Sunday, February 15, 2009

வேலையை நேசி அது உன்னை நேசிக்கும் ! - எம்.ஜே. முஹம்மது இக்பால்



வேலையை நேசி அது உன்னை நேசிக்கும் !
எம்.ஜே. முஹம்மது இக்பால்


ஐக்கிய அரபு அமீரகம் துபையில் உள்ள ETA Melco Elevator Co. LLC நிறுவனத்தின் பொது மேலாளராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிவரும் அல்ஹாஜ் M J முஹம்மது இக்பால் B.E., M.B.A., தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.

தான் சார்ந்த பொறியியல் துறைப் பணியில் மட்டுமல்ல எழுத்துத்துறையிலும் பெயர் பெற்று விளங்கும் ஆன்மீகவாதியுமாவார். ‘தினத்தந்தி’, ‘தினமணி’ போன்ற இதழ்களில் வெளியாகியுள்ள இவரது அறிவியல் கட்டுரைகள், சுயமுன்னேற்றக் கட்டுரைகள் உலகெங்குமுள்ள தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. துபையிலிருந்து வெளிவரும் ‘The Gulf Today’ நாளிதழில் ஆண்டுதோறும் ரமளான் மாதம் 30 நாட்களிலும் வெளிவரும் இவரது ‘ரமளான் சிந்தனைகள்’ இவரது ஆன்மீகச் சிந்தனையை மட்டுமன்றி ஆங்கிலப் புலமையையும் உணர்த்தும்.

1986ல் Graduate Engineer ஆக இ.டி.ஏ. நிறுவனத்தில் நுழைந்து Field Engineer, Project Engineer, Department Manager, Sernior Manager, Asst. General Manager, General Manager எனப் படிப்படியாக வளர்ந்து உயர்ந்திருக்கும் எம்.ஜே. முஹம்மது இக்பால் தற்பொழுது தோஷிபா எலிவேட்டரில் உயர் பதவி வகித்து வருகிறார். அவர் அளித்த சிறப்புப் பேட்டி இதோ :

• இ.டி.ஏ. நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது பற்றி ?

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் பிறந்த நான் வழுத்தூரில் உள்ள செளக்கத்துல் இஸ்லாம் பள்ளியில் சிறப்புப் பெற்ற மாணவனாகவே திகழ்ந்து, பள்ளிப்படிப்பை முடித்தேன். அதன்பின் Coimbatore Institute of Technology-ல் B.E. படித்தேன். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் M.B.A. பயின்றேன்.

1986 ஜனவரி மாதம் இ.டி.ஏ. நிறுவனத்திற்காக Graduate Engineer Trainee பணிக்காக விண்ணப்பித்தேன். 200 பேர் கலந்து கொண்ட நேர்முகத்தேர்வில் நான் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தேர்வு செய்யப்பட்டேன். இன்று உலகப் புகழ்பெற்ற இ.டி.ஏ. நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இலங்கும் பாசத்திற்குரிய அருமைச் சகோதரர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்கள் தாம் அன்றைக்கு என்னைத் தேர்வு செய்தார். அந்த நாளையும், அவரையும் எனது வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாது. என்றும் எனது நன்றி அவருக்குரியது. ( முகத்தில் நன்றிப் புன்னகை மின்னலடிக்கிறது )

• Graduate Engineer ஆகச் சேர்ந்த நீங்கள் இன்று G.M. ஆக உயர்ந்துள்ளீர்கள். இந்த முன்னேற்றத்திற்கு யார், எவை காரணங்கள் ?

இந்த அளவுக்கு எனக்கு ஒரு முன்னேற்றம் கிடைத்திருக்கிறதென்றால் முதல் நன்றி படைத்தவனுக்கும், என்னைப் பூவுலகில் பெற்றவர்களூக்கும்தான் ! அடுத்து நான் நன்றி சொல்வது எங்கள் திறமையைக் கண்டுபிடித்து ஊக்கம் அளித்து உயர்வு பெற வழிவகுத்துத் தரும் எங்கள் M.D முஹம்மது ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கே ஆகும்.

என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய எனது ஞானகுரு ஜமாலியா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல் ஹாஷிமிய் அவர்களையும் நன்றிப்பெருக்கோடு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

வேலையை நேசி
அது உன்னை நேசிக்கும்

வேலையில் பூரணத்துவம் கண்டு
அர்ப்பணித்துக் கடமையாற்றுதலே சிறந்தது

வேலையை ஓர் இறைவணக்கமாக
எடுத்துச் செய்தல் வேண்டும்

என்பனவற்றையெல்லாம் மெளலானா அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

செய்யும் காரியத்தில் தீவிர பங்கு (Involvement ) அர்ப்பணிப்பு ( (Dedication ) கடின உழைப்பு ( ( Hard Work ) இவை மூன்றையும் மேலே சொன்னவற்றோடு இணைத்துப் பாருங்கள். இவையிருந்தால் யார்தான் முன்னேற முடியாது ?

( மனம் விட்டுச் சிரிக்கிறார். அவரது வெற்றியின் இரகசியம் புரிந்து நாமும் பெருமிதம் கொண்டு சிரித்தோம் )

• உங்கள் பணியில் சோதனைகள் வந்துள்ளனவா ? அவற்றை எப்படி வென்றீர்கள் ?

சோதனை இல்லாமல் வாழ்க்கை ஏது ? ( குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறார் ) செய்து வரும் பணிகளில் சோதனை வராமல் இருக்காது. நான் எடுத்துக்கொண்ட திட்டங்களை ( Projects ) நிறைவேற்றும்போது கடுமையான சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன்.

ஒருமுறை விமான நிலைய ஒப்பந்தம், ஏறக்குறைய நூறுகோடி ரூபாய் திட்டம், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தாக வேண்டும். தொழிற்சாலைத் தொந்தரவு ( Factory Trouble ) ஏற்பட்டதால் முடிக்க முடியாத சூழ்நிலை. ஐரோப்பியர்களுக்கு மத்தியில் நான் ஒரே ஓர் இந்தியனாகத் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய சமயம் அது. அந்தக் கடுமையான பிரச்சினையை மட்டுமல்ல, மற்ற பிரச்சினைகளைக்கூட இறையருளால் சமாளித்துவிட்டேன்.

முதலில் பிரச்சினை என்ன என்று எழுதிக்கொள்வேன். அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க என்னென்ன வழிகளையெல்லாம் கையாளலாம் என்பதையும் எழுதிக்கொள்வேன். ஒவ்வொரு வழியிலும் என்ன பயன் விளையக்கூடுமென்பதை உணருகிறபோது தெளிவான முடிவு தெரிந்துவிடும். அந்தத் தெளிவான முடிவைக் கையாளும்போது பிரச்சினை மிகச் சுலபமாகத் தீர்ந்துவிடும்.

அதுமட்டுமல்ல; சோதனைகளை Team Work மூலம் எளிதில் வெல்ல முடியும். உடன் பணியாற்றுபவர்களுடன் இன்முகம் காட்டி நட்பு மேலிடப் பழகுதல் வேண்டும்; நான் பெரிய பதவியில் இருப்பவன், சாதாரணமானவர்களிடம் பழகமாட்டேன்’ என்கிற வறட்டுக் கெளரவம் இல்லாமல் எல்லோரிடமும் மிகமிக நெருங்கிப்பழகவேண்டும். அவர்களுடைய குடும்ப விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களோடு தனிப்பட்ட தொடர்பும் ( Personal Touch ) வைத்து அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது அலுவலக வேலை மேம்படுகிறது. அந்த அளவுக்கு உடன் பணியாற்றுகிறவர்களோடு சுமூக உறவு நிலைகும் போது நிச்சயமாக Team Work மூலம் எத்தகைய சோதனைகளையும் நம்மால் வென்றெடுக்க முடியும்.

இன்றைக்கும் 30 பொறியாளர்கள் உள்பட 700 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தின் பொதுமேலாளராக இப்படித்தான் சோதனைகளை வென்று பணியாற்றி வருகிறேன்.

( எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக எப்படி இவரால் சொல்ல மட்டுமல்ல. செய்துகாட்டவும் முடிகிறது என்பதை எண்ணியபோது நமக்கு மலைப்பு ஏற்படவே செய்தது )

• சமுதாய சேவையில் ஆர்வம் வந்தது எப்படி ?

ஓர் முஸ்லிம் என்ற முறையில் யாருக்குமே இயல்பாகவே சமுதாய சேவையில் ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.

இருந்தாலும் என் பெற்றோரை நினத்துப் பார்க்கிறேன். மலேசியாவில் அக்கெளண்டண்ட் ஆக இருந்தவர் எனது தந்தை ஜமால் முஹம்மது. எட்டாம் வகுப்பு முடியப் படித்தவர் எனது தாயார் தாவூது பேகம். ஓரளவு படித்த குடும்பம். எனது குழந்தைப் பருவத்தில் எனத் தந்தை என்னைக் காவிரிக் கரையில் நடைப்பயிற்சிக்காக ( walking ) அழைத்துச் செல்வார்.

நடந்துகொண்டே கல்வி, ஒழுக்கம், சமுதாய சேவை ஆற்றவேண்டியதன் அவசியம் முதலியவற்றையும் எடுத்துச்சொல்வார். ஆம், காவிரிக் கரைதனிலே நடைப்பயிற்சி மட்டுமல்ல வாழ்க்கை நடைப்பயிற்சியையும் சேர்த்தே என் தந்தை பயிற்றுவித்தார்.

மேலும் சிறிய வயதிலேயே எனது பெற்றோர் ஏழைப்பிள்ளைகளுக்குத் துணிமணி, புத்தகம் முதலியவற்றையெல்லாம் அன்பளிப்பாக வழங்குவதைப் பார்த்து நானும் பெரியவன் ஆனதும் இப்படிச் செய்யவேண்டுமென நினைத்துக் கொள்வேன். அதுமட்டுமல்ல சிறுவயதிலேயே என் பெற்றோர் இஸ்லாமிய வரலாற்றைச் சொல்லித்தந்ததோடு பிக்ஹ¤ கலைக் களஞ்சியத்தையும் என்னைப் படிக்க வைத்ததும் காரணமெனச் சொல்லலாம். கண்டிப்பாக நான் பெற்றோருக்கு இதற்காகவும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ( உணர்ச்சி வசப்படுகிறார் )

• இன்றைய இளைஞர்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன ?

வாய்ப்புகளைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை இன்றைய இளைஞர்களிடம் நிறைய இருக்கிறது. அதிலும் Grasping Opportunity in Computer World நிறையத் தென்படுகிறது. அதே நேரத்தில் Forgetting or Ignoring Traditional Core Values பாரம்பரிய விழுமங்களை அலட்சியம் செய்யும்போக்கு இருப்பதையும் பொதுவாகக் காணமுடிகிறது. புதியவற்றை ஏற்றுக்கொள்ளலாம். அதே சமயம் பழையவற்றை மறந்துவிடக்கூடாது.

இன்றைக்குப் பெருகி இருக்கும் I.Q. திறமையோடு நேரம்தவறாமை (Punctuality), ஒழுக்கம் ( Discipline ), தூய்மை ( Neatness ), உயர்பதவியிலிருப்பவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பணிதல் முதலிய பண்புகளையும் இணைத்துச் செயல்பட்டால் இளைஞர்களுடைய எதிர்காலம் நிச்சயமாக ஒளிவீசுவதாக அமையும்.

• தென்னகத்திலிருந்து வேலை வாய்ப்பு தேடி வருபவர்கள் எப்படி இருக்கிறார்கள் ?

நமது தமிழ்நாட்டின் தென்னகத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடிவரும் நம்முடைய மாணவர்களிடம் தகவல் தொடர்புத் திறமை ( communication skill ) மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு வரும் மாணவர்களிடமும் இதேநிலைதான் உள்ளது.

பொறியியல் கல்லூரிகளிலும், M.B.A., M.C.A., படிப்புள்ள கல்லூரிகளிலும் Personality Development, Communication Skill, Business Writing Skill முதலியவற்றுக்கான பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியமாகும். இவற்றில் திறமை இருந்தால் சிறந்த பணிகளை எளிதாக நமது மாணவர்களால் பெறமுடியும்.

• தங்களுடைய பலம் எது ? பலவீனம் எது ?

( பலமாகச் சிரித்துக் கொண்டே கூறுகிறார்) எனது பலம் நேர்முக அணுகுமுறையில் கொண்டுள்ள நம்பிக்கை ( Confidence of Positive Approach )

எனது பலவீனம் மக்களை நம்புவது ( Belive People ) இது எனது பலமாகக்கூட இருக்கலாம்.

• ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்புகள் எப்படி ?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் ( Information Technology ) வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. வரும் பத்தாண்டுகளில் துபை இறையருளால் வெகுவேகமாக முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்கள் உள்ளன. விமான நிலைய விஸ்தரிப்பு, உலகிலேயே மிக உயர்ந்த கட்டடம் உருவாக்கல் முதலியன அத்திட்டங்களுள் உள்ளவைதாம்!

I.T. Computer படித்தவர்களைத் தவிர EEE, Mechanical, Civil படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

C.A. படித்தவர்களுக்கும் உடனடியான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. S.S.L.C. படித்துவிட்டு I.T.I. முடித்தவர்களுக்குப் பணிகள் நிறைய உள்ளன. இவற்றையெல்லாம் நம் நாட்டவர்கள் நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

• ஏகத்துவ மெய்ஞான சபையின் துபைக் கிளைத் தலைவராகவும் தங்கள் பணி தொடர்கிறதே ?

நற்சிந்தனைகளும், நற்பண்புகளும் நிச்சயமாக ஒரு மனிதனை உயர்வடையச் செய்யும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கை எனக்குண்டு. தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான் என்பது பெருமானார் ( ஸல் ) வாக்கு. மனிதனின் ஈருலக நல்வாழ்விற்கும், சீரிய இருப்பிற்கும் உரியனவற்றைக்கூறும் ஞான உண்மைகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த ஆன்மீக ஒளியை அனைவரும் பெறும் வகையில் எனது ஆன்மீகப் பணி தொடர்கிறது. அதற்கான வழிமுறைகளை ஜமாலியா ஸ்ய்யித் கலீல் அவ்ன் மெளலானா எங்களுக்கு நிறையவே கற்றுத்தருகிறார்.

ஆன்மீகம் இல்லாத வாழ்க்கை இஸ்லாமியர்களுக்கு இல்லை. ( கண்களில் ஆன்மீகத் தேடல் ஒளிர்கிறது )

உயர்ந்த பொறியியல் வல்லுநராக, தெளிந்த ஆன்மீகவாதியாக, நல்ல குடும்பத் தலைவராக, சிறந்த நண்பராக, நாட்டு நலனில் ஆர்வம் கொண்டவராக, சமுதாயப் பற்று மேலோங்கியவராக, சமுதாயச் சேவைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக, மேற்கொள்ளும் எல்லாத் துறைகளிலும் தனிமுத்திரை பதிப்பவராக, சிறந்த எழுத்தாளராக, தேர்ந்த பேச்சாளராக, விடாமுயற்சியும் நேரிய திறமையும் கடுமையான உழைப்பும் சீரிய பண்புகளும் கொண்ட இன்முகப் பண்பாளராக இவை அனைத்தையும் ஒன்றாகக்கொண்டு எம்.ஜே. முஹம்மது இக்பால் விளங்குவதை வியப்போடு உணர்ந்து அவருக்காகத் துஆ செய்தவராக விடைபெற்றோம்.

சந்திப்பு : முஹம்மதலி