Tuesday, March 24, 2009

மனித உரிமை மீறல்களும்- சிறையில் சில மனிதாபிமான சம்பவங்களும்!

மனித உரிமை மீறல்களும்- சிறையில் சில மனிதாபிமான சம்பவங்களும்!

முனைவர் ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு )
mdaliips@yahoo.com

“அரசியல் வாதிகளிடமிருந்து காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுங்கள்” ‘அரசியல் வாதிகளிடமிருந்து காவலர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோசத்தினை எழுப்பியது வேறு யாருமில்லை. இந்தியாவின் தலைசிறந்த சி.பி.ஐ. டைரக்டரகளாக இருந்த திரு. சி.வி. நரசிம்மன், வி.ஆர். லஷ்மிநாராயணன், சி.பி.ஐ. ரூபன் மற்றும் வக்கீல்கள், மனித உரிமைகள் அமைப்புகள்தாம். 16-3-07 நடத்திய கூட்டத்தின் எழுப்பிய குரல்தான் நான் சொன்ன வாசகம். இது டெக்கான் குரோனிக்கல், 10.3.07 தேதியிட்ட பத்திரிக்கை 5 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. கலைஞர் திரு. மு. கருணாநிதியினைச் சென்னை மேம்பால ஊழல் சம்பந்தமான வழக்கில் 29.6.01 அன்று கைது செய்ததன் மூலம் நானும், அரசியல் வாதிகளின் பலி கடா ஆக்கப்பட்டேன். 1861இல் ஆங்கிலேயர்கள் இயற்றப்பட்ட இந்தியன் போலீ° சட்டத்தினைத் திருத்துவது மூலம் சட்டத்தினைத் தங்களுடைய கைப்பாவையாக்கி அதிகாரிகளை ப்பழிவாங்குவதை அரசியல் வாதிகள் நிறுத்த வழி வகுக்க வேண்டும்.
‘சேவல் கூவுவதற்கு முன்பு எழுந்து நடந்தால்’ சிங்கத்தையும் எதிர் கொள்ளலாம்’ என்ற ‘செம்மொழி மூதறிஞர்’வாக்கிற்கிணங்க, 1-7-2004 அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து, ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு °பூன் தேன் கலந்து குடித்து விட்டு, 5.45 மணிக்குக் கையில் பிரம்புடன், நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுடனும் மிடுக்கான நடையுடன் சென்னைக் கீழ்ப்பாக்கம் டெய்லர்° ரோடு அரசு அலுவலர் குடியிருப்பிலிருந்து வாக்கிங் கிளம்பி வெகு வேகமாக ஆர்ம்°ரோடு, சில்வன் காலணி, பர்னபிரோடு, லான்டன்° ரோடு வழியாக நடையைமுடித்து வீட்டினுள் 6.30 க்கு வேர்க்க விறுவிறுக்க நுழைந்து, சிறிது யோக பயிற்சி செய்தேன். வேர்வையில் நனைந்த ஆடைகளைக் களைந்து விட்டு, கைலியினைக் கட்டிக் கொண்டு மனைவி அளித்த சுடச்சுடக் காபியினை அருந்திக் கொண்டிருந்தேன் உள் அறையில் காலை 7மணியளவில் வீட்டில் காலிங் பெல்லை மூன்று தடவை வேகமாக அடித்து விட்டு கதவு திறந்திருந்ததால் 4,5 பேர் ஹாலில் வந்து நிற்பதாக , என் மனைவி பார்த்து வந்து சொன்னாள். நான் சட்டையினைப் போட்டுக் கொண்டு, அறையிலிருந்து ஹாலுக்குள் வந்த போது சி.பி.ஐ. எ°.பி. கபூர் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டைச் சோதனை போட வேண்டும் என்றார்கள். பின்பு மூன்று நாட்களுக்குப் போலீ° க°டடி கொடுக்கப்பட்டது. அதன்பின்பே எங்களைச் சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு 5ஆம் தேதி மாலை கூட்டிக் கொண்டு சென்றார்கள். அடிஷனல் சூப்ரண்டெண்ட் அறையில் எங்களைச் சி.பி.ஐ. அதிகாரிகள்ஒப்படைத்தார்கள். அடிஷனல் எ°.பி.கோவிந்தராஜ், எங்கே எங்களுடைய பெர்ஷனல் ஐடெண்டிபிகேஷன் (அடையாள) மெமோ என்று கேட்டார். அதற்குச் சி.பி.ஐ. அதிகாரி கரம்யாள், எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நாங்கள் கைதிகளை ஒப்படைத்து விட்டோம். நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என ஆவேசமாகச் சொன்னார். அதற்கு ஜெயில் அடிஷனல் எ°.பி. அமைதியாக ஜெயில் மேனுவலைக் காட்டி, நீங்கள் மேஜி°திரேட்டிடம் மெமோ எழுதிக் கொண்டு வந்திருக்கவேண்டும் என்று ஆணித்தரமாகச் சொன்னார். இருந்தாலும், இப்போது நான் இவர்களை எடுத்துக் கொள்கிறேன். இனி மேல் நீங்கள் இதனைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சட்டத்தினை எடுத்துச் சொன்னது, “நீ நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று இயம்பிய தமிழ் இலக்கியத்தை ஞாபகப் படுத்தியது.
நான் எ.சி வண்ணாரப்பேட்டை வடக்குச் சட்டம் ஒழுங்கு டி.சி.யாக இருந்த போது, பல தடவை அலுவல் நிமித்தமாகச் சென்ட்ரல் ஜெயில் வந்துள்ளேன். ஏ.சி.யாக இருந்த போது, 1980ஆம் வருடம், ஒரு போராட்டம் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், தி.மு.க. சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சீதாபதி, மு.க.°டாலின் ஆகியோர்களை- ஜெயிலிருந்து எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளேன். அதே ஜெயிலின் வாசலைக் கைதியாக மிதிக்கும் போது , ஒரு விதமான உடம்பு சிலிர்த்தது. எங்களை நேராகக் குவாரன்டெய்ன் செல்லுக்குக் கொண்டு சென்றார்கள். இந்தச் சிறைப்பகுதி தற்காலிகமாக ரீமாண்டுக்கு அழைத்து வருகிறவர்கள் வைக்கப்படுவார்கள். எங்களை அழைத்துச் சென்ற சிறை அதிகாரி, இந்த செல்லில் தான் முன்னாள், இன்றைய தமிழக முதல்வர்கள் வாசம் செய்த இடம் என்று அடையாளம் காட்டினார்கள். அந்தச் செல்லின் முன்புறம் ஒரு அரசமரம், அதன் கீழ் ஒரு சிறிய விநாயகர் கோவில், அதன் அருகில் ஒரு தென்னை மரம் இருந்தன. அதில் சிவப்பு இளநீர், காய்த்துக் குலுங்கியது. அந்தத் தென்னங்கன்றை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நட்டதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அடைக்கப்பட்ட கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய கட்டிடம். நான் தங்கியிருந்த காலத்தில் ஐந்து தினங்கள் மழை பொழிந்தன. அதன் சாரல் படுக்கையினை நனைத்தது. சுத்தம் செய்யாக் கூவம் ஆற்றின் கடுங்கொசு கடியின் கொடுமைக்கும், தூர்நாற்றத்திற்கும் அச்சப்படும் யாரும், சிறைக்கு மறுபடியும் வரமாட்டார்கள். ஆனால் அதையும் பொறுத்துக் கொண்டு அடிக்கடி வருகை தரும் சிறைப் பறவைகள், அங்கு ஏராளம், ஏராளம்!

போலி முத்திரைத்தாள் மோசடியில் 1-7-2004 கைது செய்த சி.பி.ஐ. 2-7-2004-இல் என்னையும், ஏசி.சங்கர், எல்.ஐ.சிஆபீசர் சாது ஆகியோரையும் அடிஷனல் சி.எம்.எம் பொறுப்பில் இருந்த மேஜி°திரேட் அலமேலு அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். கடப்பை பகுதியிலிருந்து வந்த சிறைவாசி மூர்த்தியினை இரண்டு மாதமாகப் பெயில் எடுக்க யாரும் வரவில்லை. ஒரு நாள் மாலை விநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைத் திட்டிக் கொண்டிருந்தார். நான் என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கு அவர், இரண்டு மாதமாகியும் யாரும் பெயில் எடுக்கவில்லை. இந்தக் கடவுள் இருந்து என்ன செய்கின்றார். நான் அதற்கு, உன் சொந்தக்காரர்கள், உடன்பிறந்தவர்கள், உதவாததிற்குக் கடவுள் என்ன செய்வார் என்றேன். மற்றொரு நாள், விநாயகர் நிலைப் படியில் தலை வைத்து அழுது கொண்டிருந்தார். நான் அவருக்கு ஆறுதல் சொன்னேன். ஐந்து நாட்களில் பெயில் கிடைத்ததும், விநாயகரிடம் கூடச் சொல்லாமல் சிட்டாய்ப் பறந்து விட்டார் அந்தச் சிறைவாசி.
சிறைவாசிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடைய உறவினர்கள் வருவதுண்டு. எங்களை ஜெயிலிருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் போது, கண்ட காட்சி உருக்கமானதாக இருந்தது. ஒரு பெண் தன்னுடன் கைக்குழந்தையினைக் கொண்டு வந்து, தன் கணவனைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது, கைக்குழந்தை, அப்பாவிடம் கைநீட்டி அழுதது பரிதாபமானது. ஒரு நாள் ஒரு தடா குற்றவாளி தன் மனைவியினைப் பார்க்க வந்தவர், தன் மனைவியிடம் ஆண்டவனிடம் வேண்டிக் கொள், நான் ஏழு வருடமாக ஜெயிலில் இருந்தும், கருணை காட்டவில்லை, என்றது அவர்படும் வேதனையின் ஆழம் தெரிந்தது. ஆனால் எதற்கும் கவலைப் படாத தனிக்காட்டு ராஜாக்களும் சிறையில் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. காரணம் சிறையில் அவர்களுக்குத் தனி கவனிப்பு இருப்பதுதான் சில சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் ஜெயிலிருந்து சென்ற பின்பும் அவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்ததை அறிந்தேன்.
கள்ளச் சாரயத்தினை அடியோடு அழித்து விடலாம் ஆனால் அழிக்க முடியாததிற்குக் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் ஊக்கம் கொடுப்பது தான் என்றும் அறிந்தேன். சாராயம் காய்ச்சுவதற்கு, விற்பதற்கு, வழிவகைகள் வகுத்துக் கொடுப்பது காவலர்கள் என்பதும், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் காவல் நிலையத்தில் ஆகும் செலவுகளை ஈடு செய்ய ஒரே வழி பண வசூல் செய்வது என்றும், சாராயக் குற்றவாளிகள் விலாவரியாக விவரித்தார்கள். எப்போது தீவிர ரெய்டு என்று அறிவிக்கப் படுகிறதோ அப்போது சாராயக் குற்றவாளிகள் காவலர்களுக்குக் கொடுக்கும் மாமூல் அதிகப்படுத்தப்படுமாம் . இந்த ஊழலை ஒழிக்கத்தான் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள், பாட்டிலில் அடைத்த சாராயத்தை விற்பனைக்குக் கொண்டு வந்தார்கள். சாராயக் கடை ஏலம் எடுத்தவர்கள், தங்கள் பகுதியில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தனிபடைகளையே வைத்து, கள்ளச் சாராய விற்பனையைக் கட்டுக்குள்வைத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த நிலைமையில்லை. அரசே ஏற்று நடத்தும் இந்தியத் தயாரிப்பு மது விற்பனை நிலையம் மட்டுமே இருப்பதால், கள்ளச் சாராய வியபாரிகளுக்கும், அதனை மறைமுகமாக ஆதரிக்கும் காவல் துறையினருக்கும் தீபாவளிகொண்டாட்டமாக உள்ளது!
எனது கைது செய்தி கேட்ட என் மூத்தமகள், சௌதியிலிருந்து குழந்தைகளுடன் தனியாக இருக்கும் தன் தாய்க்குத் துணையாக வந்து விட்டது. சாதரணமாக என் பேரக்குழந்தைகள் வந்தால், அவர்களை மெரினாபீச்சு, கிண்டி குழந்தைகள் பூங்கா, வண்டலூர் மிருகக்காட்சிச் சாலை என்று அழைத்துச் செல்வேன். 6 வயது ஆன என் பேரன் இர்பான், சென்னை வந்த 5.7.2004 அன்று எங்கே ‘நன்னா’ (தாத்தாவை அவ்வாறு தான் அழைப்பது வழக்கம்) என்று கேட்டு இருக்கிறான் . அதற்கு என் மகளும் நன்னா ஆபீஸீக்குச் சென்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அந்தி மயங்கும் வரை நான் வராததைக் கண்டு என் மனைவிக்கு நான் ஜெயிலில் இருப்பதைச் சொல்லியிருக்கிறாள். அன்று இரவில் திடீர், திடீர் என்று விழித்து அழுதிருக்கிறான். அடுத்த நாள் காலை அவனைக் கூட்டிக் கொண்டு என் மகள் மனைவி ஆகியோர் வந்தார்கள்.
அவனை ஜெயில் பார்வையாளர்கள் அறைக்குள் என்னைப் பார்க்க அழைத்துக் கொண்டு வந்தார்கள். பாசத்தோடு வரும் அவன் எங்கே கூண்டுக்குள் வைத்து விடுவார்களோ எனப் பயந்து வீல் என அழுதுவிட்டான். உடனே அவனை வெளியே தாயிடம் சேர்த்து விட்டார்கள் சிறை அலுவலர்கள் அவன் சௌதியில் இருக்கும் போது தான் நன்னா போன்று இருக்கப் போலீ° டிர° போட்டுக் கொண்டு ஒரு கைக் குச்சியும் வைத்திருப்பானாம். என்னிடம் அந்த டிரஸைக் காட்ட, அதனை போட்டு வந்தும் ஜெயிலில் உள்ள கம்பிகளையும் சிறையில் இருக்கும் வார்டர்களின் டிர°ஸையும் பார்த்துப் பயந்து விட்டான். தனக்கு வேண்டியவர்கள் ஜெயிலில் இருப்பது குழந்தைகளின் மனத்தினை எவ்வாறு பாதிக்கும் என்பது மட்டுமல்ல; கைது செய்யப் பட்டவர்களுக்கும் தங்கள் குடும்பம் குழந்தைகள் மேல் எவ்வாறு பாசப் பிணைப்பு இருக்கும் என்பதும் தெரிந்தது. என்னுடன் கைது செய்யப்பட்ட உதவி ஆணையர் திரு.சங்கர், திருமணம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு பெண் குழந்தையைத் தவமிருந்து பெற்றிருக்கிறார். அந்தக் குழந்தை 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது. அவரைப் பார்க்க அவரது மனைவி வரும் போது, குழந்தையை அழைத்து வருவதில்லை பல நாட்கள் ஆனதால் அவரால் தன் மகளைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஒரு நாள் அவரைப் பார்க்க அவருடைய மனைவி, மகளையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்களை பார்த்து விட்டு வந்த உதவி ஆணையர் சங்கர், மிகவும் சோகத்துடன் இருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லிப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதிற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
சிறைக்குள் இரவு நேரத்தில் நடமாடும் காவலர்களாகப் பூனைகளும், பெருச்சாளிகளும் இருக்கும். ஒருநாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, அறைக்குள் சர,சர என்ற சத்தம் கேட்டது. தூக்கம் கலைந்து எழுந்த போது , பூனை ஒன்று மாடர்ன் பிரட் பிளா°டிக் பையை எடுத்துக் கொண்டு ஓடியது. அதன் பின்பு ஒரு நாள் காலை அங்கு வந்த இன்சாhர்ஜ் சூப்பிரடெண்ட் ராஜேந்திரனிடம் பூனை, எலி தொல்லை கொடுக்க முடியாத வலை யினை, இரும்புக்கம்பி கதவில் பொருத்த முடியுமா எனக் கேட்டேன். அதற்கு அவர் அவ்வாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குக் கம்பிவலை போட்டு கொடுத்ததால் தான், தொலைவில் உள்ள சப்-ஜெயிலுக்கு தூக்கி எறியப்பட்டேன் என்ற கதையினைச் சென்னார். ஆகவே, போதுமடா சாமி என்று கும்பிட்டுப் போய் விட்டார். நான் சிறைக்குள் 3 மாதங்களாக இருந்தபோது, பல புத்தகங்கள் படிக்க முடிந்தது. சிறைக்கைதிகளுடன் சேர்ந்து, சில கவிதை, கானாப்பாட்டுகளையும் எழுதினேன். நான் படித்த புத்தகங்களின் முக்கியமானவை ராபார்ட் சொகுல்லர் எழுதிய ‘சக்ஸ° இ° நெவர் எண்டிங், பெயிலியர் இ° நெவர் பைனல்’, ‘டப் டைம்° நெவர் லா°ட், பட் டப் பீப்பிள் டு’, கண்ணதாசன் எழுதிய ‘ரத்த புஷ்பங்கள்’, உமர் கயாம் கவிதைகள், நா.காமராசனின் ‘சந்தோக்கனவுகள்’ மூவேந்தரின் ‘சுடர் விளக்கு’, குமரி அனந்தனின் ‘கடவுளை நோக்கி’, டாக்டர் அழகுகண்ணனின் ‘சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்’ மற்றும் பல. அதிகாலை 41/2 மணிக்கு பெரியமேடு பள்ளி வாசல் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) சொன்னதும் எழுந்து, காலைத் தொழுகை (பஜ்ர்) முடித்து விட்டு, நாலு சுவர் ஜெயிலுக்குள் உடற்பயிற்சி, யோகாவும் செய்வேன். அதனை முடித்ததும் காலை சிறைக் கதவு ரோல்காலுக்காகத் திறக்கப்படும். மாலை வேளையில் பூப்பந்து மற்ற கைதிகளுடன் சேர்ந்து விளையாடுவேன். இப்படியாக 90 நாட்களும் வசிக்கும் இடமே வாழ்க்கையானது. ஆனால் எங்களைப் போன்ற சிறைவாசிகளின் குடும்ப வாழ்வு நரகமாகி விடுகிறது என்பது தான் உண்மை!




---------- Forwarded message ----------
From: Mohamed Ali
Date: Mon, Feb 23, 2009 at 10:58 AM
Subject: jail life
To: hidayath


Assalamu allaikum Mr. Hidayath.
I have attached the chapter about prison life written in my book on"Oru Kakki Chattai Pesugiradu" as per request. If the article is useful to our brethren you may circulate. Good day.


AP,Mohamed Ali

No comments: