Wednesday, December 31, 2008

அறிஞர் சித்தி லெப்பை - இலங்கை

அந்த அரபிகள் தங்களது ஈமானுடைய உறுதியினாலும், சுத்த வீரத்தினாலும், மன ஒற்றுமையினாலும், விடா முயற்சியாலும் இவ்வளவு கீர்த்தியும், மேன்மையும், வெற்றியும் பெற்றார்கள். இப்படி இருக்க இக்காலத்தில் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தங்களுடைய முன்னோர்களாகிய அரபிகள் போல மன ஒற்றுமையும், முயற்சியும் இல்லாதிருக்கின்றனர். மற்ற பல சமயத்தினர் எல்லாம் கல்வியிலும், சீர்திருத்தத்திலும், மேற்பட்டு வருதலையும் இவர்கள் நாள்தோறும் கீழ் பட்டு வருதலையும் பார்த்து எவர்களும் மனம் வருத்தம் கொள்ளும் படியாய் இருக்கிறது. ஆகையால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எல்லாரும் ஒரு மனப்பட்டு கல்வி பயிற்சிக்குரிய கருமங்களிலே முயற்சிப்பது கடமையாகிறது.

சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னாள் அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் தமது சக மதத்தவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இது. அந்த வேண்டுகோள் இன்று கூட பொருத்தமுடையதாக காணப்படுகிறது. இடையில் சென்று கழிந்த ஒரு நூற்றாண்டு காலம் அவருடைய வேண்டுகோளின் கனாகனத்தை சற்றும் குறைத்தும் சிதைத்தும் விடவில்லை. காலத்து கேற்றதாக காணப்படும் அதன் துரதிஷ்ட குரல் எம் கவனத்தை ஈர்கின்றது. எனவே இலங்கை முஸ்லிம்கள் தமது முக்கிய தினங்களில் எல்லாம் அவரது அறை கூவலுக்கு செவிமடுத்து அன்னாரது நினைவு மங்காது பேணுதல் முஸ்லிம் சமுதாயத்தின் நண்பனும், நல்லாயனும், நல்லாசிரியனுமாகிய அவருக்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். 1838 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி பிறந்த சித்தி லெப்பை அவர்கள் 1898 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் தேதி காலமானார்.

இலங்கையின் கலாச்சார வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டை மறுமலர்ச்சி காலம் எனலாம். நீண்ட நெடுங்காலம் நிலை தடுமாறி நினைவிழந்து, செயல் ஊக்கமின்றி கிடந்த பௌத்தர்களும், ஹிந்துக்களும் விழித்து எழுந்து கிழக்குலக அறநெறிகளுக்கும், மேற்குலக நெறி முறைகளுக்கும் சமரசம் காண, நவின அறிவாற்றலுக்கும் பண்டைய ஒழுக்க முறைகளுக்கும் ஒப்புரவு காண முயன்று கொண்டு இருந்தனர். மேற்கு நாட்டவரின் ஆதிக்கத்தில் பேதலித்து நின்றவர்கள் அவ்வாதிகத்தினால் ஏற்பட கூடிய நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்க்க முற்பட்டு இருந்தனர்.

ஆனால் இலங்கை முஸ்லிம்களோ எதிலும் அக்கறையற்று வாளாவிருந்தனர். சக சமுதாயத்தவர்கள் எழுச்சி பெற்று துடிப்புடன் செயற்பட்டமையை அவர்கள் உணரவில்லை. கைத்தொழில் புரட்சியினால் புத்தூக்கம் பெற்ற ஐரோப்பா உலகம் அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விட கங்கணம் கட்டி நின்றமையால் முஸ்லிம் உலகம் வலிமையற்று கிடந்ததென்பதை இலங்கை முஸ்லிம்கள் உணராது வாளாவிருந்தனர். மற்றும் பற்பல சாதியாரும் கல்வியிலும் சீர்திருத்தத்திலும் மேற்பட்டு வர இவர்கள் தமது தந்தை வழி தொழில்களுடன் திருப்தி பட்டு கிணற்று தவளைகளாக வாழ்ந்து வந்தனர். மாற்றத்தை வெறுத்த அவர்கள் "தழுவி நட அன்றேல் அழிந்து போ" என்ற வாழ்கை நியதியை அசட்டை செய்து வந்தனர். "மக்கள் தமது மனதை மாற்றிக்கொள்ள வராதவரை அல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் மாற்றமுண்டு பண்ண மாட்டான்". என்ற இறை வாக்கினை மறந்து இருந்தனர்.

எனவே முஸ்லிம்கள் கல்வித்துறையில் பின்தங்கியும், பொருளாதார துறையில் தேக்க முற்றும், கலாச்சார துறையில் ஒதுங்கியவர்களாக, மார்க்க துறையில் மாற மரபு உடையவர்களாக, ஆய்வு துறையில் ஆர்வங் குன்றியவர்களாக, அரசியல் துறையில் கணக்கு எடுக்க படாமலும் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இந்த பரிதாப நிலையினை சித்தி லெப்பை அவர்கள் தீட்சனியத்துடன் கண்டு மனம் வெதும்பினர். சென்று கழிந்த பல நூற்றாண்டுகளில் ஊக்கமும் உற்சாகமும் குன்றி வாழ்ந்த தமது சக மதத்தவர்கள், எதிர் காலம் பற்றி எவ்வளவு சிரதையுமற்றவர்களாக மாறிவிட்டமை கண்ட அவர் இலங்கை முஸ்லிம்கள் தமது சமுதாயத்தின் பரிதாப நிலைமையை உணர வைத்தால் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கொண்டார். இப்பணியில் தமது சமுதாயத்தின் பிற பெரியார்களின் ஒத்துழைப்பையும் பெறல் அவசியம் என்பதையும் அவர் உணர்ந்தார். இதனை சாதிப்பதற்காக அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். " முஸ்லிம் நேசன்" என்று அந்த இதழுக்கு பெயரிட்டார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி முதல் முறையாக வெளிவந்த இப்பத்திரிகையில் ஆசிரியர் வசனமே நாம் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய பகுதி.

இந்த ஆசிரிய வசனத்திலே, சித்தி லெப்பை, தமது வாரப்பத்திரிகை மூலமாக தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினார். தத்துவம், அறிவியல் ஆகியன சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் தமது பத்திரிகையில் பிரசுரிக்க தீர்மானித்து இருந்தார். வர்த்தக துறையில் புதிதாக தோன்றி வரும் போட்டியாளர்களை விட்டு தமது சக மதத்தவர்களை எச்சரிக்க முற்பட்டார். தமது வாசகர்களின் மகிழ்ச்சிக்காகவும், முன்னேற்றதிர்க்காகவும் கற்று அறிந்த உலமா பெருமக்களின் கருத்து பெட்டகத்தை திரட்டி தரபோவதாக அறிவித்தார். அரபு கிதாபுகளிலும், ஆங்கில நூல்களிலும் பறந்து செறிந்து இருக்கும் அறிவு செல்வங்களை எல்லாம் தேன் சேர்க்கும் வண்டை போல சேகரித்து தமது வாசகர்களுக்கு வழங்க இருப்பதாக எழுதினார். இவ்வகையாக தமது சக மதத்தவர்களின் மனதிலே அரண்கள் அமைக்க அவர் விரும்பினார். இவையே அவரது திட்டங்களும் லட்சியங்களும் ஆகும்.

சித்தி லெப்பை அவர்கள் எதனையும் துருவி ஆராயும் இயல்பு உடையவராய் விளங்கினார். சட்ட துறையில் மட்டும் அவர் பாண்டித்தியம் பெற்று இருக்கவில்லை. சமகால அரசியல் விவகாரங்களை ஐயந்திரிபற அறிந்திருந்தமையால் தமது சமுதாயத்தை பீடித்த பீடைகள் யாவை என்பதை வெகு நுட்பமாக நாடி பிடித்து சொல்லும் திறமை பெற்று இருந்தார். சர் சயேத் அஹ்மத் கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். ஆறுமுக நாவலரின் சமய, கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிகளும் 1880 இல் கானல். ஒல்கோட் அவர்களை இலங்கையின் பால் ஈர்த்த பௌத்த நடவடிக்கைகளும் அவர்களை பெரிதும் வசிகரித்து இருந்தன. இஸ்லாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களை தேட அவரை தூண்டியது.

ஆகவே அவர் தமது பிரக்கிராசித் தொழிலையும் கண்டி மாநகர சபையில் உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த அந்தஸ்தையும் மகிழ்ச்சியுடன் தூக்கி எறிந்தார். தமது பிற்கால வாழ்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். இம்முயற்சியில் ஆறு வருடங்களுக்கு மேலாக தம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரப் பத்திரிக்கை மூலமாகவும் இஸ்லாம் பற்றியும் கல்வி பற்றியும் எழுதிய கட்டுரைகள், முஸ்லிம் பாடசாலைகளின் உபயோகதிற்கென்று பிரசுரஞ் செய்த பாடநூல்கள், பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய பிரசங்கங்கள், கொழும்பிலும் பிற இடங்களிலும் நிறுவிய பாடசாலைகள் ஆகியவற்றினாலும் பெரும் வெற்றி ஈட்டினார்.

தமது கால உலகில், இலங்கை முஸ்லிம்கள் ஆங்கிலத்தை புறக்கணித்தல் தற்கொலைக்கு சமமானது என்பதை சித்தி லெப்பை ஐயம்திரிபற அறிந்து இருந்தார். எனவே இஸ்லாத்தின் மீதுள்ள உவப்புக்கோ, முஸ்லிம்களின் கலாச்சாரத்துக்கோ பங்கம் ஏற்படாத வகையில் ஆங்கிலம் போதிக்கும் பாடசாலைகளை அமைப்பதற்கான வழி வகைகளை ஆராயலானார்.

1884 ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டாலும் ஏழு வருடங்களுக்கு பின்னர், அவருடைய அயரா உழைப்பின் பயனாக அல்-மதரஸதுஸஹிராஹ் என்னும் பெயரில் புத்துயிர் பெற்றது. இதுவே பிற்பாடும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியாக மலர்ந்தது.

இஸ்லாத்துடன் உள்ளார்ந்த தொடர்பில்லாத போதிலும் மக்கள் மனதிலே வேரூன்றி இரண்டறக் கலந்துவிட்ட பல பழக்க வழக்கங்களைக் கைவிடுமாறு அவர் தமது சக மதத்தவர்களைக் கேட்டுக் கொண்டார். இப்பழக்க வழக்கங்கள் காலத்தையும் நேரத்தையும் செல்வத்தையும் விரயஞ் செய்வனவென்று எடுத்துக் காட்டினார். எனவே ஜனாஸா அடக்கம், சியாரத் செய்தல், தொப்பி அணிதல், நிக்காஹ் சடங்குகள், ஜும்மா பிரசங்கங்கள் என்பனவற்றை ஒட்டிய சம்பிரதாயங்களில் மாற்றங்கள் தேவை எனப் பிரச்சாரம் செய்தார். இஸ்லாமிய வாழ்கை முறையை திடப்படுதுவதற்கே தரீக்குகள் ஆரம்பிக்கபட்டனவன்றி மக்களுக்கிடையே பகைமையைப் பெருக்குதற்கல்ல என்று வற்புறுத்தி விளக்கினார்.

சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டில் முஹமதியர் இருவர் நியமன உறுப்பினராக அங்கத்துவம் பெற்றனர். இந் நியமனம் கிடைக்கும் வரை சித்தி லெப்பை அவர்களே முஸ்லிம்களின் உத்தியோகச் சார்பற்ற பிரதிநிதியாகத் தமது மக்களின் நலனை முன்னிட்ட விசயங்களில் அவரே அரசாங்க அதிகாரிகளுடன் பரிந்து பேசினார். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார். அத்துடன் இது விசயத்தில் தமது முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்கினார். சமயம் நேர்ந்த போதெல்லாம் இலங்கை முஸ்லிம்களின் சமுதாய ஒருமைப் பாட்டையும், கலாச்சார தனித்துவத்தையும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும் நிலைநாட்டி வந்தார்.

தனது பெரியார்களைக் கனம் பண்ணாத சமுதாயம் பெரியார்கள் தோன்றுவதற்கான அருகதையற்றதாக நாளடைவில் சீரழிந்து விடுமென்பெது நிருபனமான உண்மை. இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் தந்தையும் சமுதாய வழிகாடியுமாகிய சித்தி லெப்பை அவர்களின் பெயர் நிலைத்து நிற்பதற்கும், அவர் மீது நமக்கிருக்கும் மதிப்பை வெளிபடுத்துவதற்க்கும் சிறந்த வழி அன்னார் காட்டிய வழியில் இலங்கை முஸ்லிம்கள் மட்டும் அல்லாது அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களும் பயனிப்போமாக!

இக்கட்டுரை மணி மஞ்சரி 1972 ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டது.

No comments: