Sunday, September 14, 2008

அசம்பாவித சமயங்களில் இழப்புகளைத் தவிர்க்க...

அசம்பாவித சமயங்களில் இழப்புகளைத் தவிர்க்க...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080914120246&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=9/15/2008&dName=No+Title&Dist=

சென்னை, செப்.14: குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தடுக்க போலீஸôர் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர்.

பொது அமைதியைக் குலைத்து, அப்பாவி மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தி, பொது சொத்துகளை சேதப்படுத்தி ஓர் அசாதாரண சூழலை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே தீவிரவாதிகள் குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இதுவரை நிகழ்ந்த சம்பவங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இத்தகைய சமயங்களில் பொது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து போலீஸôர் வழங்கியுள்ள சில பாதுகாப்பு அறிவுரைகள் விவரம்:

வார இறுதி நாள்களில் பொதுமக்கள் அதிகம் கூடும், பொழுதுப்போக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களிலேயே தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

எனவே, வார இறுதி நாள்களில் வெளியில் செல்வதற்கான இடங்கள், நேரங்களை வழக்கத்தில் இருந்து மாற்றி தேர்வு செய்யலாம்.

உதாரணமாக, மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இடங்களைத் தேர்வு செய்வது நல்லது. வார இறுதி நாள்களைத் தவிர்த்து மற்ற நாள்களில் வெளியில் செல்வது பாதிப்பைக் குறைக்க உதவும்.

மேலும், பெரும்பாலான குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மாலை நேரங்களிலேயே நடைபெற்றுள்ளன. எனவே, வார இறுதி நாள்களில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகளுக்கு மாலை நேரங்களில் செல்வதற்குப் பதிலாக காலை நேரங்களில் செல்வது நல்லது.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வெளியில் சென்றால் எந்த குறிப்பிட்ட இடத்திலும் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொருள்களை நிதானமாகத் தேர்வு செய்வதைவிட முன்கூட்டியே திட்டமிட்டு சென்று வாங்கி வருவது நல்லது.

சந்தேகப்படும் வகையில் நபர்களோ, பொருள்களோ இருந்தால் அது குறித்து கூச்சலிட்டு அந்தச் சூழலை பதற்றமாக்காமல் உடனடியாக அந்த இடத்துக்கான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வெளியேறுவது நல்லது.

ஓர் இடத்தில் குண்டு இருப்பது உறுதியாகும் நிலையில் அந்தப் பகுதிக்கான பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள போலீஸôர் உள்ளிட்ட அதிகாரிகளின் உத்தரவுகளையும், அறிவுரைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுச் சொத்துகளைவிட விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாப்பதே அவசியம் என்பதால் பொது மக்கள் இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது இழப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தும் என போலீஸôர் தெரிவித்தனர்.

No comments: