Sunday, August 24, 2008

கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்?

கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்?

இரா. சோமசுந்தரம்

http://www.dinamani .com/NewsItems. asp?ID=DNE200808 21114626&Title=Editorial+ Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=8/22/2008&dName=No+Title&Dist=0



ஒளவை சொல்கிறாள்: 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'.

வங்கிகளில் கல்விக் கடன் வாங்குவதைப் பிச்சை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் மாணவர்களையும் பெற்றோர்களையும் பிச்சைக்காரர்களைப் போலத்தான் நடத்துகின்றன வங்கிகள்.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 8800 இடங்களும் சுயநிதிக் கல்லூரிகளில் 67500 இடங்களும் உள்ளன.

அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் சுயநிதி கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ. 75 ஆயிரம் தேவைப்படுகிறது. கல்விக்கடனைத் தேடி அலைபவர்களில் 90 சதவீதம் பேர் சுயநிதி கல்லூரிகளைத் தேர்வு செய்தவர்களே.

'ரூ. 4 லட்சம் வரை எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்க வேண்டும்' என்பது மத்திய அரசின் நிபந்தனை. ஆனால் வங்கிகள் 'காற்றில் பறக்கவிடும்' முதல் நிபந்தனை இதுதான்.

தொழிற்கல்வியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையிலும்கூட, பிணை (ஸþரிடி) இல்லாமல் கல்விக்கடன் தர வங்கி மேலாளர்கள் எவரும் தயாராக இல்லை. எல்லாரும் முன்ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள்.

வங்கிகள் கேட்கும் மற்ற 'போனபைடு சர்டிபிகேட்', சம்பளச் சான்று போன்றவை கல்வித்துறையை வங்கிகள் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போனபைடு சர்டிபிகேட் முதலாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும்போதுதான் கிடைக்கும். ஆனால் மாணவர்கள் அதற்கு முன்பாக ரூ.75 ஆயிரம் கட்ட வேண்டும். இதில் விடுதிக் கட்டணமும் சேர்ந்தால் குறைந்தது ரூ.1 லட்சமாக இருக்கும்.

வங்கிகள் கடன் தராத நிலையில், கந்துவட்டிக்கு கடன்வாங்கி கல்லூரியில் சேர்ந்துவிட்டு பின்னர் போனபைடு சர்டிபிகேட்டுடன் வங்கி வாசல்படியை மிதிக்க வேண்டும். கந்துவட்டி வாங்கி கல்லூரிக்குப் பணம் செலுத்திய கட்டண ரசீதுகளை ஏற்க மறுக்கின்றன வங்கிகள்.
அடுத்து சம்பளச் சான்றிதழ். மாத வருவாய் ரூ.12,000க்கு குறையாமல் இருந்தால் மட்டுமே கல்விக் கடன் வழங்க பரிசீலிக்கலாம் என்று வங்கிகள் தங்களுக்குள் ஒரு ரகசிய வரையறை வைத்துக்கொண்டுள்ளன.

மாதச்சம்பளம் ரூ.12,000க்கு இருக்க எல்லாரும் என்ன அரசு ஊழியர்களா? சாதாரண நிறுவனங்களில் மாதக்கூலியாகப் பணியாற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலர்.
சம்பளப் பதிவேட்டையே பார்த்திருக்காதவர்கள். சம்பளச் சான்று கிடைக்கவே வழியில்லை.
நிலைமை இப்படியாக இருக்கும்போது வங்கிகளின் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து கல்விக் கடன் பெறுவோர் யார் யார்? சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு சில 'ல'கரங்களைக் கொடுத்துவிட்டு, கல்விக்கட்டணம் செலுத்தும் வசதி படைத்தோர் மட்டுமே!. இவர்களில் பலர் பணக்காரர்கள், பெரும்வியாபாரிகள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள்.

இவர்களுக்கு பிணை கையெழுத்துப் போட ஆட்கள் உண்டு. இவர்கள் கல்விக் கடன் பெறுவது பணம் இல்லாமையால் அல்ல. அரசு தரும் வரிச்சலுகையைப் பெறவும், தங்கள் சட்டவிரோதப் பணத்தை முறைப்படுத்திக்கொள்ளவும்தான்.

வங்கி அலுவலர்களுக்கு இவர்களைக் கண்டால் கொள்ளை மகிழ்ச்சி. ஏனென்றால் கல்விக்கடன் இலக்கை எட்ட முடிவதுடன் தங்களுக்குப் பிரச்னையும் வராது.
ஆனால், மிக நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் நடுத்தர வருவாய் பிரிவைச்சேர்ந்த மாணவன் என்றால் வங்கிகள் கடன் தராமல் இழுத்தடிக்கும்.

தொழிற்கல்வி பயிலும் அனைத்து மாணவனுக்கும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் எந்த சான்று, பிணை இல்லாமல் கல்விக்கடன் தர முடியும். அதற்கு வங்கிகள் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு மாறியாக வேண்டும்-குறைந்தபட்சம் கல்விக்கடனில் மட்டுமாகிலும்.

வட்டிக்குப் பணம் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒருவரை முன்னேற்றுவதற்கு கடனுதவி அளிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

இந்தக் கடனுதவி வட்டியை எதிர்நோக்கியதாக இல்லாமல், லாபத்தில் பங்கு என்பதாக மாறுவதுதான் இஸ்லாமிய வங்கி முறையின் நுட்பம். இதை 'முதரபா' அல்லது 'லாபத்தில் பங்கிடுதல்' என்பதாக இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.

இஸ்லாமிய வங்கியில் தொழில் கடன் பெறுவோர், முதலில் தனது தொழில் திட்டத்தை, தனது திறமையை, சந்தை வாய்ப்புகளை வங்கியிடம் விவரிக்க வேண்டும்.

வங்கியின் தொழில் வல்லுநர் குழு இந்த புதிய தொழில்முயற்சியின் வெற்றிவாய்ப்பை ஆராயும். அவர்கள் இது முறையான, நஷ்டம் தராத தொழில்தான் என்று உறுதிகூறிய பிறகு கடன் கிடைக்கும். இந்த புதிய தொழிலில் வங்கி ஒரு பங்குதாரராக இருக்கும்.

தொழில் விருத்தியடைந்து, லாபம் பெருகும்போது, ஒரு பங்குதாரரை அவருக்கான தொகையைக் கொடுத்து வெட்டிவிடுவதைப்போல விலக்கிவிடலாம். நஷ்டம் வந்தால்? வங்கியின் வல்லுநர் குழுவின் கணிப்புகள் எந்த இடத்தில் தவறாகப் போனது என்பதை வங்கி ஆராயும். சரிசெய்யும் வாய்ப்பு இருந்தால் தானே களத்தில் இறங்கும். இல்லையானால், நஷ்டம் தொடங்கியபோது அத்தொழிலை நிறுத்திவிடும். கணிப்புகள் தவறானால் வல்லுநர் குழுவுக்குப் பெருத்த அவமானம் என்பதால், சரியான விதத்தில் கணிப்பார்கள்.

தொழில்கடனுக்குப் பொருந்தும் இந்த இஸ்ஸôமிய வங்கி நடைமுறை ஏன் தொழிற்கல்வி பயிலும் மாணவருக்குப் பொருந்தாது?

ஒரு மாணவரின் மதிப்பெண், அவரது அறிவுத்திறன், பேச்சுத்திறன், அவர் தேர்வு செய்துள்ள பாடப்பிரிவு, அதில் அவருக்கு உள்ள வேலைவாய்ப்பு அனைத்தையும் வங்கியின் வல்லுநர் குழு மதிப்பீடு செய்து, எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் தர முடியும். லாபத்தில் பங்கீடு என்ற அதே முறையில், இவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியதும் இவர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு பகுதியை ஒப்பந்தப்படி பெறலாமே.

இதை செய்வதற்கு, ஒரு மாணவனை கணிக்கும் அறிவும் ஆற்றலும், துணிச்சலும் தேவை.
வாழ்க்கையில் எந்த ரிஸ்க்-கும் இல்லாமல் மாதம்தோறும் சம்பளம் மட்டும் கைநிறைய எதிர்பார்க்கும் அதிகாரிகளே நிறைந்து வழியும் வங்கிகளில் ரிஸ்க் எடுப்பவர்கள் சிலர் மட்டுமே.

அதனால்,

பாத்திரம் அறிந்து பிச்சைபோடும் திறன் இல்லாத வங்கிகள் முன்பாக மாணவரும் பெற்றோரும் பிச்சைக்காரர்களாக நிற்கிறார்கள் கைகளை ஏந்தியபடி!

ஏழை சொல் அம்பலம் ஏறாது எனும்போது அதிகாரிகளிடம் செல்லுமா என்ன?

No comments: