Thursday, March 13, 2008

இஸ்லாமியக் கருத்தரங்கு

அன்பின் ஃபகுருதீன்.. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இதே தலைப்பினால் ஆன கருத்தரங்கு தஞ்சையில் நடைபெற்றபோது எங்களூர்
ஜமாத்தினர் சார்பில் நான் கலந்து கொண்டேன் ( பின் நீண்ட கட்டுரை அதைப் பற்றி
எழுதுவேன் - இன்ஷா அல்லாஹ்).

எதிர்பார்க்கப்பட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மான் தொடர் சுற்றுப் பயணங்களால்
நிறைய களைத்திருந்ததனால் 'அராஅய்த் தல்லதீ ' சூராவிற்கு தமிழர்த்தம் கூறியதோடு
ஒரு சில உதிரிச்சொற்களை மட்டும் உதிர்த்துவிட்டு அமர்ந்து விட்டார்.

வங்கியில் கடனுதவி+உதவித்தொகை சார்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பிவிட்டதாக அரசாணை கூறுகிறது.வங்கியில் போய் கேட்டால் சரியான
பதில் இல்லை. இப்படியாக பல புகார்களும் குறைகளும் கிளம்பியுள்ளன...

சில மாவட்டங்களில் செயல்படத் தொடங்கிவிட்டதாக அறிந்தோம்..
அல்ஹம்துலில்லாஹ் விரைவில் எல்லா மாவட்டங்களிலும் இது செயல்படத்
தொடங்கினால் நம் மக்கள் பயனடையக்கூடும்..

அல்லாஹ் போதுமானவன்.. ஜஸாக்கல்லாஹ் ஹைர்



On 2/29/08, IBNU HAMDUN wrote:
அஃதோர் அரிய இஸ்லாமிய கருத்தரங்கு. என்ன காரணத்தாலோ பரவலான அழைப்போ விரிவான விளம்பரமோ இல்லாமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்திருந்தார்கள். வளர்தொழில் முனைஞனும், என்னினிய தோழனுமான தவ்ஹீத் மூலமாகவே என் காதுக்கும் அச்செய்தி வந்ததது.

"சிதம்பரத்தில் நாளைக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கு இருக்கு... இதைப் பார்" என்றவன் அழைப்பிதழை நீட்டியது முந்தையநாளான வியாழன் மாலை. கட்டாயம் கலந்து கொள்வது என்று அக்கணமே தீர்மானித்தேன்.

நட்பிற்கினிய இளவல்களான எம்.ஜீ. பஃக்ருத்தீன், லி. ஹமீது, நூருல் ஹசன் ஆகியோரிடம் தெரிவித்த போது, அவர்களும் வருவதாகச் சொன்னார்கள்.
"ஜமாஅத் சார்பாக வேன் போகுது, அதுல போயிடலாம்" என்ற தவ்ஹீதின் விளிப்பை நிராகரிக்க, அவனுடைய அடுத்த வார்த்தைகளே காரணமாகின "ஆனா லேட்டாத்தான் கௌம்புவோம்" - பஞ்சாயத்து மன்ற கூட்டம் இருந்ததுதான் தாமததிற்கு காரணமாம்.

குறிப்பிட்ட திருமண மண்டபத்துக்கு இரண்டு மணிநேரம் தாமதமாக, இரவு சுமார் ஏழு மணிக்குத்தான் நாங்களே சென்றோம். ஆனால் கூட்டமே அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதலில் அனைவருக்கும் சுவையான ஒரு காலிஃப்ளவர் சூப் கிடைத்தது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் முயற்சியாலும், முனைப்பாலும் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலியும் செயலாளர் இதயதுல்லாவும் விரிவுரை நிகழ்த்த சிறப்புரையாக கவிக்கோ. அப்துல் ரகுமான்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைத்த 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைப்பற்றியும், முஸ்லிம்கள் நிச்சயமாய் அறியவேண்டிய- பயன்பெறவேண்டிய பல்வேறு அரசுத்திட்டங்களைப் பற்றியும் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கம் அது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிதம்பரம் அன்சாரி அவர்களும் தொகுப்பாளாராக பணியாற்றிய லால்பேட்டை தளபதி ஷபீகுர்ரஹ்மான் அவர்களும் தம் பணியை சிறப்பாக ஆற்றினர்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஜமாஅத்தின் தலைவர். ஹாஜி.யூனூஸ்நானா அவர்களும் ஒரு சிறிய வாழ்த்துரை வழங்கினார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலி மத்திய மாநில அரசுகளின் பல்வகைத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.
மதரசா (கல்விக்கூடம்) நடத்த முன் வருபவர்களுக்கு ஆறு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை (சுமார் ரூ 6000 - 12000) மத்திய அரசு மானியந் தருவதாகவும், சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் மத்திய அரசு விழா கொண்டாட நிதி உதவுவதாகவும், மேலும் பலப்பல திட்டங்களையும் பட்டியலிட்டார். அவற்றுள் குறிக்கத்தக்கனவாக முதியோர் ஓய்வூதியம், கர்ப்பிணி நலநிதி, மாணவர் உதவித் தொகை, வெளிநாட்டு வேலைத் தேடுவோருக்கான இலவசப்பயிற்சிகள் என ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல, விழிகள் விரிந்தன வியப்பில்.

சச்சார் கமிட்டியின் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட உண்மைகளை உள்ளந்தொடுகிற வகையில் விளக்கிய கேப்டன் அமீர் அலியும், இதயத்துல்லாவும் சமூகத்தில் திறனுள்ளவர்களும், அறிஞர்களும் திறனற்றவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் உதவியாக வேண்டியதின் தேவையை மிகவும் வலியுறுத்தினர். இதயதுல்லாவின் உருக்கமான பேச்சில் நல்ல ஆன்மிக மணம். "நற்காரியத்துக்கு தூண்டுதலா யார் இருக்காங்களோ, அவங்களுக்கும் அந்த நற்காரியம் செய்த புண்ணியம் கிடைக்கும்"என்பதை மிகவும் வலியுறுத்தினார்.

எதிர்பார்க்கப்பட்ட கவிக்கோ தன் பேச்சில் மனித நேயத்தை மிகவும் வலியுறுத்தினார். இறைவன் ஒருவனே என்பதை நம்புகிறவர் அனைத்து மனிதர்களிடத்தும் சகோதரத்துவம் பேண வேண்டும் என்றார். 'ஏகத்துவத்தின் செயல் விளக்கம் அது'.

குர்ஆனுடைய அல்மாவூன் அத்தியாத்திற்கு சிறு விளக்கம் அளித்தவாறு தன்பேச்சை தொடங்கிய கவிக்கோவிடம் சற்றேவேகம் குறைந்திருந்தது போல் எனக்கொரு பிரமை (?).
சச்சார் கமிட்டி அறிக்கையின் ஒரு வரி சாரம்சமாக " 84 சதவீத முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள்" என்றார். "இதுல தான்யா நாம் மெஜாரிட்டி".

கிரேக்க மூளை, சீன கைகள், அரேபிய நாவு - இம் மூன்றும் தான் இறைவனின் உன்னத படைப்புகள் என்ற அரேபிய பழமொழியை நினைவு கூர்ந்த கவிக்கோ, மற்ற சமூகங்களையும், நாடுகளையும் எடுத்துக்காட்டி ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருப்பதை; அவ்வாறு இருப்பதற்கான காரணத்தைக்கூட அறியாமலிருப்பதை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார். "கல்வியின்மைக்கு காரணம் வறுமை, வறுமைக்கோ கல்வியின்மை காரணம் என்றாகிவிடுகிறது. "இன்னும் 20 ஆண்டுகளில் நடக்க உள்ள முன்னேற்றப் புரட்சியிலும் இந்த சமூகம் விழித்துக் கொள்ளாவிட்டால் நாசமாகிவிடும் என்றார். 'நாசமாகிவிடும்' என்று அடிக்கடி சொன்னதை தவிர்த்திருக்கலாமே?! என்று தோன்றாமலில்லை.

அரசின் நலத்திட்டங்களை பள்ளிவாசல்களின் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். "மவுத்(மரணத்)தை எழுதிப்போடறீங்களில்லையா, நான் ஹயாத்தை(வாழ்க்கையை)யும் எழுதிப்போடச் சொல்றேன்".

கூட்டம் முடிந்தவுடன், எங்களூர் கல்விக்குழு சார்பாக லி. ஹமீதுடன், இதயத்துல்லா அவர்களிடம் அளவளாவியதில், நலத்திட்டங்களுக்கான படிவங்கள் பலவற்றையும் 'ஹாஜி மவுல்வி சாப்' என்று அன்பாக அழைக்கப்படுகிற எங்களூர் அப்துல் காதிர் உமரியிடம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். எந்த நலத்திட்ட உதவிக்கும் தயங்காமல் தம்மை அணுகலாம் என்றார்.
பின்னர் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவருந்தியபின் எங்களூர் ஜமாஅத் நிர்வாகிகள் வந்த வேனிலேயே ஊர் திரும்பினோம்.
"நம்ம ஊர்லயும் இதுபோல ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்"- தவ்ஹீத்.
"நமக்குள்ளே ஒரு குழு அமைத்து, நலத்திட்டங்கள் யாவும் ஏழைகளுக்கு சென்று சேர முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்" என்றேன்.
'சி. டபிள்யூ. ஓ. (கிரசண்ட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன்) செஞ்சுக்கிட்டிருந்தாக, அவங்களையே தொடரச் சொல்வோம்' என்றார் ஹமீது.


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com





--
Failed is a beautiful experience
Successful is a historical evidence.
*
அன்புடன் - அன்பிற்காக
லக்கி ஷாஜஹான்.

No comments: