Sunday, February 15, 2009

பழமொழியும் பின்னணியும் !

பழமொழியும் பின்னணியும் !

- பாத்திமுத்து சித்தீக்


சீனாவில் கி.பி 220க்கும் 280க்கும் இடைப்பட்ட காலத்தில் காவ் காவ் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அவர் மிகவும் புத்திக்கூர்மையானவர். ஒரு சமயம் பெரும் படையொன்றுடன் சற்றுத் தொலைவில் உள்ள எதிரி நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றச் சென்று கொண்டிருந்தார். வெயில் உக்கிரமாக அடித்துக் கொண்டிருந்ததால் நா உலர்ந்த படை வீரர்கள் தண்ணீர் ... தண்ணீர் என்று தவிக்க ஆரம்பித்தார்கள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மொட்டையான வெட்டவெளி .படைவீரர்கள் நடை தளர்ந்து உடல் சோர்ந்து போய்க் கொண்டிருந்தனர். நிலைமையை உணர்ந்த மன்னர், மிகப்பெரிய ப்ளம் மரத் தோப்புகள் சற்றுத் தொலைவில் உள்ளன.மரம் நிறைய பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லாமே புளிப்புப் பழங்கள். பரவாயில்லை. ஒன்றுமில்லாததற்கு அதையாவது தின்னலாம் என்றார்.
அரசரின் பேச்சில் ஆறுதலடைந்த படை வீரர்கள், தாங்கள் தின்னப்போகும் புளிப்புப் பழங்களைக் கற்பனை செய்தவாறு நடையை எட்டிப் போட்டார்கள். புளிப்புச் சுவையை கற்பனையில் சுவைக்கச் சுவைக்க அவர்கள் நாவில் எச்சில் ஊறியது. அதனால் நாவறட்சி நீங்கியது. ப்ளம் மரத் தோப்புகளை அடையும் முன்னரே அவர்கள் தண்ணீர் கிடைக்கும் இடத்தை அடைந்து விட்டார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கற்பனையான ஒன்றால் தங்களைத் தாங்களே சாந்தப் படுத்திக் கொள்வது தான் விவேகம் என்னும் பொருள்பட "ப்ளம்மை நினைத்து தாகத்தை தணித்துக் கொண்டாற்போல" எனும் பழமொழி நடைமுறையில் சீனர் களிடம் வழங்க ஆரம்பித்தது.
இதே போன்று நூஹ் நபி (அலை) காலத்து வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு "தலைக்கு மேல் வெள்ளம் வந்தால் பெற்ற பிள்ளையும் காலுக்கு அடியில்" எனும் பழமொழி வழக்கில் உபயோகித்ததாக அரபியர்கள் கூறுகிறார்கள்.
அரபுலகில் பொதுவான பழமொழிகளைத் தவிர இஸ்லாமியக் கலாச்சாரங்களைப் பின்னணியாக வைத்தே பெரும்பாலானவை உருவாகின்றன. மாதிரிக்குச் சில:
*முதுகுக்குப் பின்னால் இடிபாடு ;முகம் மட்டும் கிப்லா. (தொழும் திசை)
*ஒரு மினாரா கட்ட பள்ளிவாசலை இடித்த மாதிரி
*ஆண்டு முழுவதும் நோன்பிருந்து விட்டு வெங்காயத்தில் நோன்பு திறந்தாற்போல.


( மறைச்சுடர் டிசம்பர் 2008 இதழிலிருந்து )

பாத்திமுத்து சித்தீக் இளையான்குடி பிரபல வேளாண் விஞ்ஞானி சித்தீக் அவர்களின் துணைவியாவார்.
தற்பொழுது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

மறைச்சுடர் மாத இதழ்

ஆசிரியர் : மவ்லவி எம். முஹம்மது காசிம் பாகவி
பொறுப்பாசிரியர் : முஸ்தஃபா காசிமி எம்.ஏ.
முகவரி :
4/115 சுதந்திர நகர் 3 வது தெரு
ஒய்.ஒத்தக்கடை
மதுரை 625 107
தொலைபேசி : 0452 - 646 1817
98421 22693

ஆண்டுச் சந்தா : ரூ. 120

No comments: