Sunday, March 14, 2010

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

டாக்டர். மவ்லானா மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் பேக் ரப்பானி உமரி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். ஜாமியா தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற பிறகு 3 ஆண்டுகள் ரியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 ஆண்டுகள் அரபித்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நடத்தும் அரபி மொழி வகுப்புகள் குறித்து அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.

நீங்கள் நடத்தும் கோர்ஸ் பற்றி கூறுங்கள்.
நான் இந்த அரபி மொழிப் பாடத்தை நடத்த வேண்டுமென்பதற் காகவே ரியாத் சென்றேன். 1994 இல் 2 மாதத்தில் குர்ஆனைக் கற்போம் என்று ஆரம்பித்தேன். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகச் சரியாக சிறந்த உச்சரிப்புடன் குர்ஆனைக் கற்றனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் குர்ஆனைக் கற்றால் மட்டும் போதாது. அரபி மொழியினை முழுமையாக கற்க வேண்டுமென்ற ஆவல் மிளிர்ந்தது. அப்பொழுது அரபி மொழி சார்ந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் ரியாத் சென்று 3 வருடங்கள் இருந்து நானே சுயமாக ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கினேன். 2000- இல் 2 ஆண்டு அரபி மொழிப்பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அதில் 6 மாதங்கள் அரபி மொழிப் பயிற்சியும் 18 மாதங்கள் முழுமையான ஷரீஅத்தையும் கற்றுக் கொடுத்தேன். இதன்படி 6 ஆண்டுகள் மதரஸாவிலிருந்து எதனைக் கற்பார்களோ அதனை 2 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கிறேன்.
இப்பொழுது நீங்கள் நடத்தக்கூடிய இந்த வகுப்புகள் எத்தகைய கால அளவைக் கொண்டவை?
10 மாத கால அளவை கொண்டவை. அதாவது 10 மாதம் என்றால் வாரத்தில் 3 நாட்களில் தினம் 2 மணிநேரம் மட்டுமே இந்த வகுப்புகள். ஆக, ஒட்டுமொத்தமாக 250 மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்தக் கால அளவை இன்னமும் குறைக்கலாம்.
நீங்கள் எத்தனை இடங்களில் இது போன்ற வகுப்புகள் நடத்துகிறீர்கள்?
மொத்தம் மூன்று இடங்களில் இத்தகைய வகுப்புகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரத்தில் நடைபெறு கின்றன.
பயிற்றுமொழி எது?
பயிற்றுமொழி என்று தனியாக எந்த ஒரு மொழியினையும் வைப்ப தில்லை. ஏனென்றால் அரபி மொழி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்துகின்றேன். அரபிமொழியின் அடிப்படை வார்த்தைகளை மாணவர் களுக்கு மனனம் செய்யக் கற்றுக் கொடுத்து அந்த வார்த்தைகளின் அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அதற்குச் சரியான பதிலை அவர்களாகவே உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்திருக் கின்றோம். இலக்கிய வார்த்தைகள் இடம்பெறும்போது மாணவர்களைப் பொறுத்து தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய மொழியினை இடையிடையே இணைத்துக் கொள்கின்றோம். இதுவும் ஆரம்ப சில காலங்கள் மட்டுமே. மற்றபடி அனைத்தும் முழுமையாக அரபிமொழியில் நடத்தப் படுகிறது.
அயல்மொழி என்றாலே ஆங்கிலம் தான் என்று இருக்கும் போது அரபி மொழியினை கற்பதனால் ஏதேனும் பயன் உண்டா?
90 களில் நீங்கள் சொல்வதைப் போன்று இருந்தது. ஆனால், தமிழகத் தில் 90க்குப் பிறகு இஸ்லாமிய இயக்கங்களின் தாக்கம் அதிகரித்தது. முஸ்லிம் இளைஞர்களிடம் குர்ஆனைப் பொருளறிந்து கற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அரபி மொழி அதற்கு ஆணி வேராக இருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமியச் சட்டங்களையும் ஷரீஅத்தையும் முழுமையாக அறிய அரபி மொழி கட்டாயமாகிறது.
அரபி மொழி கற்பது மிகவும் கடினம் என்கிறார்களே, சரியா?
இது, முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். அரபி மொழி கற்பதற்கு மிக எளிமையானது. நாம் அரபியை 5 வேளைத் தொழுகை களில் அன்றாடம் கேட்கின்றோம். நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலி ருந்தே நாம் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கிறோம். இப்படி இருக்கும் போது அரபி மொழி என்பது மிகவும் எளிமையான மொழியாகும். அரபி மொழி அறிவியல் பூர்வமான மொழியும்கூட.
மொழி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றனவா?
நிச்சயமாக. ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இன்று உலகில் மூன்றில் ஒரு பகுதி அரபி பேசக் கூடியவர்களின் நாடுகளாக இருக்கின்றன. உங்களுக்கு அரபி தெரிந்தால் இத்தகைய நாடுகளில் உயர் பதவிகளுக்குச் செல்லவும் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் கூட அரபி மொழி கற்றவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக முஸ்லிம் தொழிலதிபர்களிடம், அறிஞர்களிடம், இயக்கங்களிடம் கல்வித்தாக்கம் அதிகரித்து இருக்கிறது. அல்- பஜ்ர் இண்டர்நேஷனல் ஸ்கூல், டாக்டர் ஜாகிர் நாயக் IRF இண்டர்நேஷனல் ஸ்கூல், ஐ- மேக்ஸ் ஸ்கூல், ஆலிவ் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குட்வேர்ட் இண்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற பல கல்விக்கூடங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் அரபி மொழி கற்றால் ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் மாணவர்கள் பயனடைகிறார்களா?
அரபி மொழி கற்றால் மாணவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அவர்களின் இம்மை வாழ்க்கை மட்டுமன்று மறுமை வாழ்க்கையும் ஒளிமயமாய் இருக்கும். அவர்கள் அரபி மொழி கற்றால் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து தங்களுடைய வாழ்வைச் செம்மைப்படுத்த மிகவும் உதவும்.
அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பல மொழிகள் தோன்றிய காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படி இன்றில்லை.செம்மொழிகளான ஹீப்ரு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று வழக்கத்தில் இல்லை. பல மொழிகள் கடந்த 100 ஆண்டுகளில் பல மாறுதலுக்கு உள்ளாகி யுள்ளன. அரபி மொழியோ நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எப்படி எழுதப்பட்டு இருந்ததோ அதே போன்றுதான் இன்றும் இருக்கிறது. அதே போன்று அரபி மொழியில் கலப்படம் இல்லை. நாம் தமிழில் பேசும் போது ஆங்கிலத்தையும் கலக்கிறோம் அல்லவா ….? அரபி மொழி அப்படி இல்லை. எதனைச் சொன்னாலும் அரபி மொழியில் தான் சொல்லப்படுகிறது. ஆக அரபி மொழியில் எத்தகைய இடைச் செருகலும் ஏற்படாதது அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடாகும்.
தமிழ் மொழிக்கும் அரபிக்கும் உள்ள மொழியியல் ரீதியான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்?
மிக அழகான கேள்வியைக் கேட்டீர்கள். ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் அடிப்படையில் 3 ஒற்றுமைகள் இருக்கும். 1.ஒலி (Sound), 2.எழுத்து முறை (Writting), 3. மொழியியல் குடும்பம் (Language Relationship) குர்ஸி, மஸ்ஜித், இமாம், இக்ஸான் இத்தகைய வார்த்தைகள் அரபியிலும் உருதுவிலும் ஒரே மாதிரியாக வரும். இவை ஒலியியல் தொடர்பானவை. பார்ஸி,உருது,அரபி இவை மூன்றுக்கும் எழுத்தியல் தொடர்பு இருக்கும். இவற்றிற்கு ஒரே மாதிரியான எழுத்து வடிவம் இருக்கும்.
மொழியியல் குடும்பம் என்பது வேறு. தமிழ் மொழியை திராவிட மொழி என்கிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவை 4 மொழிகளும் ஒரே குடும்பவியல் மொழிகள். அதே போன்று உருது, பார்ஸி, பஞ்சாபி ஆகியன ஒரே குடும்ப மொழிகள். ஹிந்தி, சமஸ் கிருதம், பெங்காலி, மராத்தி ஆகியன ஒரே குடும்ப மொழிகள்.
ஆனால் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரபி மொழி அவர் களிடம் ஒலியியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்படியென்றால் அவர்கள் சிறுவயதிலிருந்தே குர்ஆனை ஓதுகிறார்கள். தொழுகையில் அரபியைக் கேட்கிறார்கள்; ஓதுகிறார்கள். ஒருவருக்கொருவர் சலாம் கூறுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் இத்தகைய வார்த்தைகள் நாம் அடிக்கடி கூறுவதால் அரபி மொழி ஒலியியல் தொடர்பை ஏற்படுத்துகிறது.
சந்திப்பு : M. முகம்மது கெளஸ்
தொகுப்பு : H. தில்ஷாத் கெளஸ்
நன்றி : சமரசம் ( 16 – 31 மே 2009 )

No comments: