Saturday, August 2, 2008

சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார்.

தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. ‘இளமையில் கல்’ என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை.
"குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை'.

"ஆதலால், சவால்களை எதிர்நோக்க அவருக்குப் பக்க பலமாக இருந்து வருகிறேன்," என்றார் ஷகீலாவின் கணவர் திரு முகமது ஏடிரீஸ் (31).
இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
"லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்." என்று உறுதியுடன் ஷகீலா கூறுகிறார்.

தலைத்துண்டு அணிந்துகொண்டே கல்வி தொண்டில் சிறக்க முடியும் என்று நிரூபித்த இந்த சகோதரியை போல வீட்டிற்கு ஒரு பெண் உருவாக்க வேண்டும்.

(http://tamilmurasu.tamil.sg/node/626)


பிறைநதிபுரத்தான்

No comments: