார்க்கிறேன்
"நவமணி' யின் இரண்டாம் பக்கத்தில் அவர் எழுதி வந்த பிரசித்தி பெற்ற,
எல்லோரும் படிக்கும், சக்தி வாய்ந்த
அந்தப் பகுதிக்கும் அதுதான் பெயர்.

"உங்களைப் பார்த்து நான் வைக்கவும் இல்லை. என்னைப் பார்த்து நீங்கள்
வைக்கவும் இல்லை. இயல்பாகவே
அப்படி அமைந்து விட்டது. அதன் பொருள் நீங்களும் நானும் ஒரே அலைவரிசையில்
(Wave Length) சிந்திக்கிறோம்
என்பதுதான். அதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள் என்றார். செலவைப் பொருட்படுத்தாது,
தவறாமல் "நவமணி" அனுப்பித் தந்தார் இங்கே, இலங்கை பற்றிய செய்திகளை
நான் விஷய ஞானத்துடன் அணுக அது எனக்குப் பெரிதும் உதவியது.

அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் என் பள்ளித் தோழர். பால்ய நண்பர். அவர் மீது
அதீதமான அன்பும், நட்பும், மதிப்பும்
மரியாதையும் வைத்திருந்தார். அவருடைய வளர்ச்சி தன்னுடைய வளர்ச்சி போல்
எண்ணீ மகிழ்வார். எங்கள்
இருவரையும் சேர்ந்த்தே சந்திக்கப் பிரியப்படுவார்.சுவாரஸ்யமான எங்கள்
இளமைகால அனுபவங்களை
கரிசனத்துடன் கேட்பார். ஒரு நாள் ஸாஹிராக் கல்லூரியைப் பற்றிப்
பேசும்போது, " ஒரே உறையில் எப்படி
இரண்டு வாள்கள் இருந்தீர்கள் ? " என்றார். நான் சொன்னேன். ' இரண்டு
வாள்கள் அல்ல வால்கள். அதுதான் நான்
இந்தியாவுக்கு ஓடி விட்டேன்" என்றேன். வாய்விட்டுச் சிரித்தார்.
நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பார்.

ஆனால், இவரும், துணைவியாரும் விபத்தில் சிக்கி, தான் தப்பி, துணைவியார்
போய் விட, " அவளோடு நானும் போயிருக்க வேண்டும்" என்றவர் துக்கம் தாளாமல்,
ஓசைப்படாமல், கண்ணீர் விட்டு அழுதார். ஆறுதல் சொன்னோம்.

இன்று அவர் போய் விட்டார். நண்பர்களாகிய நாங்கள் அவரது பிரிவுத் துயர்
தாங்காது கண்ணி வடிக்கிறோம்
எங்கள் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அவர் இல்லை..

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட "நவமணி" யின் ஆசிரியர் திலகம்
அல்ஹாஜ் அஸாருடைய இழப்பு
இலங்கைக்கு மட்டுமல்ல, எழுத்துலகுக்கும், ஊடகத் துறைக்கும் ஈடு செய்ய
முடியாத இழப்பு. அவரது பயிற்சிப்
பட்டறையில் அனுபவ பாடம் கற்றுக் கொண்ட எத்தனையோ மாணவ மணிகள் தாங்கள் சாதனைகள் மூலம்
பெயரெடுத்து அவரது பெயரை பிரகாசிக்கச் செய்வார்களாக. அதுவே அவருக்குச்
செலுத்தும் இதயமார்ந்த
அஞ்சலியாக இருக்கும். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிசு
சுவர்க்கமாக இருக்கட்டும்.

ஆழ்ந்த இரங்கலுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com
__._,_.___

No comments: