Sunday, April 18, 2010

டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(R)

டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(R)

கம்பீரம்” - காவல் துறையின் முக்கிய அடையாளம். இளையான்குடியில் பிறந்து காவல்துறையின் மிகமுக்கியமான உயர் பதவிகளில் பணியாற்றி, கம்பீரமாக வலம் வந்தவர் டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ். இவரைப் போல காவல் துறையில் சிகரத்தைத் தொட்டவர் நமது வட்டாரத்தில் இதுநாள் வரை எவரும் இல்லை.

ஏ.பீ. முகம்மது அலி அவர்கள் 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் நாள் பீர் முகம்மது அம்பலம் மற்றும் காதர்பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை பீர் முகம்மது அம்பலம் அவர்கள் மலேசியாவில் வணிகம் செய்து வந்தார்.

முஹம்மது அலி அவர்களின் பள்ளிப் படிப்பு இளையான்குடி மேல்நிலைப் பள்ளியிலேயே அமைந்தது. பள்ளி நாட்களில், 1961 முதல் 1964 வரை தொடர்ந்து என்.சி.சி.-யில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் சார்ஜண்டாக வலம் வந்தார். பின்னர், பி.யு.சி. படிப்பை சிவகங்கையிலும், இளங்கலை பட்டப்படிப்பினை சென்னை புதுக் கல்லூரியிலும் (1966 முதல் 1969 வரை), முதுகலை எம்.ஏ. பட்டப்படிப்பினை மாநிலக் கல்லூரியிலும் (1969 முதல் 1971 வரை) தொடர்ந்தார்.





சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும் போதே, கால்பந்து, கபடி, தடகளம் போன்ற விளையாட்டுக்களில் அதிக அக்கறை கொண்டவராய் கல்லூரி அணியில் அங்கம் வகித்தார். சங்கிலிக் குண்டு வீசுவதில் புதுக்கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பரிசுகள் பெற்றதோடு முன்னாள் துணைவேந்தர் ஏ.எல். முதலியார் சார்பாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியிலும் மாநிலக் கல்லூரி சார்பாக கலந்து கொண்டார். புதுக்கல்லூரி தமிழ் பேச்சுப்போட்டியிலும் 1969-ஆம் ஆண்டு கலந்து கொண்டு சிறப்புப் பரிசை மறைந்த பேராசிரியர் சினிபா கவிஞர் புகழ் ந.பாண்டுரங்கனிடம் பெற்றார். சென்னை மெரினா பீச் அருகிலுள்ள பல்கலைக் கழக விடுதி மாணவர் பொதுச் செயலாளராக 1970-ஆம் ஆண்டு பணியாற்றினார். மாநிலக் கல்லூரியின் ‘ஹூமானிட்டீஸ் அசோசியேசன்’ சேர்மனாக பணியாற்றியதோடு, மாநிலக்கல்லூரியில் இறுதி ஆண்டு எம்.ஏ. படிக்கும் போது தமிழ்நாடு சர்வீஸ் கமிசனின் டெபுடி-கலெக்டர், டி.எஸ்.பி.-களுக்கான தேர்வில் கலந்து கொண்டு எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், நேரடித்தேர்வில் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரிட்டது. இப்படி, தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தன்னை பல்வேறு துறைகளில் இணைத்துக் கொண்டு அவை அனைத்திலும் திறம்பட செயலாற்றினார்.

டி.எஸ்.பி.யாக மாறிய கல்லூரி விரிவுரையாளர்

பட்டம் பெற்றதும், தஞ்சை அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரியில் ஒரு விரிவுரையாளராகவே பணியில் சேர்ந்தார். தான் எடுத்துக் கொண்ட எந்தவொரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் பயணிப்பது இவரது வழக்கமாக இருந்து வந்தது. இவ்வேளையில், அதிராம்பட்டிணம் கல்லூரியில் பணியாற்றிய போதே, தனது விடா முயற்சியால் மும்முறை குரூப்-1 பரிட்சையினைத் தொடர்ந்து எழுதி பின்பு நேரடித் தேர்வில் டி.எஸ்.பி.-யாக 1974-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். மூன்றாண்கள் ஆற்றிய பேராசிரியர் பதவியை முடித்துக் கொண்டு, மதுரை, சென்னை, கோவை மாநகர்களில் டி.எஸ்.பி. பதவியைத் தொடர்ந்தார். பின்னர், தூத்துக்குடி, சேலம், தர்மபுரி போன்ற சென்சிடிவான ஊர்களில் எஸ்.பி.-யாகவும், சென்னையில் சட்டம்-ஒழுங்கு டி.சி.-யாகவும், விழுப்புரத்தில் டி..ஐ..ஜி.-யாகவும் காவல் துறையின் மிடுக்கான உயர்பதவிகளில் பணியாற்றினார்.




அதிரடி நாயகன்

1988ஆம் ஆண்டு தர்மபரி எஸ்.பியாக இருந்தபோது மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகம் முழுவதும் விஜயம் செய்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.



தென் மாவட்டங்களான மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஜாதிக் கலவரங்கள் நடந்தன. 1989 மதுரை போடி-தேனி பகுதிகளில் ,1996 ஆம் ஆண்டு ராஜபாளையம்-தாழையூத்து பகுதிகளில் தேவர்-தலித் கலவரத்தின் போதும்-தூத்துக்குடியில் நாடார்-மீன் பரவர் (பெர்ணான்டோ) கலவரத்தின் போதும், 1998-ஆம் ஆண்டு ராமநாதபுரம்-ஆர்.எஸ்.மங்கலம்-திருப்புலானியுலும் தேவர்-தலித் கலவரங்கள் நடந்தபோதும்அதனை எதிர்கொண்டு அடக்குவதிற்காக சென்னையிலிருந்து ஸ்பெஷலாக அனுப்பப்பட்டார். 2000ஆம் ஆண்டு விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வன்னியர்-தலித் கலவரத்தின் போது அதனை அடக்குவதிற்காக விழுப்புரம் ரேஞ்ச் டி.ஐ.ஜி.-யாக 2000ஆம் ஆண்டு பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி அதன்மூலம் 2000-ஆம் ஆண்டு சிறந்த பணிக்கான ஜனாதிபதி போலிஸ் மெடலும் பெற்றவர்.




2001 முதல் 2004-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி டி.ஐ.ஜி.யாக பணியாற்றி புகழ்பெற்றார். 2001-ஆம் ஆண்டு சென்னையில் ஒன்பது மேம்பாலங்கள் கட்டியது சம்பந்தமாக வழக்கில் தற்போதைய முதல்வரை கைது செய்ததின் பேரில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு, பின்பு முத்திரைத்தாள் மோசடி வழக்கிலும் சேர்க்கப்பட்டு நீதிமன்ற வழக்கினை சந்தித்துக் கொண்டுள்ளார். வழக்கினுக்கூடே மனந்தளராது 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் போலீஸ் சமுதாய சேவையினை பற்றி ஆராய்ச்சி செய்து அதன் பலனாக சென்னை பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் மேதகு தமிழக கவர்னரால் இவருக்கு வழங்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு ஜூன் 30ந்தேதி பணியில் ஓய்வு பெற்றார்.




இவர் தன் ஆராய்ச்சி நூலையும், ‘ஒரு காக்கிச் சட்டை பேசுகிறது” என்ற தமிழ் நூலையும், ‘எ கிளாரியன் கால் பை எ போலீஸ் ஆபீஸர்’ என்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். தனது ஓய்வு காலத்தை வீணடிக்காது, சமுதாய பிரச்னைகள் சம்பந்தமாக சுமார் 30 கட்டுரைகளுக்கு மேல் எழுதி அவை யாவும் இஸ்லாமிய ஊடகங்கள், மின் அஞ்சல்களில் பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




இவருக்கு மிதார் ஜான் பேகம் என்ற மனைவியும், பைசல், சதக்கத்துல்லாஹ் என்ற ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் பொறியாளர்களாக வேலை பார்க்கும் மகன்களும் சமீம், பரிஜான் என்று வெளிநாட்டில் வாழும் மகள்களும் உள்ளனர்.

Thanks : http://www.ilayangudi.org/ily/e107_plugins/content/content.php?content.746

No comments: