Monday, April 19, 2010

மனசே... மனசே..! களத்தூரான்

மனசே... மனசே..! களத்தூரான்

எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

நல்லெண்ணங்கள் கொண்ட மனிதனை நல்லவனென்றும, தீய எண்ணங்கள் கொண்ட மனிதனை கெட்டவனென்றும், அவன் வாழும் காலத்திலும் சரி.. இறந்த பின்னரும் கூட சுலபமா சொல்லிடறோம். முத்திரையே பதிச்சுடறோம்!

ஒருவன் எவ்வளவுதான் நல்லவன்னு சொன்னாலும், நல்லவனாவே இருந்தாலும், (சில நேரம் அவனே உணராமல்) அவனுக்குள்ளே ஒரு மிருகம் உறுமிட்டுதான் இருக்கு. அந்த மிருகத்தை நம்மிலிருந்து விரட்டனும்! என்ன களத்தூரான்... என்னமோ மிருகம், சிங்கம், புலின்னு ஏதேதோ கதை சொல்ற மாதிரி தெரியுதுன்னுதானே கேட்கறீங்க...!

சரி... நாயகன் படத்துல கமலஹாசன்கிட்ட ஒரு குழந்தை கேற்குமே... ‘நீங்க நல்லவரா... இல்ல கெட்டவரா?’ன்னு, அதைப் போல உங்ககிட்ட ஒரு கேள்வி..! ‘நீங்க இளகிய மனம் படைத்தவரா... இல்ல கர்ண கொடூரமான மனசு உள்ளவரா?’ (படத்துல கமலஹாசன் திக்கித்தினறி மழுப்பற மாதிரி இல்லாம) உடனே உங்களிடமிருந்து பதில் வரும்... எனக்கு இளகிய மனசுதான்னு! நீங்க மட்டுமில்லைங்க... திருடன், கொள்ளைக்காரன், கொலை பன்றவன் கூட யோசிக்காம உடனே சொல்லுற பதில் இதுவாத்தான் இருக்கும். அதற்காக... அவனுங்களோட சேர்த்து என்னையும் ஒப்பிடறியான்னு.. என் மேல நீங்க கோபப்படுவது எனக்கு புரியுது! நான் உங்களை அப்படி சொல்வேனா?

சரி... உங்க மனச, உங்க எண்ணங்களை நீங்களே சுயபரிசோதனை செஞ்சிப் பாருங்க..! என் மனசப்பத்தி எனக்கு தெரியாதா? இதுல சுயபரிசோதனை என்ன வேண்டிக் கிடக்குன்னுதானே கேட்கறீங்க? ஒரு சின்ன முயற்சி... பன்னித்தான் பாருங்களேன்!

அதாவது... நீங்க ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு, ஓய்வு நேரத்துல தொலைக்காட்சி பார்த்திட்டுருக்கீங்க... அப்ப விளம்பர இடைவேளை வருது... அதில் “இன்று இரவு எட்டு மணிக்கு... (சன்) செய்திகளில்... (ஏதோ ஒரு ஊரைக் குறிப்பிட்டு) பள்ளி பேருந்து காத்து சாலையோரம் நின்றிருந்த பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில்... 12 மாணவவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி. (நவூதுபில்லாஹ் அல்லா காப்பாத்தனும்) தத்ரூபமாக பதிவான நேரடி காட்சிகளை காணத்தவராதீர்கள். தயவு செய்து இளகிய மனம் படைத்தவர்கள் இதைக் காண வேண்டாம்” இப்படி ஒரு அறிவிப்பு வருது... இப்ப உங்க நிலை என்னவா இருக்கும்?

நீங்க எப்படியோ... ஆனால், பெரும்பாலானவர்கள் நிலை... கண்டிப்பாக ஆர்வத்துடன் செய்தி வரப்போகும் நேரத்தை எதிர் பார்ப்பதாய்தான் இருக்கும். இளகிய மனம்படைத்தவர்கள் காண வேண்டாம்னு சொன்னாத்தான் ஆர்வம் கூடும். அப்ப இந்த மனித சமூகம் எங்கே, எதை நோக்கி போயிட்டுருக்கு...! மனிதனுக்கு ஏன் இந்த குரூர எண்ணம். பலரின் செல் போன்களில்... பிரேத பரிசோதனை(மனித உடலை கிழித்து கூறுபோடுதல்)யின் வீடியோ கிளிப், மிருகங்கள் மனிதனை கடித்து குதறுவதன் வீடியோ கிளிப் இப்படி குரூரமான, கொடூரமான காட்சிகளின் வீடியோ கிளிப்களை குழந்தகள்கூட செல் போன்களில் வைத்திருப்பதை காண முடிகிறது. ஏன்... இராக் முன்னால் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட துயர சம்பவம் நாமெல்லாம் அறிந்ததே! தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களிலெல்லாம் கூட, சதாம் தூக்கு மேடைவரை கொண்டுவரப்பட்ட காட்சிகளே இடம் பெற்றன. அதுவரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட காட்சியும் கூட. ஆனால்... எத்தனையோ பேரின் செல்போன்களில், சதாம் தூக்கிலிடப்படும் காட்சியும், அவரின் மரண அவசஸ்தையும் வீடியோ கிளிப்பாய் இருந்தன. இவை யாவும்... மனிதனுக்குள்ளே மிருக குணம் ஒளிந்திருப்பதாய்தானே காட்டுகிறது.

மனிதனின்... எண்ண ஓட்டங்களையும், விபரீத எதிர்பார்ப்புகளையும் முழுதாய் அறிந்ததினாலேயே, மீடியாக்களும் கூட இதுப்போன்ற அசம்பாவித நிகழ்வுகளையும், கோரச்சம்பவங்களையும் திரும்ப திரும்ப ஒளிப் பரப்புறானுங்க! இந்த நிலைக்கு என்ன காரணம். ’ஓடி வர்ற நரி.. கிழக்குமா போனா என்ன மேற்குமா போனா என்ன. நம்ம கடிக்காம போனா சரி.’ அப்படித்தானே?

இந்த நிலை மாறனும்க.. அல்லது மாற்றனும்! நல்ல சிந்திச்சு பாருங்க..!இப்படிப்பட்ட ஒரு சம்பவம், நம் குடும்பத்தினரில் யாருக்கோ, அல்லது நம் உறவினரில் யாருக்கேனும்... நடந்தா அதை பார்த்து நாம் ரசிப்போமா? நமக்கு உயிரே போனமாதிரி உள்ளம் துடிக்காது? அப்ப... நமக்கு துயரம்னா அது வேதனை. அதுவே வேறு யாருக்கோன்னா.. அது வேடிக்கையா?

இதற்கெல்லாம்... நவீன தொழில் நுற்பம்ங்கற பேருலயும்... நவ நாகரிகம்ங்கற பேருலயும், கண்ட கண்ட கழிசடை கலாசாரம் நம்மை தொற்றிக் கொண்டதே இதற்கு காரணம். பின்ன என்னாங்க...! குழந்தை பருவத்திலிருந்தே.. நாம் வன்மத்தை கண்டே... நமக்கே தெரியாமல் வன்மம் ஊட்டப்பட்டே.. வன்மம் ஊக்குவிக்கப் பட்டே வளர்கிறோம். அல்லது சமூகம் நம்மை வளர்த்து விடுகிறது. 90 சதவிகிதம் சினிமாவே இதற்கு காரணம். போதாக்குறைக்கு வீட்டு வரவேற்பறையிலேயே டிவி. இப்ப உள்ள தலைமுறைக்கு.. கேற்கவே வேண்டாம். முன்பு நாம சின்ன குழந்தயா இருந்தப்பல்லாம்... விளையாட்டுன்னு சொன்னா, கபடி, கிட்டி புல்லு, கிரிக்கட், புட் பால் இப்படி உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட விளையாட்டா இருந்திச்சு. ஆனால்... இப்ப வீடியோ கேம், கம்ப்யூடர் கேம் இப்படி நவீனம்கிற பேருல.. வன்மத்தை தூண்ட கூடிய விபரீத விளையாட்டுக்கள். வெட்டு, குத்து, ஒருத்தன் மேல ஒருத்தன் அம்பெறிவது, துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு வீசுவது இப்படிப் பட்ட கேம்கள்தான் அதிகம். அதுவும் இந்த 'play station' கேம் இருக்கே... அது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. (கார்டூன் போல இல்லாம) ரியல் மனுசன போல உருவாக்கி வச்சுருக்கான். அந்த கேம்ல ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கும் போதும், ரத்தம் பீறிடும் போதும்... (அட சே.. கண்ட்றாவி) இளம் தலைமுறைகளை இல்லதாக்குவதற்காகவே, இதுபோல கேம் உருவாக்கப்படுகிறாதான்னு யோசிக்கவே தோனுது!

அன்பு, அறம், நீதி இப்படிப்பட்ட போதனைகளையோ... நல்லுபதேசங்களையோ, என்னைக்காவது நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கோமா? அதற்கெல்லாம் நமக்கேது நேரம்..! அப்படித்தானே!

எந்த ஒரு காரியத்தில் நாம் ஈடுபடும்போதும்... நம்மால இறைவனை பார்க்க முடியாட்டாலும்... இறைவன் நம்ம பார்திட்டிருக்கான்கிற எண்ணமும், இறையச்சமும் இருந்தா... நம் எண்ணங்களும் சீர்படும். நம்ம வாழ்க்கையும் அர்த்தமுள்ளதா மாறும். ஏன்னா... எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நல்லெண்ணங்கள் கொண்ட நன் மக்களாக நாமும், நம் தலைமுறைகளும் சிறக்க.. எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக! (ஆமீன்).

சரி... உங்க சுயபரிசோதனையின் ரிசல்ட் என்னான்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லியே!
சரி அடுத்த பதிவில் சந்திப்போம்! வர்றட்டுங்களா?

‘களத்தூரான்”

No comments: