Friday, May 1, 2009

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணம்.

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணம்.

ஐக்கிய அமீரகத்தின் வட மாகாணங்களில் ஒன்றாகவும், அமீரக கடல் மார்க்கத்தின் முதல் நுழைவு வாயிலாகவும், துபை நகரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் துரத்தில் இருக்கும் ஃபுஜைரா தற்போது அதிகமதிகமாக சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் உள்ளது.

மலைகள் சூழ்ந்த ஒரு ரம்மியமான இயற்கையான அழகு சூழ்நிலையில் ஃபுஜைரா மாகாணம் இருப்பதால் அதனை காண பல வெளிநாட்டு பயணிகள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். துபை நகருக்கு வரும் பல வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஃபுஜைரா செல்ல வேண்டும் என்று விரும்புவதால், அங்கிருந்து கனரக வாகனங்களிலும் மற்றும் மென்ரக வாகனங்களிலும் இங்கு வந்து போகிறார்கள். அவர்கள் அங்கிருந்து வரும் போதே மலைகள் சூழந்த ஃபுஜைராவின் அழகினை ரசித்துக்கொண்டே வருகிறார்கள்.

இங்குள்ள துறைமுகத்திற்கு வெளி நாட்டு பயணி கப்பல்கள் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அதிகம் வந்துக்கொண்டு இருக்கிறது என்பதினை துறைமுக பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். அத்துடன் இத்துறைமுகத்தின் அனைத்து பணிகளையும் செய்யும் பொறுப்பினை துபை துறைமுக பொறுப்பு கழகம் (Dubai Port Authority) பல ஆண்டுகள் என்ற ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகையால் கப்பல் வாணிபங்களும் அதிகரித்து விட்டது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஃபுஜைரா நகரின் மைய பகுதியில் பழங்கால அருட்காட்சியகமும் ஒன்றும், அதனை சுற்றி பழங்கால கோட்டை ஒன்றும் உள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் அரேபியர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய அரியபொருட்களும் மற்றும் அதனை பற்றிய தகவல்களும் உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல் அடங்கிய கையடக்க நூல் இங்கு உள்ளது. இந்த இடமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது.

ஃபுஜைரா - கொர்பகான் - திப்பா செல்லும் சாலை வழியில் "அல்பித்யா" என்ற கடற்கரை கிராமத்தில் கி.பி. 1446 வருடம் கட்டப்பட்ட புராதன பள்ளிவாசல் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளக்குகிறது. இந்த பள்ளி வாசல் கட்டப்பட்டு ஏறக்குறைய 562 வருடங்கள் ஆகி விட்டது என்பதினை அங்குள்ள துபை அரசாங்கத்தின் அகழ்வாராய்ச்சி கல்வெட்டானது நமக்கு தெரிகிறது. இப்பள்ளியினை அக்கிராமத்தில் வாழ்ந்த மீனவர்களின் முஸ்லிம் தலைவர் ஒருவர் தொழுகைக்காக கட்டியதாக இக்கிராமத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் தொழுவதற்கும் தனியாக வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதர மதத்தினர் அந்த பள்ளியின் புற பகுதியினை சுற்றி பார்க்கலாம். ஆனால் தொழுகை நடக்கும் இடத்திற்கு அனுமதி அளிப்பதில்லை. பள்ளியின் மற்றொரு புறத்தில் பழைமையான கோட்டையும் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல் ஏறி, அதன் துளைகள் வழியாக நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கலாம். அப்படி நாம் பார்க்கும் போது ஒரு பக்கம் கடலும், மற்றொரு பக்கம் மலைகளும், இன்னொரு பக்கம் இயற்கை நிலப்பரப்புகளையும் நாம் அழகாக ரசிக்கலாம். மற்றும் அதே பகுதியில் மலை அடிவாரத்திற்கு கீழ் நீரருவி ஒன்றும் மிக அழகாக உள்ளது. மலைக்கு அடியே இருப்பதால் அந்நீரானது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பல வெளிநாட்டினர் மற:றம் சுற்றுலா பயணிகள் வந்து அங்கு குளித்து விட்டு செல்கிறார்கள்.

அமீரகத்தின் மற்ற பகுதியிலிருந்து, கொர்பகான் கடற்கரை பகுதிக்கு மாலை நேரங்களில் பல குடும்பங்கள் சாப்பாடு செய்து சாப்பிடுவதற்கு வசதியாக பல சமையல் பொருட்களை கொண்டு வந்து விடுவார்கள். இவர்கள் இல்லம் திரும்பி செல்வதற்கு இரவு குறைந்தது 11 மணி ஆகிவிடும். அது வரை அவர்கள் அங்கு தான் குடும்பத்துடன் தங்கி ஜாலியாக இருப்பார்கள். கொர்பகான் பகுதியானது ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் கல்பா என்ற கடற்கரை பகுதியிலும் பல சுற்றுலா பயணிகள் வந்து போகிறார்கள். அதுவும் ஷார்ஜா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இருந்தாலும் இந்த சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் அனைத்து பயணிகளும் ஃபுஜைராவினை மாகாணத்தினை கடந்து தான் செல்ல வேண்டும். கல்பா - ஷார்ஜா தரை மார்க்கமாக செல்லும் பல பயணிகள் 30 கிலோ மீட்டர் சுரங்க வழி சாலைப்பாதையினையும் பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள்.

ஃபுஜைரா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் காளை மாட்டு சண்டையானது மிகவும் பிரபலமானது. இங்குள்ள அரேபியர்கள் வளர்க்கும் காளை மாட்டினை இங்கு கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சேர்ப்பார்கள். எந்த காளை மாடு பலம் வாய்ந்தாக இருக்கும் என்பதினை காளை மாட்டு சண்டையில் தெரிந்து விடும். அந்த மாட்டினை அதிகம் விலை கொடுத்து வாங்குவதற்கு மற்ற அரேபியர்கள் போட்டி போடுவார்கள். இதனை காண மற்ற நாடுகளிலிருந்து குறிப்பாக ஓமன், மஸ்கட் இங்கிருந்து பல பேர்கள் வருவார்கள். இதனை ஒலி ஒளி படம் எடுக்க பல வெளி நாட்டினர் வந்து விடுவார்கள்.

ஃபுஜைரா நகரானது, தற்போது துபை நகரில் கட்டப்பாட்டு வரும் பல அடுக்கு மாடி குடியிருப்பு கட்டங்களை போலவும், பல வசதிகளை கொண்ட வணிக வளாகங்களையும், உணவு விடுதிகளையும் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதினை பற்றி இங்குள்ளவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தகவல் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

No comments: